Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூன்றாவது அலையை முன்னேற்பாடுகளோடு எதிர்கொள்ள… அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

அந்தக் காலக் கொள்ளைநோய்கள் பற்றிய வரலாற்றுப் பதிவுகளைத் தகவல்களாகத் தெரிந்துகொண்டதற்கும், இன்றைய கொரோனா தாண்டவ நிகழ்வுகளை அனுபவங்களாகக் காண்பதற்கும் எவ்வளவு வேறுபாடு! அடுத்தடுத்த அலைகளாகவும் பலப்பல வடிவங்களாகவும் சுற்றிவரும் கொரோனா பெருந்தொற்று, "உங்களின் எல்லைகள், வேலிகள் எதுவும் எனக்குப் பொருட்டல்ல," என்று உரக்கச் சொல்கிறது. அதனை மனிதகுலம் புரிந்துகொண்டுவிட்டது என்று சன்னமாகக் கூட சொல்ல முடியவில்லை. இதையெல்லாம் பேசினால் வெறும் தத்துவப் புலம்பலென்று இதுவும் கடந்துபோகக்கூடும்.

கொரோனா மூன்றாவது அலை பற்றிய எச்சரிக்கைகளைக் கடந்துவிட முடியாது. "எல்லா முடிவுகளும் தொடக்கங்களாகவும் இருக்கின்றன. அந்த நேரத்தில் அதை நாம் தெரிந்துகொள்வதில்லை," என்று எழுதினார் மிட்ச் அல்போம் ('தி ஃபைவ் பீப்பிள் யூ மீட் இன் ஹெவன்' - நாவல்/2003). முதல் அலையின் முடிவு இரண்டாவது அலையின் தொடக்கமாகியது. இரண்டாவது அலையின் முடிவு மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் நமக்குத் தெரிவிக்கிறார்கள்.

Writer Kumaresan article on Covid19 Third Wave and Restrictions

முதல் அலையின் பாதிப்புகள் மோசமாக இருந்தன. இரண்டாவது அலையின் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கின்றன, மூன்றாவது அலையின் பாதிப்புகள் படு மோசமாக இருக்கும் என்று பொதுவாகப் பேசப்படுகிறது. முதல் அலையில் தொலைவானவர்களையும் இரண்டாம் அலையில் நெருக்கமானவர்களையும் இழக்க நேரிட்டதால், இது உண்மைதானோ என்ற கலக்கம் ஏற்படுகிறது. முதல் அலை வயதானவர்களைத் தாக்கியது, இரண்டாம் அலை இளையோரைப் பாதித்திருக்கிறது, மூன்றாவது அலை குழந்தைகளைக் குறிவைக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால் கலக்கம் அதிகரிக்கிறது.

அலையினும் மோசம் அச்சம்

இப்படிக் கலக்கத்தை அதிகரிப்பது இந்த அலைகளை விட மோசமானது. பீதியடைகிறவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். "இரண்டு அலைகளிலும் கூடுதல் அனுபவங்களையும் தேவையான படிப்பினைகளையும் பெற்றிருக்கிறோம். ஆகவே, அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் மக்களைக் கவனத்துடன் செயல்பட வைப்பதாக இருக்க வேண்டுமேயல்லாமல் அச்சத்துடன் அடக்குவதாக இருக்கக்கூடாது," என்கிறார் அக்குபங்சர் மருத்துவர் உமர் ஃபாரூக்.

கொரோனா எத்தனை பேருக்குத் தொற்றுகிறது, எத்தனை பேரை நோயாளியாக்குகிறது, எத்தனை பேரின் கதையை முடிக்கிறது என்ற உச்ச அளவுகளை வைத்தே அலை என வரையறுக்கப்படுகிறது. சில நாடுகளில் முதல் உச்சத்திற்குப் பிறகு அலை என்று சொல்லக்கூடிய அளவை எட்டவில்லை, சில நாடுகளில் நான்காவது ஐந்தாவது அலைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன, நுட்பமாகப் பார்த்தால் இந்தியாவிலேயே கூட ஏற்கெனவே மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்ட பகுதிகளும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முதலாம் அலையில் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்ட விகிதங்கள் இரண்டாம் அலையில் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கின்றன, மூன்றாம் அலையிலும் அப்படியே இருக்கும் என்றும் அவர்கள் கணிக்கிறார்கள்.

"முதல் அலையைப் பொறுத்தவரையில் பெருமளவுக்குப் பெரிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இரண்டாம் அலையில் பெரிய நகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அலை பரவலாக இருக்கும்," என்கிறார் இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறையின் 'விஞ்ஞான் பிரசார்' நிறுவன மூத்த அறிவியலாளர் த.வீ. வெங்கடேஸ்வரன். "ஆனால், அது நாடு முழுவதும் ஒரே விதமாக, சமமான அளவாக இருக்காது. சில பகுதிகளில் தீவிரமாகவும் சில பகுதிகளில் மட்டுப்பட்ட அளவிலும் இருக்கும். எந்தப் பகுதியில் எப்படி இருக்குமென்பதை ஊகிக்க முடியாது. ஆகவே அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமான கண்காணிப்பு தேவை," என்கிறார் அவர்.

ஒரு மாநிலம், இரு அனுபவங்கள்

மூன்றாம் அலை எழுவதாகவே வைத்துக்கொள்வோம் - ஏதோவொரு பகுதியில் முன்பு சிறப்பாகக் கையாளப்பட்டதால் அல்லது ஏதோவொரு பகுதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதால் அங்கெல்லாம் மூன்றாவது அலை மூக்கை நீட்டாது என்று சொல்வதற்கில்லை. முதல் அலையைச் சிறப்பாக எதிர்கொண்டதில், ஒரு முன்னுதாரண மாநிலமாக உலக அளவில் பாராட்டைப் பெற்ற கேரளம், இரண்டாவது அலையில் பெரியதொரு திணறலைச் சந்திக்கிறதே.

இரண்டாவது அலையை முந்தைய முனைப்புடன் கையாளத் தவறியதே இதற்குக் காரணம் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. முதல் அலையின்போது மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் எதுவும் நிறுத்திக்கொள்ளப்படவில்லை என்பதால் இந்தக் குற்றசாட்டிற்கு இடமில்லை என்ற மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்களைக் கண்காணிக்கத் தவறியதாலும், சபரிமலை தரிசனம், பக்ரீத் விழா போன்றவற்றிற்கு அனுமதியளித்ததாலும் தொற்று பெருகியிருக்கலாம் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார் மருத்துவர் பூபதி ஜான். கேரள மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு (அதாவது மக்கள்தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு), குறுகிய நிலப்பரப்பில் மக்கள் அடர்த்தி போன்ற காரணங்களாலும் தொற்று மிகுதியாகியிருக்கலாம் என்றும் சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கொரோனா புதிய அவதாரம், ஏற்கெனவே பாதிக்கப்படாத உறைவிடத்தை (மனித உடல்களை) நாடுகிறது என்றும், ஆகவே கேரளத்தின் மூத்த குடிமக்களைக் குறிவைப்பதாகத் தெரிகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சராசரி ஆயுள் அதிகரித்திருப்பது பெருமைக்குரியதொரு சாதனை. அதன் காரணமாகவும் தொற்று பெருகியது என்பதற்காக, முதியவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று ஒரு மன்னன் ஆணையிட்டானாமே, அந்தச் சிறார் கதையின் கற்பனையை மெய்யாக்கிக்கொண்டிருக்க முடியுமா என்ன?

எவ்வாறானாலும், போர்க்கால அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்வோம் என்று அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறைகூவல் விடுத்திருக்கிறார், கல்வியில் முன்னேறியவர்களான மலையாள மக்கள், வழிபாட்டு விழாக்களில் சற்றே சறுக்கிவிட்டார்கள் என்றாலும், அந்த அறைகூவலின் வெற்றிக்கு ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அறிய வேண்டிய உரிமைகள்

பொதுமக்களின் ஒத்துழைப்போடுதான் எந்தச் சவாலையும் வெல்ல முடியும். அதற்கொரு அடிப்படையான தேவையாக, மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 2018ம் ஆண்டில் ஒன்றிய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், நோயாளிகளின் உரிமைகள் பற்றியே ஆவணம் ஒன்றை வெளியிட்டது. பெரிய செய்தியாகியிருக்க வேண்டிய அந்த ஆவணத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. கொரோனாவை வெல்லும போராட்டத்தில் மக்களின் ஒத்துழைப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள பின்னணியோடு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களுக்காகத் தொடங்கியுள்ள இணையத்தளத்தில் அந்த ஆவணம் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் பார்வையில் படுமாறு வைக்கப்பட வேண்டிய ஆவணம் அது.

நோயின் தன்மை, நிலவரம், சிகிச்சைகள் உள்ளிட்ட தகவல்களை அறியும் உரிமை; உரிய ஆவணங்களையும் அறிக்கைகளையும் பெறும் உரிமை; அவசர மருத்துவ சிகிச்சைக்கான உரிமை, பரிந்துரைக்கப்படும் சிகிச்சை தொடர்பாக இரண்டாவது கருத்துப் பெறுகிற உரிமை; பாகுபாடற்ற சிகிச்சைக்கான உரிமை; பாதுகாப்பான, தரமான சிகிச்சை உரிமை, மாற்று மருத்துவத்தை நாடும் உரிமை என பல்வேறு உரிமைகள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. உலக அளவிலும் உள்நாட்டிலும் பல்வேறு தொடர்ச்சியான இயக்கங்களின் பலனாக வரையறுக்கப்பட்டுள்ள இந்த உரிமைகள் இயல்பான காலத்திலேயே உண்டென்றால், கொரோனா காலத்தில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

அந்த உரிமைகள் அனைத்தும் உறுதியாகிவிட்டனவா? லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் பாதுகாப்பான, தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற, தடுப்பூசி விநியோகத்தில் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் மருத்துவ வளாகங்களுக்குள் பாகுபாடற்ற சிகிச்சை உரிமை அடிபட்டுவிடுகிறதே? மாற்று மருத்துவத்தை நாடுவது ஓர் உரிமையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அடைப்புக் குறிகளுக்குள் "அது கிடைக்குமானால்" என்ற "மானால்" விதி சேர்க்கப்பட்டிருக்கிறதே! அப்படியானால், ஒரு மருத்துவமனையில் அல்லது வட்டாரத்தில் ஒருவர் நாடுகிற மாற்று மருத்துவம் கிடைக்குமானால்தான் அவரால் அதை மேற்கொள்ள முடியும். ஆனால், இதை ஓர் உரிமையாக ஏற்கிற அரசு, மாற்று மருத்துவம் எங்கும் பரவலாகக் கிடைக்கச் செய்கிற கடமையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா? இப்படியான சிக்கல்கள் இருப்பதால்தான் ஆவணம் விரிவான அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லையோ என்னவோ! தமிழகத்தில் ஏற்கெனவே பரவலாக உள்ள அலோபதி முறையுடன் சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது. இது ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, அக்குசிகிச்சை என அனைத்து முறைகளுக்குமாக விரிவடைகிறபோதுதான் அந்த ஆரோக்கிய உரிமை முழுமையாகும்.

பள்ளிகள், திரையரங்குகளைத் திறக்கலாமா?

கொரோனா பரிசோதனைகளை விரிவாக நடத்தச் செய்வது, ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல் அந்தப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்வது, மறுபடியும் வீடுவீடாகச் சென்று விசாரிக்கச் செய்வது, தொற்று உறுதியானவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்குத்தான் சென்றாக வேண்டும் என்ற நிலைமையைத் தவிர்த்துத் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கான அருகமை முகாம்களை அமைக்கச் செய்வது, தடுப்பூசியை ஏற்றவர்களுக்குத் தடையின்றியும் தாமதமின்றியும் கிடைக்கச் செய்வது... என்று ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்கிறார் த.வீ. வெங்கடேஸ்வரன்.

இரண்டாவது அலை முற்றாக அடங்கிவிடவில்லை, மூன்றாவது அலை பற்றிய கவலையைப் புறக்கணிப்பதற்கில்லை என்கிற நிலையில், பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு போன்ற முடிவுகளை நிதானமாக மேற்கொள்ளலாம் என்றும் ஒரு பகுதி வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆசிரியர்கள் சும்மா சம்பளம் வாங்குகிறார்கள் என்று பேசுகிறவர்களின் வாயை மூடுவதற்காகப் பள்ளிக் கதவைத் திறக்கலாமா? ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் வர வேண்டும் என்பதால் மாணவர்களுக்குப் பாதுகாப்புதான் என்று விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் ஆசிரயர்களுக்கு அவ்வாறு ஆணையிடுகிறபோது, அது அவர்களது மாற்று மருத்துவ உரிமையைப் பறிப்பதாகிவிடுகிறது. அத்துடன், ஆசிரியர்கள் மூலமாகத்தான் தொற்று பரவுமா? பள்ளிச் சுவருக்கு வெளியே, மாணவர்கள் வரும் வழியில் என பல அபாயநிலைகள் இருக்கின்றன. ஒரே ஒரு மாணவர் பாதிக்கப்பட்டாலும் அது ஏற்கத்தக்கதா? அறிவிக்கப்பட்ட தேதிப்படி கல்விக் கூடங்களைத் திறந்துவிட்டு, பின்னர் ஒருவேளை மூன்றாம் அலை மூர்க்கமாக இருக்குமானால் மறுபடி மூடிவிட ஆணையிடுவது சரியாக இருக்குமா? குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியுமே, நண்பர்களைப் பார்க்கிறபோது ஏற்படுகிற உற்சாகம் அவர்களது வளர்ச்சிக்கு உதவுமே, ஆன்லைன் வகுப்பு அராஜகங்களிலிருந்து விடுபடுவார்களே என்றெல்லாம் சிறு நிம்மதி பெற்றோர்களுக்கு ஏற்படும்தான். ஆயினும், ஒருவகையான தவிப்பில் அவர்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்களா?

அடுத்த ஒரு மாத காலம் முக்கியமானது, மிகுந்த விழிப்புடன் இருந்தாக வேண்டும் என்று ஒரு பக்கம் அதிகாரப்பூர்வமாகவே சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கம் இவ்வாறு அவசரப்படலாமா? இவ்வாறு கேட்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. இதுவரையில் கிடைத்திருக்கிற வெற்றி, நீதிமன்றங்களே சுட்டிக்காட்டிய பல்வேறு சொதப்பல்களுக்கிடையே கறாராகச் செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாலும்தான் சாத்தியமாகியிருக்கிறது. அந்த வெற்றியை முழுமையாக்கிட, அறிவியல் உலகம் உற்சாகமாகக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிற வரையில், அதே கறார்த் தன்மையோடு கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். முழு உண்மையோடு எடுத்துக்கூறினால், இடைக்கால உதவிகள் தொடர்வதோடு இணைத்தால், இதுவரையில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பொறுத்துக்கொண்ட பொதுமக்கள் மேற்கொண்டு சில காலம் பொறுத்திருக்கத் தயாராகவே இருப்பார்கள்.

பொதுமக்கள் மனசாட்சிக்கு

பொதுமக்களில் எல்லோருமே ஒத்துழைக்கிறார்களா? பொதுமுடக்க விதிகளைப் பின்பற்றுகிற எல்லோருமே, அவற்றின் தேவைகளைப் புரிந்துகொண்டுதான் பின்பற்றுகிறார்களா? அப்படிச் சொல்வதற்கில்லை. ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, விதிகளை வேண்டாவெறுப்போடு பின்பற்றுகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் தேவையில்லை என்ற கண்ணோட்டம் உள்ளவர்கள் கூட, பொதுவெளியில் தேவையற்ற குழப்பத்தையோ அச்சத்தையோ ஏற்படுத்திவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள். ஆனால், முன்போலக் கெடுபிடிகள் இல்லை என்பதற்காக முகக்கவசமே இல்லாமல் சுற்றுகிறவர்களையும், அதை வெறும் தாடைக்கவசமாக இழுத்துவிட்டுக்கொண்டு நடமாடுகிறார்களே! "அவசியமெனில் மட்டுமே வெளியே செல்லுங்கள்," என்று அறிவுறுத்தும் அலைபேசி அழைப்பு மணியைக் கேட்டுக்கொண்டே, அவசியமின்றி வெளியே செல்கிறார்களே! திருமண வரவேற்புகளுக்கும் மறைந்தோர் வழியனுப்பல்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைப்படிதான் வருகைகள் இருக்கின்றனவா? அவரவர் மனசாட்சிக்குத்தான் விட வேண்டியிருக்கிறது.

மனசாட்சியில் பதியவைப்பது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வக் குழுக்களை ஈடுபடுத்துதல், உள்ளாட்சிகளிடம் கூடுதல் பொறுப்புகளை ஒப்படைத்தல், களச்செயல்பாட்டாளர்களின் கருத்துகளை மதித்துக் கேட்டுப் புதிய அணுகுமுறைகளை வகுத்தல், பொதுசுகாதாரக் கட்டமைப்பை நேர்மையாக வலுப்படுத்துதல், அறிவியல் தெளிவை அடித்தளமாகக் கொள்ளுதல் என்ற பாதையில் சென்றால் மூன்றாவது அலை தனக்குத் தானே "முற்றும்" போட்டுக்கொள்ளும். உலகளாவிய வெற்றியைப் பெற்ற 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படத்தை முக்கால் நூற்றாண்டுக்கு முன் நாவலாகப் படைத்தவரான ஜே.ஆர்.ஆர். டோல்கியன், அதன் இரண்டாம் பாகமான 'தி ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்' புத்தகத்தில். "நாம் முடிவெடுக்க வேண்டியதெல்லாம் நமக்குத் தரப்பட்டுள்ள நேரத்தில் என்ன செய்வது என்பதைத்தான்," என்று எழுதியிருக்கிறார். மூன்றாவது அலையைச் சந்திக்கும் காலத்தில் என்ன செய்வதென முடிவெடுத்துவிட மாட்டோமா என்ன?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+