Cyclone Dana: வங்கக் கடலில் மிரட்டும் டானா புயலுக்கு அர்த்தம் என்ன? எந்த நாடு பெயர் வைத்தது?
சென்னை: வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி டானா புயல் உருவாகிறது. இந்த நிலையில் இந்த புயல் தமிழகத்திற்கோ சென்னைக்கோ பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் இந்த புயலுக்கு டானா என பெயரிட்டது யார் என்பதையும் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயலாக உருவாகும் என தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

அக்டோபர் மாதம் உருவாகும் இந்த புயல் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு புயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த வகையில் டானா புயலுக்கு என்ன அர்த்தம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த புயலுக்கு கத்தார் நாடு பெயரிட்டது. அது போல் இது ஒடிஸாவில் கரையை கடக்கவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த புயலால் தமிழகத்தில் ஓரளவுக்கு மட்டுமே பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. டானா என்றால் காற்று என்று அர்த்தம். எனவே இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ., வரை காற்று வீசும்.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.10.2024 மற்றும் 23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications