அரசியல் ஆடுகளம் - இனி அடுத்து என்ன?
- மாணிக்கம் விஜயபானு
அமெரிக்கா. டெக்சாஸ். ஆஸ்டின் நகரிலிருந்து மாணிக்கம் விஜயபானு எழுதுவது.
கொரோனாவின் அகோர தாண்டவத்திற்கு இடையில், தமிழக தேர்தல் பெரிய வன்முறை எதுவும் இல்லாமல் ஒருவழியாக நடந்து முடிந்தது மட்டும் ஒரு சிறிய ஆறுதல்.
இனி அடுத்து என்ன? மே 2 முடிவுக்கு பிறகு, தமிழகத்தின் அரசியல் போக்கு எப்படி இருக்கும்? ஒரு ஆழப் பார்வை.
தேர்தலுக்கு முந்தைய, பல்வேறு விதமான ஊடக, பத்திரிக்கை கருத்து கணிப்புகள் ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவின் எதிரொலியை தனித்தனி கட்சிகளாக பார்ப்போம். மற்றபடி, இந்த கட்டுரை எந்த கட்சிக்கும் அல்லது தனிப்பட்ட நபருக்கும் எதிரான கருத்தோ, அல்லது ஒருதலை பட்சமாக எவருக்கும் ஆதரவு கரம் விடுப்பதோ அல்ல நம் நோக்கம்.

நேரடியாக ஒரு கேள்வி. நாம் தமிழர், மக்கள் நீதி மையம் மற்றும் அ.ம.மு.க, இதில் ஏதாவது ஒரு கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்ற முடியுமா? எல்லோரும் யூகிக்க முடிந்த விஷயம் தான். அவர்களின் களப்பணிகள், தேர்தல் அறிக்கைகள், கொள்கைகள், நடந்த அரசியல் நிகழ்வுகள், மக்கள் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பு கேள்விகளை காணொளி வாயிலாக, பத்திரிக்கை, ஊடகம் மூலம் கிடைக்கும் தரவுகள் வழியாக அலசும் போது, இந்தமுறை அது மிக மிக கடினம் என்று உறுதியாக சொல்லவே தோன்றுகிறது. அதேநேரம், குறிப்பாக மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் பங்களிப்பு இந்தமுறை, கிராமப்புற, நகர்ப்புற ஓட்டு வங்கியில் மக்கள் இதுவரை இருந்த மனநிலையில் இருந்து ஒரு மாற்றத்தையும், முக்கியமாக முதல் முறை வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு அதிர்வலையை கொண்டு வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இதில் தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளும் அடக்கம்.
சீமானின் திரும்பி கேட்க வைக்கும் பேச்சு, தமிழ்தேசிய கொள்கை, திராவிட மறுப்பு, இனப்பற்று, சமூக நீதி நிகழ்வுகளை, கேள்விகளை அழுத்தமாக கையாளும் முறை, என்று இருக்கும் அனைத்து தரவுகளை, மக்கள் என்ன ஓட்டத்தை அலசும் போது, நாம் தமிழர், வட / தென் தமிழக கிராமப்புறங்களில் 6-8% வாக்கு சதவிகிதம் பெற்று மேலும் ஒரு வலுவாக கட்சியாக வளரும் என்பதற்கு நிறைய இடம் உள்ளது. அதே போல , சீமான் வரும் வருடங்களில், தனி ஓரங்க அரசியல் என்ற நிலைப்பாட்டை மாற்றி, தமிழ் தேசியத்திற்கு,தமிழுக்கு முன்னுரிமை ஆதரவளிக்கும் நிலையில் உள்ள மேலும் சில சமூக கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி ஏற்படுத்த முயலலாம். குறிப்பாக, 2026 தேர்தலை கருத்தில் கொண்டு, தனித்தே பயணம் என்பதை இந்த தேர்தலோடு அவர் மறு பரிசீலனை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதே நேரம், நாம் தமிழர் வரப்போகும் அரசுக்கு, மற்றும் மத்திய ப.ஜ.க விற்கு தர்க்கரீதியான, சமூக எதிர்நோக்கு கேள்விகளால் ஆட்சியில் இருப்பவரை அழுத்தமாக கேட்டு கொண்டே இருக்கும்.
அடுத்து ம.நீ.மய்யம். கமலின் அரசியல் பற்றி, பல்வேறு வித எதிர் கருத்துக்கள், கேலிகள், கிண்டல்கள் இருந்தாலும், இந்த தேர்தலில் கமலின் சில அரசியல் அணுகுமுறைகளை கவனித்தே ஆக வேண்டும். முக்கியமாக, தேர்தல் விதிக்குட்பட்ட பரப்புரை செலவுகள், எளிமையான பிரச்சாரம், கிராமசபையை தூசுதட்டி எடுத்து முன்னிறுத்தியது, கட்சியை மட்டும் முன்னிலை படுத்தாமல் பொதுமக்களுடன் கலந்துரையாடி அதன் அவசியத்தை உணர்த்தியது நகர்ப்புறங்களில் நன்கு கவனிக்கபட்டது.
முக்கியமாக, அரசியலில் காலம் கண்ட அரசியல்வாதியாக ஒரே பார்வையில் பரப்புரை செய்யாமல், மக்களின் பிரதிநிதியாக, சாதாரணமாக பிரதிபலித்தது நகர இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது உண்மை. இதனால், நகர்ப்புற வாக்காளர்கள் ஓட்டு வங்கியில் ம.நீ.ம ஒரு மாற்றத்தை கொண்டுவர அதிக சாத்தியம் உள்ளது. குறிப்பாக, கோவை, மதுரை, திருச்சி, சென்னையின் சில தொகுதிகளில் ம.நீ.ம வளர்ச்சி இந்த தேர்தலில் பேசப்படும் அளவில் வளர்ந்து இருக்கும்.
அதே நேரம், வட / தென் மாவட்ட கிராமப்புறங்களில், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால், ஐம்பது வயது கடந்த கிராமப்புற மக்கள் மனதில், அரசியல்வாதி கமலும், ம.நீ.ம கட்சியாகவும் உள்நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் வெகு தூரம். இது தான் நிஜ நிலவரம். இதில் ஜல்லிபட்டியோ, ஓடையகுளமோ, நாங்குநேரியோ, கருப்பம்பட்டியோ, கிருஷ்ணகிரியோ, நாட்டரசன் கோட்டையோ, எந்த உள்ளடங்கிய கிராம வாக்காளர்கள் ஓட்டுகளும் அடக்கம். கமல் என்ற திரை ஆளுமை தவிர்த்து, ம.நீ.ம ஒரு கட்சியாக, கமல் ஒரு பொதுமக்கள் சேவகராக பயணிக்க, மக்கள் மனதில் இடம் பிடிக்க இன்னும் அதிக களப் பணி செய்ய வேண்டும். அவர்களின் அங்கீகாரம் என்ற இடத்தை பிடிக்க "நேர்மை" என்ற ஒரு வலிமையான அரண் மட்டும் போதுமானது அல்ல. அதையும் தாண்டிய ஒரு இறுக்கமான உறவு தேவைப்படுகிறது.
ஒருவேளை கமலின் அடுத்த நகர்வு, திட்டங்கள் இன்னும் அழுத்தமான இருக்கும் பட்சத்தில், தமிழக கிராம வாக்காளர்களை சென்று அடைவதே மக்கள் நீதி மையத்தின் ஒருமித்த பார்வையாக இருக்கலாம். அதற்கான கட்டமைப்புகளை ம.நீ.ம எப்படி கையாள போகிறது என்பதை வைத்தே அதன் அடுத்த பாய்ச்சலை அளக்க முடியும். மற்றபடி, தேர்தலுக்கு பின் பதவிக்கு வரும் அரசுக்கு, மக்களின் வரிப் பணத்திற்கும், பொதுச்சொத்துக்கு சேதம் உருவாக்கும் முரட்டுத்தனமான போராட்டங்களை உறுதியாக தவிர்த்து, சட்ட ரீதியாக, ஊடக வாயிலாக, நேர்காணல், காணொளி மூலம் ம.நீ.ம நிறைய எதிர்ப்புகளையும், குடைச்சல்களையும் கொடுத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வரும் அரசு ம.நீ.மய்யத்தின் நீதிமன்ற வாயிலான அணுகுமுறைகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முயலும். சரத்குமாரும் வேறு சில தோழமை கட்சிகளும் தேர்தல் முடிவுக்கு பின் பிரிந்து செல்லவே வாய்ப்புகள் அதிகம். அதே நேரம், ம.நீ.மய்யத்தின் வாக்கு சதவிகிதம் எதிர்பார்ப்பை விட அதிகமானால் அவர்கள் கூட்டணியை தொடரவே விரும்புவார்கள். அந்த தருணத்தில், ம.நீ.ம அந்த கட்சிகளுடன் இணக்கமாக இருக்க விரும்புமா என்பதே கேள்வி.
ஒருவேளை தி.மு.க வெற்றி பெற்றால், அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்ன?
திரு. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் மெல்ல பிரிவார்கள். ஆரம்பத்தில், இருவரும் வெளிப்படையாக பேச்சு தாக்குதல் செய்யாமல், கட்சிக்குள் அவர்கள் ஆதரவாளர்கள் மட்டத்தில் மட்டும் தெரிவதுபோல இது நடக்கும். இது ஓ.பி.எஸ் மூலமாக செவ்வனே துவங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் , சசிகலா, தினகரனுடன் பேச்சு வார்த்தையை மேலும் தொடருவார். இது கட்சிக்குள் கோஷ்டி பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை நன்கு தெரிந்தே ஓ.பி.எஸ் செய்ய முற்படலாம். அதற்கு சசிகலா பக்க பலமாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கலாம். ஒரு கட்டத்தில், அ.தி.மு.க மேலும் பிளந்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரண்டு அணியாக வெளிப்படையாக தெரியும் வகையில் உருவாகும். இந்த தருணத்தில், டெல்லியிலிருந்து வரும் அழுத்தம் காரணமாக, எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக மெதுவாக விடுபட வாய்ப்புகள் மிக அதிகம். இ.பி.எஸ் இதை எப்படி கையாள போகிறார் என்பது மட்டுமே இந்த போக்கை வேறு திசையில் மாற்ற முடியும். இந்த பிளவை சரியாக பயன்படுத்தி சில முக்கிய புள்ளிகளை தன பக்கம் இழுத்து அ.தி.மு.க வை மேலும் வலுவிழக்க வைக்க, தி.மு.க தனி குழு அமைத்து பயணிக்கும்.
ஒருவேளை, கட்சிக்குள் ஓ.பி.எஸ் வாய்ஸ் மேலுயர்ந்தால், அதன் கடைசி தருணம் வரை காத்திருந்து, தினகரன் அ.ம.மு.க வை - தாய் கழகத்தோடு இணைப்பதாக சொல்லி அ.தி.மு.க வுடன் இணைக்க முற்படலாம். அதற்கு பின்புலமாய், சசிகலாவுக்கு டெல்லி தரும் கடும் நெருக்கல்கள் காரணமாகும். எடப்பாடி ஆதரவாளர்கள் இந்த நகர்தல் கண்டு பிரிந்து ஓ.பி.எஸ் பக்கம் சாய்வார்கள். இ.பி.எஸ் தனித்து விடப்பட எல்லா வித வழிகளையும் ஓ.பி.எஸ் சத்தமே இல்லாமல் செய்து முடிப்பார். ஓ.பி.எஸ்ஸின் ஒரே குறி கட்சியை அவர் அதிகார வளையத்தில் கொண்டு வருவதாகவே மட்டுமே இருக்கும். இ.பி.எஸ் கட்சி பணியை தொடருவது எந்த நிலைப்பாட்டில் இருந்து என்பது அடுத்து மிக பெரிய கேள்வி குறி ஆகும். ஒருவேளை, இது நடந்தேறும் பட்சத்தில், அ.தி.மு.க வெளிப்படையாக, ப.ஜ.க முகத்தோடு, பல்வேறு வித பத்திரிக்கை, இணையதள வகுப்புவாத கேள்விகளுக்கு இடையில் நகர தொடங்கும். இந்த போக்கை அ.தி.மு.க எப்படி கையாளும் என்பதை பொறுத்து அதன் அடுத்த சரிவு மேலும் அங்கு பலமாக துவங்கும். பா.ம.க எப்பவும் போல ஏதாவதொரு காரணத்தை சொல்லி, கூட்டணியிலிருந்து வெளியேறி ப.ஜ.க வுடன் நேரடியாக கைகோர்க்கும்.
சரி. ஒருவேளை, அ.தி.மு.க வெற்றி பெற்றால்?
இ.பி.எஸ் கட்சிக்குள் மேலும் பலம் பொருந்திய தலைவராக வலம் வருவார். ஓ.பி.எஸ் பக்கம் இருக்கும் ஆதரவாளர்களை பெருமளவு இ.பி.எஸ் தன் பக்கம் கொண்டுவர எல்லா வித நடவடிக்கைகளும் வெளியே தெரியாமல், கட்சிக்குள் எல்லோருக்கும் தெரிந்து நடக்கும். ம.பா. பாண்டியராஜன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி போன்றவர்கள் கட்சிக்குள் எந்த ஆதரவு நிலைக்கும் யார் பக்கமும் சாய தயாராக இருப்பார்கள். வெளியே கொடுக்கும் அரசியல் பேட்டிகளுக்கும், கட்சிக்குள் நகர்த்தும் காய்களுக்கும் கொஞ்சம் கூட ஒற்றுமை இருக்காது. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வெளி பார்வைக்கு மட்டும் தங்கள் நட்பில் எந்த மாற்றமும் இல்லை என்பது போல நடந்து கொள்வார்கள். ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் , சசிகலா, தினகரனுடன் பேச்சு வார்த்தையை மேலும் தொடர்ந்தே இருப்பார். ஓ.பி.எஸ்ஸின் ஒரே குறி கட்சியை அவர் வளையத்தில் கொண்டு வருவதாகவே கடைசி வரை இருக்கும். ஆனால், இ.பி.எஸ் டெல்லி ஆதரவுடன் பலமடங்கு தன் பலத்தை பெருக்கி கொள்வார். இதனால் ஓ.பி.எஸ் வேறு வழியின்றி இருக்கும் துணை முதல்வர் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டே பயணிக்க நேரிடும். அ.தி.மு.க வில், ப.ஜ.க வின் தலையீடு மேலும் அதிகரிக்கும்.
சரி. பொது மக்களின் நிலை என்ன?
ஒரு புள்ளி விவரம் பார்ப்போம். இந்த தேர்தலில் பறக்கும் படை வெளிப்படையாக பிடித்த பணம் கிட்டத்தட்ட 1000 கோடி. இத்தனை தேர்தல் கட்டுப்பாடு, கொரோனா, ஊடகம், சமூக வலை, கேமரா, பத்திரிக்கை இருந்தும் இது தான் அவல நிலை. தேர்தல் களத்திற்கு இந்த பணத்தை விதைத்தவர்கள் விடுவார்களா? அறுவடை நாளுக்கு மட்டுமே..அவர்கள் காத்திருப்பு.! முதல் ஒரு வருடம் எல்லாம் சரியான பாதையில் பயணிப்பது போல தெரிந்தாலும் விரைவில் கானல் நீராகும்.
ஒன்றை நன்கு நினைவில் வைப்போம். தகவல் அறியும் சட்டம் மூலம் ஒரு சாதாரண பாமரன் அவன் வரிப்பணத்தின் செலவு பற்றி அரசை கேள்வி கேட்காத வரை, வரப்போகும் எந்த அரசிலும் பதவி என்பது, பணத்தின் மீது படுத்து உருளும் ராஜ போக வாழ்க்கை என்று நினைக்க மட்டுமே இங்கு பலர் இருக்க போகிறார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் இதுதான் அவல நிலை. அவர்களின் ஒரே வேலை. அறுவடை செய்தல். இதற்கு, கைநிறைய உண்மைகளை மத்திய, மாநில பல ஆட்சிகளில் நாம் கசப்பாய் கடந்து வந்து உள்ளோம். எல்லா கட்சிகளிலும் சில நல்லவர்கள் இருந்தாலும், அவர்களின் உண்மை குரல், முக்கூடல் ஆற்று வெள்ளப் பெருக்கில் அடித்து செல்வது போல இந்த அறுவடை கூட்டத்தில் விலாசமற்று மறையும். இந்த போக்கை அடித்து, துவைத்து நிவர்த்தி செய்வதற்கு முதலில் நல்ல தலைமை தேவை.
உங்கள் ஊர் பஞ்சாயத்தோ, நகராட்சியோ, பேரூராட்சியோ, நகரமோ எதுவாக இருப்பினும், பொதுமக்களாக நமக்கு மிகப்பெரிய சமூக கடமை இருக்கிறது.
உதாரணத்திற்கு, கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில், தார்சாலை விரிவாக்கம், சாலையில் நடு பிரிவு கட்டுமானம், பாதாள சாக்கடை, ஊர் குளம், ஊரணி, ஆறு தூர்வாருதல், கரை கட்டுதல், பாலம் கட்டுதல், சாலை விளக்கு போடுதல், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்துதல் என்று காலம் காலமாக எந்த ஆட்சியிலும் நிறைவேறாமல் இருக்கும் தேவைகளை ஒரு நீண்ட வரிசையில் எழுதி, வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் துவங்கும் இந்த அறுவடை. நமக்கு இருக்கும் தினப்படி பிரச்சனையில், 99 சதவிகித பொதுமக்கள் இதை பற்றி கவலைப்பட போவதில்லை. இதுபோன்ற விரிவாக்க,மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் மராமத்து தொகை எவ்வளவு, எப்படி செலவாகிறது, யாருக்கு டெண்டர் போகிறது, என்ன காரணத்தில் செய்து முடிக்காமல் இருக்கிறது, போன்ற அடிப்படை குறிப்புகளை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிந்து கொள்ள ஓட்டளிக்கும் நமக்கு உரிமை உள்ளது. எத்தனை பேர் இதை கேட்போம் என்பதே பெரிய கேள்வி.
மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரி, தொலைபேசி, இனையவழி சேவை கட்டணம், என மாதம் தவணை மாறாமல் எப்படி அரசு வீட்டுக்கே ரசீது அனுப்பி வரி வசூலிக்கிறார்களோ, அதே போல, மேல் சொன்ன உங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களின் நிதி அறிக்கை, செயல்பாடு, தற்போதுள்ள தடைகள் என்று எதுவும், வெளிப்படையாக இதுவரை ஆண்ட எந்த அரசும் மக்களுக்கு அனுப்பி தெரியபடுத்துவதில்லை. பத்திரிக்கை, அல்லது ஏதோ ஒரு ஊடகம் வாயிலாக ஒரு சிறு குறிப்பாக எங்கோ ஒரு மூலையில் சொல்லப்பட்டு நாம் யாரும் காணாமலேயே அந்த நாளோடு அது கரைந்து போகும். அவர்களின் தேவையும் அது தானே.
அதிகார அத்துமீறல், தவறு, அரசு செயல்முறை கோளாறு நடக்கும் போது, சமூகத்துக்காக, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குரலும் உரத்து ஒலிக்க தவறினால், நிர்வாகத்தில் தவறு செய்வதற்கும், அறுவடையை ஆனந்தமாக துவங்குவதற்குமான கதவு, அதன் திறவுகோலுடன் நாளை பதவியில் பரவசம் அடைபவர்களிடமே உள்ளது. அதற்கு உரிமை கொடுத்தவர்கள் யாரோ அல்ல. நாம் மட்டுமே.
கருப்பு மை விரலை உற்று பாருங்கள். அரசை கேள்வி கேட்கும் துணிவு இருக்கிறதா உங்களிடம்? விழித்திரு தமிழா.!
யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
கட்டுரை: மாணிக்கம் விஜயபானு












Click it and Unblock the Notifications