வங்க கடலோர மாவட்டங்களில் மாறும் வானிலை.. அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியம்! வெதர் அப்டேட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் மழை பெய்து வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது. இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கனமழை தலைதூக்கியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, அடுத்த வரும் 24 மணி நேரத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என கூறியிருந்தது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர சென்னை, வேலூர், ராணிப்பேட்டை தொடங்கி தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே தாழ்வான பகுதிகள், நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications