யூனியன் என்றால் ஒன்றியம்தானே இந்திய மக்களே? அ. குமரேசன்
மூத்த தலைமுறைகள் நேற்றைய நிகழ்வுகளை அசைபோடவும், இளைய தலைமுறைகள் இன்றைய நடப்புகளைக் கவனிக்கவும், இரண்டு தலைமுறைகளுமே நாளைய மாற்றங்களை உறுதிப்படுத்தவுமான ஒரு விவாதம், மொழி சார்ந்ததாக முன்னுக்கு வந்திருக்கிறது. மொழி சார்ந்த விவாதம் என்று மட்டும் அதைச் சுருக்கிவிட முடியாது, மொழி உரிமை சார்ந்த விவாதமாக அதனை விரித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதா, மத்திய அரசு என்று குறிப்பிடுவதா என்ற விவாதம்தான் அது. ஊடக விவாதங்களில், பத்திரிகைக் கட்டுரைகளில், மொழி ஆர்வலர்களின் கூட்டங்களில் மட்டுமே "இந்திய ஒன்றியம்" என்ற சொல்லாடல் புழங்கிவந்தது. இவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு சொல்கிறார்! ஏன் இதுவரையில் மத்திய அரசு என்று சொல்லப்பட்டது போல இவர் சொல்லவில்லை, மாறாக ஏன் ஒன்றிய அரசு என்று சொல்கிறார் என்று பலரும் கவனிக்கிறார்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் பேசுகிறார்கள். இவர்களால் கண்டுகொள்ளாமல் விடமுடியவில்லை! இதன் நீட்சியாக, தமிழ்நாடு என்று சொல்லலாமா, தமிழகம் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே என்றும், ஏன் தமிழ்நாடு என்று சொல்வதில் என்ன தவறு என்றும் விவாதம் தொடங்கியிருக்கிறது. இப்படிச் சொல்வது பிரிவினைக் குரல் என்று சொல்லி, மற்றவர்களைக் கவனிக்க விடாமல் திசைதிருப்புகிற உத்தியும் கையாளப்படுகிறது.

எது குறித்தும் பொது விவாதம் என்பது சமுதாயத்திற்கு நலம் விளைவிப்பதுதான். ஆனால், தற்போதைய விவாதத்தில், ஒன்றியம், தமிழ்நாடு என்ற சொல்லாடல்களை ஆதரிப்போரில் பெரும்பாலோர் பொதுவான விவாதப் பண்பாட்டை ஏற்பவர்களாகவும், மத்தியம், தமிழகம் என்ற சொற்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்போரில் பெரும்பாலோர் விவாதமற்ற திணிப்பதிகாரத்தை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. இது தற்செயலானதா அல்லது சித்தாந்தம் சார்ந்ததா என்பதே கூட விவாதிக்கத்தக்கதொரு கருப்பொருள்தான்!
யூனியனை மொழிபெயர்த்தால்
விடுதலை பெற்ற நாடு எப்படிப்பட்ட ஆட்சிமுறையைக் கொண்டிருக்கும் என்று அம்பேத்கர் தலைமையிலான குழு விவாதித்துத் தயாரித்த, நாட்டின் முதல் நாடாளுமன்றம் விவாதித்து ஏற்றுக்கொண்ட அரசமைப்புச் சட்டத் தொகுப்பு நூலிலேயே "இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருக்கும்" என்றுதான் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள "யூனியன்" என்ற சொல்லை "ஒன்றியம்" என்றுதான் தமிழில் மொழிபெயர்க்க முடியும். "மத்தியம்" என்று மொழிபெயர்க்கத் தரமான எந்த அகராதியிலும் இடமில்லை. "மத்தியில்" இருப்பவர்கள் திணிக்க முயல்கிற மொழிகள் உட்பட எந்த எந்த மொழியிலும் "ஒன்றியம்" என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாகத்தான் மாற்ற முடியும். இந்தியில் கூட யூனியனை "சங்" என்றுதான் மொழிபெயர்க்க முடியுமேயன்றி, "கேந்திர" என்று பெயர்த்துக்கொண்டிருக்க முடியாது.
ஒரு வாதத்திற்காக - யூனியன் என்ற சொல்லுக்கு சங்கம் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதால் "மாநிலங்களின் சங்கம்" என்று சொல்லலாமா? சங்கமா! அந்தச் சொல்லைக் கேட்டாலே பதறிவிடுவார்களே!

இன்றைய இந்தியாவின் அன்றைய பல விரிந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த பேரரசுகள் கூட மத்திய அரசு என்று நிறுவிக்கொள்ளவில்லை. 17ம் நூற்றாண்டில் புகுந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்கடுத்த நூற்றாண்டில் மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய தனது மூன்று கவர்னர் ஜெனரல் அலுவலகங்களின் அதிகாரங்களை, கல்கத்தா நிறுவனத்திற்கு மாற்றியது. அப்போதுதான் 1771ல் மத்திய அரசு என்பதாக உருவாக்கப்பட்டது என்ற முக்கியமான தகவலைத் தெரிவிக்கிறது 'முரசொலி' தலையங்கம். அது திமுக நாளேடு, அப்படித்தான் எழுதும் என்று நினைக்கிறவர்கள் விக்கிபீடியா, கூகுள் என்று தேடியோ, வரலாற்று நூல்களைப் புரட்டியோ இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவை அடிமைப்படுத்தியவர்களின் சொல்லாடலைத்தான் மாற்றக்கூடாது என்கிறார்கள்! இது அடிமைப்புத்தியா அல்லது அதே ஆதிக்கப்புத்தியின் பிரதிபலிப்பா?
இதற்கும் ஒரு வரலாறு
ஆனால், ஒன்றிய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதைத் தொடங்கிவைத்தது இவர்கள் அல்ல. விடுதலைக்குப் பின் நாட்டின் மொழிகளுக்குச் சம மரியாதை அளிக்கப்படுவது உள்ளிட்ட சமத்துவக் கனவுகளோடு இருந்த குடிமக்கள் மீது இப்படிப்பட்ட சொல்லாடல்களைச் சுமத்தியதில் காங்கிரஸ் ஆட்சிகளின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்தித் திணிப்பு உள்ளிட்ட மாநில மொழி உரிமைகளுக்கு எதிரான அன்றைய தாக்குதல்களை மறந்துவிடவும் முடியாது. அதே போல, விதிவிலக்கான சிலர் தவிர்த்து, மற்ற கட்சிகளும் "மத்திய" என்ற சொல்லின் மைய நுட்பத்தை ஆராயாமல் பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. சிலர் தங்கள் மத்திய அரசு என்பதற்கு மாறாக, நடுவண் அரசு என்றோ, மைய அரசு என்றோ சொல்லித் தங்கள் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்திக்கொண்டார்கள். மத்தியம், மையம், நடுவண் எதுவானாலும் அது அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்ட ஏற்பாடு பற்றிய அறியாமைதான் அல்லது அதற்கான ஒப்புதல்தான். இன்றைக்கு இது மிக அப்பட்டமாக இருக்கிறது, அதிகாரக் குவிப்பின் ஒரு நிகழ்ச்சிநிரலாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதால்தான், அதை ஏற்க மறுக்கும் நியாயமான மாநில உரிமைக் குரல்களின் எதிரொலியாக "ஒன்றியம்" என உச்சரிக்கப்படுகிறது.
ஒன்றியம் என்று சொல்வது மொழிப்பற்றிலிருந்து வருவதல்ல. மாநிலங்களின் பன்முகப் பண்பாட்டு உரிமைகளிலிருந்து வருவது. மேலும், ஒன்றியம் என்று சொல்கிறபோது இயல்பாகவே அந்தச் சொல் ஒன்றிணைந்தும் ஒத்துழைத்தும் வாழ்கிற தேசிய உணர்வை அடையாளப்படுத்துகிறது. ஆனால், மத்தியம் என்றால் மத்தியிலிருந்து நீளும் அதிகாரக் கரங்களுக்கு அடங்கிப் போகிற உணர்வைத்தான் தருகிறது. நாட்டுக்கு எது தேவை? அடங்கிப்போன உணர்வா, அனைவரோடும் தோள் சேர்ந்த உறவா?
தில்லியில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தை அருங்காட்சியமாக்கிவிட்டு, ஒன்றிய அரசுக் கட்டடங்களை இடித்துவிட்டு 20,000 கோடி ரூபாய் செலவில் எழுப்பப்பட உள்ள வளாகத்திற்கு, போன நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சூட்டிய "சென்ட்ரல் விஸ்டா" என்ற பெயரே தொடர்ந்து பிடித்துக்கொள்ளப்படுகிறது. இதிலே கூட இந்த அதிகார மையக் கோட்பாடு இருக்கிறது என்கிறார்கள் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மாண்பை வலியுறுத்துகிறவர்கள். இன்றைய கொடுமையான கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட மாளிகைகளின் வளாகம் தேவையா என்ற கேள்விக்கே ஏற்கத்தக்க விளக்கமளிக்க மறுக்கிறவர்களிடம், இந்தப் பெயர் அப்படியே நீடிக்கலாமா என்ற கேள்விக்கு மட்டும் விடையை எதிர்பார்க்க முடியுமா?
தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது, அது பிரிவினைக் குரல் என்ற வாதமும், மக்களின் உரையாடலை மடைமாற்றும் பதற்றத்திலிருந்தே வருகிறது. 'நாடு' என்றால் தமிழ் வழக்கில் அரசியல் சார்ந்த புவியியல் பகுதி என்ற பொருளும் இருக்கிறது, அரசு என்ற கருத்துருவும் இருக்கிறது. பண்பாட்டு அடையாளத்தோடு இணைந்த தேசம் என்ற பொருள் இருப்பதாகவும் மொழியறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த "நாடு" என்ற சொல் எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அதனைப் அரசியல் நிலப்பரப்பாகவோ, மாநில அரசாகவோ, பண்பாட்டு அடையாளமாகவோ சரியாகப் புரிந்துகொள்கிறார்கள் தமிழ் மக்கள். இதில் அவர்களுக்குக் குழப்பமேதும் இல்லை. தமிழ்நாடு என்று சொல்கிறபோது இங்கே யாரும் இந்திய நாட்டுக்கு அல்லது ஒன்றியத்துடன் முரண்பட்டதாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படியிருக்க, தமிழ்நாடு என்று சொல்வது பிரிவினைக் குரல் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துகிற வேலைதான்.
"யூனியன்" என்பதற்குச் சரியான மொழியாக்கமாக "ஒன்றியம்" என்ற சொல்லையும், சங்கரலிங்கனாரின் நெடும் போராட்டத்திற்கும் உயிர்த் தியாகத்திற்கும் மகத்தானதோர் அங்கீகாரமாகச் சட்டப்பேரவை சூட்டிய "தமிழ்நாடு" என்ற பெயரையும் கையாள்வது மாநில உரிமைகளைக் காப்பதற்கானது மட்டுமல்ல, அடிப்படையான அரசமைப்புச் சட்டத்தையே காப்பதற்கானதுமாகும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications