அரசியலில் செல்லாக்காசாக்க நடக்கும் 'மேலிட சதி.." ஆர்எஸ்எஸ் துணையோடு முறியடித்த யோகி ஆதித்யநாத்!
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சட்டசபை தொகுதியில் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாக இடைவிடாமல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது யோகி ஆதித்யநாத் தமது கோட்டையான கோரக்பூர் தொகுதியில்தான் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தை அரசியல் களத்தில் வீழ்த்தும் சதிநோக்கத்துடன்தான் பாஜகவின் டாப் லெவல் சதி கோஷ்டியினர் அயோத்தியில் அவர் போட்டியிடுகிறார் என்கிற செய்தியை திட்டமிட்டே பரப்பி இருப்பதாக மூத்த அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்பது அரசியல் தோன்றிய காலந்தொட்டு நிலையானதாகவே இருக்கிறது. மன்னராட்சியோ, மக்களாட்சியோ, புரட்சிகர ஆட்சிகளோ மனசாட்சிகளே இல்லாமல் குழிபறிப்புகள், நயவஞ்சகங்கள், துரோகங்கள் ஆகியவை அரசியல் வெற்றியின் அஸ்திவாரமாகவே ஆகிவிட்டன.
இன்றைய ஜனநாயக அரசியலில் எவரும் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல என்பதை பட்டவர்த்தமானவே அம்பலப்படுத்துகிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம். உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்பாக இரு விதமான செய்திகள் கடந்த சில மாதங்களாக வலம் வந்தன.

அயோத்தி தொகுதியும் யோகியும்
அதில் ஒன்று, சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவாரா? என்கிற சந்தேக கேள்வி. இன்னொன்று தமது கோட்டையான கோரக்பூர் தொகுதியைவிட்டு அயோத்தி தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது. எம்.எல்.சி. பதவியில் இருப்பதால் யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டார் என கூறப்பட்டது. இதனைவிட அயோத்தியில் போட்டியிடுவார் என்பது தொடர்பாக வெளியான செய்திகளே மிக முக்கியமானவை.
டிவி சேனல்கள், பத்திரிகைகள் என பலவற்றிலும் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருந்தது யோகி ஆதித்யநாத், அயோத்தியில் போட்டியிடக் கூடும் என்பதுதான். இதற்காக சிறப்பு தூதரை அயோத்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார்; தேர்தலில் போட்டியிடுவதற்காக ரகசிய வேலைகளை எல்லாம் தொடங்கிவிட்டார் என்றெல்லாம் அந்த செய்திகள் சொல்லின. இன்னும் ஒருபடி மேலே போய் அயோத்திக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கடி செல்வதன் பின்னணியே அங்கே தேர்தலில் போட்டியிடுவதற்காக என அரிய கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்துவிட்டதும் உண்டு. அதனாலேயே சிறப்பு நிகழ்வாக தீபாவாளியை அயோத்தியில் கொண்டாடினார்; இளைஞர்களுக்கு பூத் ஏஜெண்டுகளுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுத்தார் என இன்னொரு அகழாய்வு கண்டுபிடிப்பையும் அந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி இருந்தன.
இத்தனை செய்திகளும் உண்மையாக இருந்திருந்தால் பாஜகவின் வருங்கால தலைவர் முகமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வரும் யோகி ஆதித்யநாத் எனும் அடுத்த ஆளுமை இந்துத்துவவாதிகளின் புனித தலமான அயோத்தி தேர்தல் களத்திலேயே வீழ்த்தப்பட்டிருப்பார் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இப்படி யோகி ஆதித்யநாத் களத்தில் வீழ்த்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாஜகவின் டாப் லெவல் சதி கோஷ்டியினர்தான் அயோத்தி-யோகி கனெக்சன் செய்திகளின் கர்த்தாக்கள். உண்மையில் கோரக்பூர் தொகுதி என்பது யோகி ஆதித்யநாத்தின் கோட்டைதானா? அங்கே என்ன களநிலவரம் என்பதை பாருங்கள்.
கோரக்பூரும் யோகி ஆதித்யநாத்தும்
யோகி ஆதித்யநாத் என்பவர் ஒரு ஜஸ்ட் லைக் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு இந்து மதத் தலைவர்களில் ஒருவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இளம் வயதிலேயே சன்னியாசம் பெற்றவர். கோரக்பூர் மடாதிபதியாக இருந்தவர் மகந்த் அவத்யநாத் 2014-ல் மறைந்தார். அதன் பின்னர் கோரக்பூர் மடாதிபதியாக உருவெடுத்தவர் யோகி ஆதித்யநாத்.
கோரக்பூர் கோவில் ஒன்றும் சாதாரணமானதும் அல்ல. அது ஒரு தத்துவம் சார்ந்த, சித்தாந்தம் சாந்ந்த கோவில். மத்ஸ்யேந்திரநாத்தின் நாத் சம்ப்ரதாய எனும் பாரம்பரியத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது கோரக்பூர். கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்து பசு பாதுகாப்புக்கான புகலிடமாக திகழ்கிறது. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கக் கூடிய, மதம் சார் பிளவுகளை எதிர்க்கக் கூடிய சித்தாந்தத்தைக் கொண்டது கோரக்பூர். பிராமணிய கேடுகளை குருநானக் கடுமையாக எதிர்த்தார். பெரும் எண்ணிக்கையிலான தலித்துகள், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் நாத் சம்ப்ரதாயாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கோரக்பூரின் அரசியல் எங்கிருந்து தொடங்குகிறது எனில் 1937-ம் ஆண்டு முதல். அப்போது மடாதிபதியாக இருந்த மகந்த் திக்விஜய்நாத், இந்து மகாசபாவில் இணைகிறார். 1949-ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகளை உள்ளே வைத்த சர்ச்சையில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மகந்த் திக்விஜய். இங்கிருந்தே முஸ்லிம் எதிர்ப்பும் வேர்பிடிக்கிறது. திக்விஜய்-க்குப் பிறகு மகந்த் அவைத்யநாத், யோகி ஆதித்யநாத்தின் குருநாதர், ராமர் கோவில் இயக்கத்தில் பிரதானமான பங்களிப்பு செய்தவர். இப்போது யோகி ஆதித்யநாத் இதனை தொடர்ந்து பின்பற்றுகிறார்.
கோரக்பூர் தொகுதிதான் யோகி ஆதித்யநாத்தின் ஆத்மபலம். கோரக்பூர் இல்லாமல் போனால் யோகி ஆதித்யநாத் இல்லை. ஒரு அரசியல் பாரம்பரியம் கொண்டவர்; தொடர்ச்சியாக தேர்தல்களில் வென்றவர்; உ.பி. முதல்வராக இருந்தவர் என்பதற்காக யோகி ஆதித்யநாத்தை வருங்கால பாஜக முகமாக ஆர்.எஸ்.எஸ். பார்க்காது. இந்துத்துவ சித்தாத்தங்களில் ஆழப்புதைந்து கிடக்கிற கோரக்பூர் மடாதிபதி என்பதால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். இப்போதும் யோகி ஆதித்யநாத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்துக்கு கை கொடுக்காது என்று சொல்பவர்களும் உண்டு.
1991-ம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாகத்தான் கோரக்பூர் இருந்து வருகிறது. கோரக்பூர் நகர்ப்புற சட்டசபை தொகுதிதான் யோகி ஆதித்யநாத்தை எளிதாக வெல வைக்கக் கூடிய தொகுதி என்பதை யோகி ஆதித்யநாத் நன்றாகவே அறிவார்.
பாஜகவில் அரண்மனை சதி
இப்படியான ஆர்.எஸ்.எஸ்.-ன் வலிமையான ஆதரவு கொண்ட யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக என்ன சதி நடந்தது? இது ஏ.கே.ஷர்மா எனும் அதிகாரிக் களமிறக்கப்பட்ட காலம் முதல் அயோத்தியில் போட்டியிடுகிறார் என்கிற செய்தியை கிளப்பிட்டதுவரை வரையிலான நீண்ட வரலாறு. ஏ.கே.ஷர்மாவை ஆதித்யநாத்துக்கு கடிவாளம் போட பாஜகவின் டாப் லெவல் தலைவர்கள்தான் அனுப்பி வைத்தனர். அவருக்கு துணை முதல்வர் பதவி, கட்சியில் மிக முக்கிய பதவி எல்லாம் யோகி தந்தாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தனர். ஆனால் எதனையுமே கண்டுகொள்ளாமல் யோகி ஆர்.கே.ஷர்மாவை வாரணாசி லோக்சபா தொகுதிக்குள்ளேயே முடக்கி வைத்தார். இதன்பின்னணியில் இருந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். யோகி ஆதித்யநாத், பாஜக மேலிட தலைவர்களால் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் லக்னோவுக்கு பறந்து வந்து அவருக்கு பக்கபலமாய் நின்றனர். ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை மீறி அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனது.
ஒருகட்டத்தில் ஓபிசி வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமானால் யோகி ஆதித்யநாத், முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற லாபியும் தீவிரமாக நடந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். எனும் கேடயம் யோகி ஆதித்யநாத்தை அப்போதும் இப்போதும் பாதுகாத்து வருகிறது. அந்த பாஜக டெல்லி தலைவர்களின் அதாவது பாஜக எனும் அரண்மனைக்குள் நிகழ்ந்த சதித் திட்டத்தில் ஒன்றுதான் கடைசி ஆயுதமான யோகியை அயோத்தி தொகுதிக்கு அனுப்பி வீழ்த்துவது என்பது. அதனையும் ஆர்.எஸ்.எஸ். துணையுடன் முறியடித்துவிட்டு கோட்டையான கோரக்பூரிலேயே போட்டியிடுகிறார் யோகி ஆதித்யநாத். சட்டசபை தேர்தலில் பாஜக வென்றாலும் கூட இந்த அரண்மனை சதியாளர்கள், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிச்சயம் காய் நகர்த்துவார்கள்.. அதனையும் ஆர்.எஸ்.எஸ். துணையுடன் முறியடித்துவிடுவார் என்கின்றனர் கோரக்பூர் பக்தர்கள். காத்திருப்போம்!
(என்.டி.டி.வி இணையப் பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் அசுதோஸ் எழுதிய ஆங்கில கட்டுரையின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டது)












Click it and Unblock the Notifications