மீண்டும் அடிக்கும் மழை.. சும்மா பிச்சு உதற போகுது.! மேற்கு தமிழகத்திற்கு வானிலை மையம் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை கணிசமாகக் குறைந்திருந்தது. இதனால் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்தச் சூழலில் மாநிலத்தில் மீண்டும் மெல்ல மழை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே மழை ஓரளவுக்குக் குறைந்தே இருந்தது. இதனால் மாநிலத்தில் மெல்ல வெப்பம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக மாலை நேரங்களில் பெய்த மழை வெப்பத்தை ஓரளவுக்குத் தணிக்க உதவியது.

வானிலை மையம்
வரும் நாட்களில் நிலவும் கிளைமேட் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் (ஜூலை 13) நாளையும் (ஜூலை 14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை இருக்கு
வரும் ஜூலை 15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 17, 18 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை வரும் ஜூலை 14 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 ° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை (13-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழகக் கடலோரப்பகுதிகளில் வரும் ஜூலை 16 வரை தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகள் ஜூலை 16 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் தெற்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications