Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டுப் பதக்கத்தையும் விடாமல் துரத்தும் சாதியம்- அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

எளிய மக்கள் உருவாக்கிய ஆழ்ந்த பொருளுள்ள ஒரு சொலவடை: "மூக்கு இருக்கிற வரையில் சளி இருக்கும்." அதே போல், சமூகம் இருக்கிற வரையில் சாதியம் இருக்கும் எனலாம். மூக்காவது உயிர்ச்செயலாகிய சுவாசத்திற்கான வழியாக இருக்கிறது. சாதியம் அப்படியான பயனுள்ள செயலைச் செய்கிறதா?

சமூகத்திற்கான வேலைகளைப் பிரித்துக்கொள்கிற அடிப்படையில்தான் சாதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது என்று வர்ணாஸ்ரம சித்தாந்தத்திற்கு விளக்கமளிக்கும் வாதங்கள் ஒருபகுதியினரால் முன்வைக்கப்படுகின்றன. தீண்டாமைக் கொடுமையை எதிர்த்த காந்தி போன்றவர்களும் இந்த வர்ணப் பிரிவினையை இப்படிப்பட்ட விளக்கங்களோடு ஏற்றிருக்கிறார்கள். சமுதாயமாக உருவெடுக்கிறபோது அந்த வளர்ச்சிக்குத் தேவையான தொழில்களைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக இவ்வாறு வகுக்கப்பட்டது அன்றைய சமூக அறிவின் மேன்மையைக் காட்டுகிறது என்கிறார்கள். சமூக வேலைப்பிரிவினையில் தவறு இல்லை, ஆனால் அதிலே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டதுதான் தவறு என்று, சாதியத்தின் கொடுமைகளை ஒரேயடியாக மறுக்கமாட்டாமல் ஒப்புக்கொள்கிறவர்களும் உண்டு. சளியைத்தான் அகற்ற வேண்டுமேயல்லாமல் நுரையீரலை அகற்றிவிட முடியாது, ஏற்றத்தாழ்வைத்தான் மாற்ற வேண்டுமேயல்லாமல் சமூக ஏற்பாட்டை ஒழித்துவிட முடியாது என்று அந்த விளக்கங்களுக்கான பின்னுரைகளும் எழுதப்படுகின்றன.

Writer Kumaresan aritcle on Sports and Caste

வேலைப் பிரிவினைதான் சாதி ஏற்பாடு என்றால், செய்கிற வேலையின் அடிப்படையில் அல்லாமல், பிறப்பின் அடிப்படையில் தலைமுறை தலைமுறைகளாக ஒரே வேலையைத்தான் செய்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது என்ன நியாயம் இருக்கிறது? அதிலும் கழிவகற்றம் உள்ளிட்ட வேலைகள் குறிப்பிட்ட சில சாதிகளுக்கென்றே ஒதுக்கப்பட்டது எப்படி, அதனாலேயே அந்தச் சாதிகள் தாழ்ந்தவையாக ஒடுக்கப்பட்டது எப்படி? வேலைப்பிரிவினைவாதிகளிடமிருந்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் வந்ததில்லை.

ஒன்று நிச்சயம் - மூக்கு இருக்கும் வரையில் சளி இருக்கும், அதே போல் சாதியம் இருக்கிறவரையில் அது பற்றிய வாத-எதிர்வாதங்களும் தொடரும். இது ஏதோ மூக்கு, சளி, சமூகம், சாதி என்று விளையாட்டாகப் பேசுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கருப்பொருளல்ல. தனிமனிதர் உடல்நலத்திற்கும் சமூக ஆரோக்கியத்திற்கும் அடையாளமாகிய விளையாட்டுக் களத்திலேயே கோரமான முள்களாக வளர்ந்திருக்கிற சாதிப்பார்வை பற்றிய செய்தியால் வந்த சிந்தனைதான்.

மரபணுவில் சாதி

உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளிலும், ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவிலான தடங்களிலும் சாதனை நிகழ்த்திப் பதக்கங்களோடு வருகிறவர்களை நாடு கொண்டாடுகிறது. பெண்ணாக இருந்தால் "தேசத்தின் மகள் நீ" என்று அணைக்கிறது. இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில், அந்தச் சாதனையாளர்கள் எந்தச் சாதி என்று விசாரிக்கப்படுகிறது! "அவர்கள் எங்கள் சாதிக்காரர்கள்தான் தெரியுமா" என்று அறிவிக்கப்படுகிறது! "விளையாட்டுச் சாதனைக்கான உடலாற்றல் எங்களின் சாதிப் பரம்பரையிலேயே மரபணுவாகக் கலந்திருக்கிறது" என்று பெருமையாகப் பேசப்படுகிறது!

பெயருக்குப் பின்னால் சாதியைக் குறிப்பிடுகிற மரபைக் கைவிட்டு, நூற்றாண்டுகளுக்கான முன்னுரையை எழுதிய தமிழகத்தில் இது அதிசயமான செய்தியாக இருக்கலாம். குறைந்தது, வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை என்ற அளவிலான முன்னேற்றம் இங்கே இருக்கிறது. ஆனால், சமூக சீர்திருத்த இயக்கங்கள் வலுவாக வேர்பிடிக்காத வட மாநிலங்களில் இது சர்வசாதாரணமான செய்தி.

"பி.வி.சிந்து பதக்கம் பெறுகிற ஒவ்வொரு முறையும் நமது இணையத் தகவல் தேடல் தளங்களில் அவருடைய சாதி பற்றிய விசாரணைகள் துடிப்பாகக் குவிகின்றன. லோவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை வீரர்) பதக்கம் பெற்றபோது இதுதான் நடந்தது. தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா சாதிப்பின்னணியை உறுதிப்படுத்திக்கொள்ள இதே போன்ற தேடல்கள் இருந்தன. அந்த விசாரணைகளை விடவும், அவர் தங்களுடைய சாதிக்காரர் என்ற பெருமிதம் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தன," என்று தெரிவிக்கிறார் ஓவியக் கலைஞர் ராஹீ புண்யஷ்லோகா. ஆர்ட்டெட்கார் என்ற புனைப்பெயரில் கலையாக்கங்கள், உரையாடல்கள் மூலமாக சாதிய எதிர்ப்புக் கருத்துகளைப் பகிர்வதில் ஈடுபட்டுள்ளவர் அவர்.

'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டில் (செப்.5) அவர் எழுதியுள்ள கட்டுரையில், "இது எல்லா விளையாட்டுகளுக்கும் நீள்கிறது. கிரிக்கெட் நட்சத்திரம் ஒருவர் தன்னை "ராஜ்புத் பையன்" என்று பெருமிதத்தோடு அறிவித்தது நடந்து அதிகக் காலமாகிவிடவில்லை. அதற்குப் பெரிய விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. அதே போல மற்றொரு கிரிக்கெட் நட்சத்திரம் தனது பிராமணப் பின்னணியின் சிறப்பைப் பெருமையோடு பேசினார்," என்று குறிப்பிடுகிறார்.

"நீங்கள் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றால், நாட்டிற்காகப் பதக்கம் பெற்றால்தான் நீங்கள் இந்தியராக முடியும். இல்லையேல் நாங்கள் பொது இடங்களில் சிங்க்கி, சைனீஸ், நேபாளி என்றுதான் குறிப்பிடப்படுகிறோம். இப்போது எங்களை கொரோனா என்றும் சொல்கிறார்கள்," என்று முன்னணி ஆடையலங்காரக் கலைஞர் அங்கிடா கோன்வார் கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. "இந்தியாவைத் தொற்றியிருப்பது சாதியம் மட்டுமல்ல, இனவாதமும்தான். எனது சொந்த அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்," என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டார். மணிப்பூரின் மீரா சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் களிப்பாக வெள்ளிப் பதக்கத்தைக் கொண்டுவந்தபோது, அவரை இந்தியாவின் மகள் என்று பலரும் கொண்டாடி வாழ்த்தியபோது அங்கிடா இதைப் பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகத்தையே தன்னை உற்றுநோக்க வைத்த எம்.எஸ். தோனி எந்தச் சாதி என கூகுள் தளத்தில் மிகவும் தேடப்பட்டது. அவர் தங்கள் சாதிதான் என்று குறிப்பிட்ட மேலவர்கள் பெருமையோடு அறிவித்தார்கள். ஆனால், அவர் அந்த உயர்சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர் அல்ல, ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததும் அந்தப் பெருமிதக் குரல்கள் நின்றுவிட்டன. அவர் தனது ஆட்ட ஆளுமையைப் புறக்கணிக்க முடியாததாக நிலைநாட்டிக்கொண்டார்.

சென்ற ஓராண்டில் கூகுள் தளத்தில் மிக அதிகமாகத் தகவல் தேடப்பட்ட முதல் 7 பேரில் ஒருவர் கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சய் சாம்சன். 2018 உலக தடகளப்போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவரான ஹிமா தாஸ், கூகுளில் அதிகமாக என்ன சாதி என விசாரிக்கப்பட்டவர் என்ற பெயரையும் பெற்றார். மல்யுத்த வீரர் சக்'ஷி மாலிக் என்ன சாதி என்று தெரிந்துகொள்வதற்காகவும் ஏராளமானவர்கள் இணையத்தில் தேடினார்கள். "நாட்டிற்குக் கிடைத்த பதக்கங்களை விடவும் இந்த வீரர்கள் என்ன சாதி என்பதுதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா," என்று அதே சமூக ஊடகங்களில் எதிர்க்கேள்வி போடுகிற மாற்றுச் சிந்தனையாளர்களையும் பார்க்க முடிகிறது.

கேள்வி எழுவது எப்போதெனில்...

"கெடுவாய்ப்பாக, இதுவெல்லாம் புதிதல்ல. சில காரணங்களை சில சாதிகளோடு, வரலாற்றுப்பூர்வமான சாதி சார்ந்த தொழில்களின் அடிப்படையில், இணைத்துப் பார்க்கிற இந்தத் துணைக்கண்டத்தில் இதற்கான நீண்ட பாரம்பரியத்தை நாம் காணலாம். ராஜ்புத், மராத்தா போன்ற போர்க்கலை சார்ந்த வரலாறுகள் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் மேலான உடல் வலிமையோடு பிறப்பதாகவும், ஆகவே, அவர்களுக்கு விளையாட்டுத் திறன் இருப்பதாகவும் கருதப்படுகிறது. வணிகம் சார்ந்த சமூகங்கள் அல்லது பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் வர்த்தகத்திலும் முன்னணித் தொழில்களிலும் கூர்மதி படைத்தவர்கள் என்று கருதப்படுகிறது. மத அறிஞர்கள், அறிவு உற்பத்தியில் ஆளுமை உள்ளவர்கள் என்ற வரலாறு கொண்டவர்களாக பிராமணர்கள் அறிவார்ந்த மேலாண்மை மிக்கவர்கள் என்று கருதப்படுகிறது," என்கிறார் புண்யஷ்லோகா.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜன்டைனாவை இந்திய அணி வெல்லமுடியாமல் போனபோது, ஹரித்துவார் நகரில் வந்தனா கட்டாரியா வீட்டின் முன் வந்து கூச்சல் போட்ட மேல்சாதிக் கும்பல் ஒன்று, "நிறைய தலித்துகளை டீமில் சேர்த்துவிட்டார்கள், அதனால்தான் இந்தியா தோற்றுவிட்டது," என்று சொன்னதோடு, ஆபாசமான வார்த்தைகளையும் கொட்டிவிட்டுப் போனது.

விளையாட்டு மட்டும் என்றில்லாமல், எல்லாத் துறைகளிலும் இப்படி வெற்றியாளர்களின் சாதிப்பின்னணி விசாரிக்கப்படுவதும், அவர்கள் தங்கள் "உயர்சாதி" அடையாளத்தைப் பெருமையோடு அறிவிப்பதும், அவர்களது சாதிகளைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி மகிழ்வதும் எந்த உறுத்தலுமில்லாமல் நடக்கிறது. பொதுவெளியில் இவை இயல்பான செயல்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சாதனையாளர்களின் வெற்றிக்குக் காரணம் அவர்களது சாதிப் பின்னணிதான் என்றால், அதே சாதிகளைச் சேர்ந்த எண்ணற்றோர் அடையாளமே இல்லாமல் காணாமல் போகிறார்களே, நிச்சயமற்ற அன்றாடக் கூலித் தொழிலாளர்களாக உடல் வலிமையைத் தாரை வார்க்கிறார்களே, நடைமேடையில் பொருள்களைக் குவித்துக் குரல் வலிமையால் கூவி விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்களே - அங்கெல்லாம் அந்தச் சாதிகளின் பின்னணி வராதா? ஆயினும், இந்தக் கேள்வி மிகச் சன்னமாகவே ஒலிக்க, வெற்றிப் பெருமிதங்களோடு சாதியை ஒட்டிக்கொள்வது இயல்பானதாகக் கடந்துவிடுகிறது.

எப்போது அது கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என்றால், அதே போன்ற வெற்றியை நிகழ்த்துகிற ஒருவர் ஒடுக்கப்பட்ட தலித் சமூகங்களில் ஒன்றை சேர்ந்தவர் என்றால், எத்தகைய சவால் மிக்க நிலைமைகளைத் தாண்டி இந்த நிலைக்கு வர முடிந்திருக்கிறது என்ற நியாயமான உணர்வை அவர் வெளிப்படுத்துகிறார் என்றால் அப்போது பிரச்சினையாக்கப்படும்! இதிலே எதற்காக சாதியை இழுக்கிறீர்கள் என்று கூசாமல் கேட்கப்படும். "மேல் சாதிக்காரர்கள் பாகுபாட்டைக் கைவிட்டுவிட்டார்கள். தலித்துகள்தான் இப்போது சாதி வேற்றுமையை வளர்க்கிறார்கள்," என்றும் விமர்சிக்கப்படும்.

இதைப்பற்றியும் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிற ஓவியர், "பல்வாங்கர் பாலூ முதல் வந்தனா கட்டாரியா வரையில் தலித் விளையாட்டு வீர்கள் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்," என்று தெரிவிக்கிறார். பல்வாங்கர் பாலு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். 1876ல் பிறந்து 1955ல் காலமான அந்த ரயில்வே ஊழியர், பம்பாய் அணி சார்பாகவும் பின்னர் ரயில்வே அணி சார்பாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்த போட்டிகளில் பங்கேற்றுச் சாதித்தவர். உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா இந்திய ஹாக்கி அணியின் பெருமைக்குரிய வீரர். இன்றைய நாட்களிலேயே, வந்தனாக்கள் தாங்கள் தாண்ட வேண்டியிருந்த சாதித்தடைகளைப் பற்றிப் பேசினால் விமர்சிக்கப்படுகிறார்கள் என்றால், அன்றைய நாட்களில் பல்வாங்கர்கள் விமர்சிக்கப்பட்டதில் வியப்பில்லைதான்.

தமிழ் மண்ணிலும்

தலித்துகள்தான் சாதிப் பாகுபாட்டை வளர்க்கிறார்கள் என்று கூறி மறைமுகமாக ஒடுக்குமுறைகளுக்கு முலாம் பூசுவதில் தமிழகம் விதிவிலக்கு என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக, எங்காவது ஒரு வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு, அதற்காகக் கண்டனக் குரல் ஒலிக்கிறபோது, குறிப்பாக வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவ்வாறு பரப்பப்படுவதைக் காண முடிகிறது. அதே போல, விளையாட்டுக் களத்திலும் விடாமல் துரத்தும் சாதியம் தமிழகத்தைவிட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்டதாகவும் சொல்ல முடியாது. முக்கியமாக கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில், கைத்திறனையும் கால்திறனையும் கவனித்ததோடு அவர்களது சட்டை முதுகுகள் தடவிப்பார்க்கப்பட்டது பற்றிய விமர்சனங்கள் உண்டு. இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை.

தமிழர் பண்பாட்டுப் பெருமைகளுள் ஒன்றாகப் பின்பற்றப்படுகிற ஜல்லிக்கட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட உரிமையானது. அதிலேயும் முன்பு ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவே முடியாது, பங்கேற்ற இடங்களில் அவர்களது வெற்றிகள் கசப்புடனேயே ஏற்கப்பட்டன என்ற நிலைமை இருந்தது. அண்மைக் காலமாகத்தான் இதில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. மற்றபடி இங்கேயும் முன்காலத்துப் போர்க்கள மரபோடு இணைத்து உடல்வலிமை பற்றிய சாதிப்பெருமைக் கண்ணோட்டம் வளர்க்கப்பட்டது கவலைக்குரியது. அதையெல்லாம் மீறிய, விளையாட்டு ஈடுபாடு புதிய தலைமுறையினரிடையே வளர்ந்துவருவது நம்பிக்கைக்குரியது.

சாதியம் விளையாட்டல்ல, சாதி உணர்வு விளையாட்டாகக் கூடப் பெருமைக்கு உரியதல்ல என்ற புரிதலும், சாதிப்பெருமை பற்றிய சுய குற்றவுணர்வும் மேலோங்குகிறபோதுதான் விளையாட்டுக் களத்திற்குள்ளேயும் சாதியத்தை நுழைய விடாமல் தடுத்து வெற்றிகொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+