சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களே! சன்னிதானத்தில் வெளுக்கும் மழை.. ‘இதை’ கண்டிப்பாக மறக்காதீங்க!
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மழைக் கோட்டு, குடை உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையுடன் வரும்படி தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மழையை எதிர்கொள்ள தயாரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஆறு மணிக்கு பூஜைக்கு பின் அந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சத்திரம் பகுதியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் மட்டும் இல்லாது, புதிதாக மாலை அணிந்த கன்னி சாமிகளும் ஐயப்பனை தரிசிக்க இந்த ஆண்டு கூடுதலாக படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் சபரிமலை அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மழைக் கோட்டு, குடை உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையுடன் வரும்படி தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை பெய்யும் எனவும் சுமார் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுடன் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை பயணத்தின் போது அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்திருக்கும் நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications