திருநெல்வேலியில் நீடிக்கும் அதி கனமழை நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் காப்பாரா? மக்கள் வேண்டுதல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: அதி கனமழையானது இன்றிரவு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையை நிறுத்த நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்தான் மனது வைக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட மக்கள் வேண்டுதல் வைத்துள்ளனர்.

வரலாறு காணாத அளவிற்கு பெருமழை பெய்து வருவதால் கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது திருநெல்வேலி. கனமழையால் சாலைகள் முழுவதும் ஆறுகளாக மாறியுள்ளன. பாலங்கள் உடைந்து உருக்குலைந்து போயுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் திருநெல்வேலிக்கு விரைந்துள்ளனர்.

Will the continuous heavy rains in Tirunelveli People pray will protect Nellaiyappar

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். பெருவெள்ளத்தில் இருந்து நெல்லுக்கு வேலியிட்டு காத்தார் நெல்லையப்பர்.

முன்னொரு காலத்தில், சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் வேணுவனம் என அழைக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான், அவருக்கு வழங்கிய செல்வங்களைச் சிறிது சிறிதாகக் குறைந்து போகும்படி செய்தார்.

சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜைகளைச் செம்மையாகச் செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜைகளை நடத்தி வந்தார்.

Will the continuous heavy rains in Tirunelveli People pray will protect Nellaiyappar

ஒரு நாள் அவர் நைவேத்தியம் செய்வதற்குரிய நெல்லை, வெயிலில் காய வைத்து விட்டு, குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றுவிட்டார். அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அதனால் வேதபட்டர் வேதனையடைந்தார்.

திடீரென பெய்த மழையால் இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்குக் காய வைத்திருந்த நெல் மணிகள் நனைந்து விட்டால் என்ன செய்வது எனப் பதறினார். ஆனாலும் தாமிரபரணி நதியில் இருந்து எவ்வளவு வேகமாக ஓடிச் சென்றாலும் நெல் நனைவதைத் தடுக்க முடியாது.

அதனால் வருத்தம் அடைந்த அவர் சிவபெருமானை நினைத்தபடியே பதற்றத்துடன் கோயிலுக்கு ஓடி வந்தார். அங்கு சென்று பார்த்தபோது இறைவனின் திருவிளையாடலால் அவர் காய வைத்திருந்த நெல் மணிகள் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தன.

நெல் நனையாமல் இருந்ததைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பாண்டிய மன்னரான நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவனே வேலியிட்டுக் காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுவந்த ஊர், அதன் பின்னர் 'நெல்வேலி' என்று அழைக்கப்பட்டது.

இறைவனைப் போற்றும் வகையில் திருநெல்வேலி என அழைக்கப்பட்ட புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் ஆனி மாதத்தில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. நெல்லையில் காவலாக இருக்கும் நெல்லையப்பர்தான் தற்போது பெய்து வரும் பெருமழை வெள்ளத்தில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல திருநெல்வேலியில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணியில் பெருகிய வெள்ளநீரில் ஏராளமான மக்கள் அடித்துச்செல்லப்பட்டனர். பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

1992ஆம் ஆண்டு திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.

சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.

இதுபோன்ற வெள்ளம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளபோதும், அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாட்டை ஆண்ட அரசு மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 1992ஆம் ஆண்டை விட அதிபயங்கர மழை தற்போது பெய்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருக்கெடுத்துள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே உள்ளது.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் அதிகமாக திறக்கப்பட்டது. மழை வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி, டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Will the continuous heavy rains in Tirunelveli People pray will protect Nellaiyappar

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிமிரப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது போல தென் மாவட்டங்களிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், குடியிருப்பகள் கட்டப்பட்டுள்ளன. சென்னையை போல மதுரையும் வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டுமா? என்று சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இப்போது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் பெருமழையால் வீடுகளுக்குள் ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் முடங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் முழுவதும் வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளனர். நகரமே ஸ்தம்பித்து போயுள்ளது.

காற்றழுத்த சுழற்சி அதே பகுதியில் நீடிப்பதால் இன்றிரவு 8.30 மணி வரைக்கும் அதிகனமழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து கனமழை நீடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்தான் தங்களை காக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. மக்களின் வேண்டுதலுக்கு நெல்லையப்பர் செவிசாய்ப்பாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+