மக்கள் அனுபவத்திற்கு வராத 20 அடிப்படை மனித உரிமைகள் - அ.குமரேசன்
"உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (யூடீஎச்ஆர்) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல்" என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் அந்தப் பிரகடனம் தொடங்குகிறது."ஆரோக்கியமானதொரு கோளில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்காக" என்ற லட்சியத்தை ஏந்தியுள்ள ஐ.நா. சபை, உலகின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மாறுபட்ட சட்டநடைமுறைகளும் பண்பாடுகளும் பின்னணியாகக் கொண்ட பிரதிநிதிகள் விவாதித்து உருவாக்கிய அந்தப் பிரகடனத்தை 1948 டிசம்பர் 10 அன்று வெளியிட்டது. பிரகடனத்தில் வலியுறுத்தப்படுகிற 30 அடிப்படையான உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டங்களை இயற்றுவது, அவற்றைப் பற்றிய பொறுப்புணர்வை அரசாங்க அதிகார அமைப்புகளுக்கு ஏற்படுத்துவது, விழிப்புணர்வைக் குடிமக்களிடையே கொண்டுசெல்வது ஐ.நா. உறுப்பு நாடுகளின் கடமை.
"மனிதக்குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரது உள்ளார்ந்த கண்ணியம், சமமான, பிரிக்கலாகாத உரிமைகளுக்குமான அங்கீகாரமே உலகத்தில் சுதந்திரம், நீதி, அமைதிஆகிவற்றுக்குஅடிப்படை என்கிற நிலையில்..." என பிரகடனத்தின் முன்னுரை தொடங்குகிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தனிமனிதரும் இந்த உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் பாடுபட இட்டுச்செல்லும் குறிக்கோளுடன், இந்தப் பிரகடனத்தை ஒரு பொது சாதனைத் தரமாக பொதுச்சபை இதனை பிரகடப்படுத்துகிறது என்று அந்த முன்னுரை முடிகிறது. பதக்கங்களும், பதவிகளும், பளபள கட்டடங்களும் சாதாரணமான சாதனை அடையாளம்தான், அந்த 30 அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதே மிக உயர்ந்த சாதனைத்தரம்.

பிரகடனம் வழங்கப்பட்டு 72 ஆண்டுகள் கடந்துவிட்டன.இவ்வாண்டு டிசம்பர் 10 வருகிறபோது 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிடும்.பொதுச்சபை வேண்டுகோளின்படி 1950 முதல் ஒவ்வொரு டிசம்பர் 10 அன்றும் 'உலக மனித உரிமைகள் நாள்' கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று சொல்வதா அல்லது கடைப்பிடிக்கப்படுகிறது என்று சொல்வதா?உலக சமுதாயத்தில் அதுவரையில் இல்லாததாக இப்படிப்பட்ட உரிமைகள் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டதே மனிதகுலத்தின் கொண்டாட்டத்திற்குரிய ஒரு நிகழ்வுதான். கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதுதான் பெரிய கேள்வியாக எழுகிறதே!
பிரகடனத்தின் முக்கால் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் இன்று அந்த 30 உரிமைகளின் நிலைமை என்ன?இது பற்றிய ஒரு ஆய்வினை நடத்தியுள்ளார் கனடா நாட்டைச் சேர்ந்தடாஃபேன் மேக்டொனால் என்ற சுயேச்சைப் பத்திரிகையாளர்.'எஸ்பிரஸ்ஸோ கம்யூனிகேசன்ஸ் அன் டிசைன்' என்ற இணையத்தளத்தில், அவரது ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. நீளக்கட்டுரையாக அல்லாமல், தனித்தனி படங்களும் குறிப்புகளும் கொண்ட நழுவுப்படத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது படிக்க நேரமோ ஆர்வமோ இல்லாத அதிகாரபீடத்தவர்களும் தனிமனிதர்களும் அந்தப் படங்களைப் பார்த்தாவது உறுத்தல் உணர்ச்சி கொள்ளட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ.
உலக அளவில் 20 உரிமைகள் இன்னமும் மக்களின் அனுபவமாகவில்லை என்று கூறுகிறார் டாஃபேன் மேக்டொனால்.அவர் தொகுத்துள்ள வரிசைப்படியேபார்ப்போம்.
போதுமான வாழ்க்கைத்தர உரிமை: "ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்குமான போதிய வாழ்க்கைத்தரம் அனைவரின் உரிமை. உணவு, நீர், உடை, உறைவிடம், மருத்துவ கவனிப்பு, சமூக சேவைகள் ஆகியவை இந்த உரிமைக்குள் அடங்குகின்றன.ஆனால், உலகம் முழுவதும் 78 கோடிப் பேர் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாக இருக்கிறார்கள்.ஆரோக்கியமான, செயலூக்கமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான போதிய உணவு கிடைக்காதவர்களாக இருப்பவர்கள் 79 கோடியே 50 லட்சம் பேர்.10 கோடிப்பேர் வீடற்றவர்கள்."
டாஃபேன் இவ்வாறு பதிவிட்டிருப்பதை, சாலையோரங்களில் யாருடைய கருணைக்காகவாவது காத்திருக்கிறவர்களது கண்களின் நிரந்தர சோகத்தைக் கண்டுகொள்ளாமல்தானே நகர்கிறோம் என்பதோடு ஒப்பிட்டுக் பார்க்கலாம்.அரசு எந்திரங்கள் அவ்வப்போது பாதுகாப்பு இல்லங்கள் பற்றிய புள்ளிவிவரங்களைச் சொல்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றனவே?
பாகுபாடுகளிலிருந்து விடுதலை: "பிரகடனத்தின் உரிமைகளும் சுதந்திரங்களும் எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உரியவை. ஆனால் எங்கும் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பாகுபாடு காரணமாக ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் மரணத்தையும் கூட எதிர்கொள்கிறார்கள்.சில நாடுகளில் சிறுபான்மைப் பிரிவுளைக் குற்றப்பின்னணி உள்ளவர்களாக்குகிற பாகுபாட்டுச் சட்டங்கள் கூட இருக்கின்றன."
குற்றப்பரம்பரைச் சட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுவிட்டாலும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை, அவர்கள் அந்தச் சமூகத்தில் பிறந்ததாலேயே குற்றம் செய்யக்கூடியவர்களாகப் பார்க்கிற புத்தி மாறிவிடவில்லையே?ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோரை "அவங்க திருந்தவே மாட்டார்கள்" என்று எடுத்தெறிகிற பேச்சு ஒதுக்கப்படவில்லை.
மதம் அல்லது நம்பிக்கை உரிமை: "மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சிரியாவில் தீவிரவாதிகள் கிறிஸ்துவர்களையும் யாஜிதிகளையும் ஷியா முஸ்லிம்களையும் தாக்குகிறார்கள்.உலகின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவர்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள்.மியான்மரில் ரோஹியாங்கா முஸ்லிம்கள் படுகொலைகளை எதிர்கொள்கிறார்கள்.ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கனடாவிலும் முஸ்லிம் பெண்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்படுகிறது."
முஸ்லிம்கள் என்றால் வாடகை வீடு கூட மறுக்கப்படுகிற, ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் என்றாலும் கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டதால் இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பக்கூடாது என்ற தடுக்கப்படுகிற, அதிகாரத்தில் இருப்பவர்களே சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை உதிர்க்கிற உள்ளூர் நிலைமைகளை மறந்துவிட்டு இந்தத் தகவலைக் கடந்துவிட முடியாது..
கல்வி உரிமை: "அடிப்படைக் கல்வி ஒரு மனித உரிமை. 26 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்குப் பள்ளி செல்லும் வாய்ப்பு இல்லை.பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் 84 சதவீதத்தினர்தான் தொடக்கப் பள்ளியை முழுமை செய்கிறார்கள்.15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் 45 சதவீதத்தினர்தான் நடுநிலைப்பள்ளிக் கட்டத்தை முடிக்கிறார்கள்.குழந்தைகள் கல்வி பெறுவதை வறுமை நிலைமை சுருக்குகிறது.வளரும் நாடுகளில் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை."
வறுமையில் இருப்பது சோம்பேரித்தனத்தின் விளைவு என்று அலட்சியப்படுத்துகிறவர்கள், இவர்களெல்லாம் படித்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்கிறவர்கள்,கடையில் பொருள்கள் வாங்குகிறபோது மிச்சப்பணம் வாங்குகிற அளவுக்குப் பெண் படித்திருந்தால் போதும் என்று சொல்கிறவர்கள் இந்தியத் திருநாட்டிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்: "எல்லைகளைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு ஊடக வாயிலாகவும் தகவல்கள், கருத்துகள் கோருவது, பெறுவது, பகிர்வது நமது உரிமை. ஆனால், சில நாடுகளில் ஊடகங்கள் அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.உலகெங்கும் இதழியலும் இதழியலாளர்களும் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.2017ம் ஆண்டில் 48 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள், 262 பேர் சிறையிடப்பட்டார்கள் - அவர்களுடைய பணிகளுக்காக. 2018ம் ஆண்டில் கொல்லப்பட்ட இதழியலாளர்கள் 43 பேர்."
2018ம் ஆண்டின் நிலவரப்படி இதைத் தெரிவித்திருக்கிறார் டாஃபேன். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (சிபிஜே) அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 30 பேரில் 21 பேர் தங்களது செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றிக்காகக் கொலை செய்யப்பட்டவர்கள்.மற்றவர்கள் மோதல்களின்போது செய்திப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நடந்த துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகளால் இறந்திருக்கிறார்கள்.உலக அளவில் கருத்துச் சுதந்திர நிலையில் இந்தியா 142 வது இடத்தில் இருக்கிறது என்று எல்லைகள் தாண்டிய செய்தியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்துகிற உரிமை மட்டுமல்ல, அவ்வாறு வெளிப்படுத்தப்படும் கருத்தை அறிகிற உரிமையும்தான்.இதை அங்கீரிக்க மறுக்கிற அதிகாரபீடங்களும், ஆதிக்கவாதங்களும் மனித உரிமைகளுக்கு மட்டுமல்லாமல் மானுட மாண்புகளுக்கும் எதிரானவைதான்.
கூடும் உரிமை: "எதிர்ப்புகளையும் விமர்சனக் குரல்களையும் ஒடுக்குவதற்காக அரசாங்கங்கள் கூட்டம் கூடும் உரிமையை முறிக்கின்றன. கைதுகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வன்முறைகளைத் தூண்டுதல் உள்ளிட்ட வழிகளில் இந்த உரிமை மீறல் நடக்கிறது.ரஷ்யாவில் அண்மையில் ஊழல்களை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டார்கள்.எதிர்ப்புக் கூட்டங்களைத் தடுப்பதற்காக சமூக ஊடகங்களையும் இதர தகவல் தொடர்பு வழிகளையும் அரசுகள் முடக்குகின்றன."
சென்னையில் அறிவிப்புக் கொடுத்து, அனுமதி பெற்று அமைதியான முறையில் கூட்டப்படுகிற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளைக் கூட, மக்கள் கண்களில் படக்கூடிய இடங்களில் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. பிரச்சினைகளும் கோரிக்கைகளும் அரசாங்கத்தின் கவனத்திற்குப் போகிறதோ இல்லையோ, பொதுமக்களின் கவனத்திற்குப் போய்விடக்கூடாது என்று அதிகாரத்துவ மனங்கள் கவனமாக இருக்கின்றன.
அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம்: "அடிமைப்படுத்துதல் அல்லது அதற்காக ஆட்களைக் கடத்துதல் உலகில் கோடிக்கணக்கான் மக்களை இன்றளவும் பாதித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் சுமார் 2 கோடியே 90 லட்சம் பேர் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் கும்பல்கள் மோசடியான வழிகளிலும், வலிமையைப் பயன்படுத்தியும், தூக்கிச்செல்வதன் மூலமாகவும், கட்டாயப்படுத்தியும் மனிதர்களைச் சேர்க்கிறார்கள், ரகசியமாகப் பதுக்குகிறார்கள்.அவர்கள் மனிதர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவோ, கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகளுக்காகவோ இவ்வாறு கடத்துகிறார்கள்."
டாஃபேன் தெரிவிக்கிற இந்த நிலைமையை, நமது ஊரில் கொத்தடிமைகள் ஆலைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட செய்திகள், காணாமல் போன பெண்கள் சிவப்பு விளக்குப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இப்போதும் வந்துகொண்டிருப்பதோடு இணைத்துப் பார்க்கலாம்.
சித்திரவதைகளிலிருந்து விடுதலை: "சித்திரவதைகள் ஒழிப்புக்கான ஐ.நா. மாநாட்டுத் தீர்மானத்தில் 156 நாடுகளின் அரசுகள் கையெழுத்திட்டுள்ளன.ஆனால் இன்னமும் சித்திரவதைகள் பரவலாகத் தொடர்கின்றன. பிடிபட்டவர்களைத் தண்டிப்பதற்கோ, அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கட்டாயப்படுத்துவதற்கோ, அல்லது தகவல்கள் பெறுவதற்கும், வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலங்களை அளிக்கச் செய்வதற்கும் அதிகார இடங்களில் இருப்பவர்கள் வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மெச்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளின் காவல்நிலையங்களில் சித்திரவதைகள் வழக்கமான நடைமுறைகளாக இருக்கின்றன.அமெரிக்காவின் சிஐஏ பலரிடம் "முன்னேறிய விசாரணை நுட்பங்கள்" பயன்படுத்தியிருக்கிறது, அது ஒரு கைதியின் மரணத்திற்கு இட்டுச்சென்றது.
டாஃபேன் இங்கே சாத்தான்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு வந்திருந்தால் அல்லது செய்திகளைப் படித்திருந்தால் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளோடு இந்தியாவையும் சேர்த்திருப்பார்.
உயிர் வாழும் உரிமை:"அடிப்படை மனித உரிமைகளில் உயிர் வாழ்கிற, பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கிற உரிமை ஆகியவையும் உள்ளன.தான்தோன்றித்தனமாகக் கொல்லப்படுவதிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே இந்த உரிமை இணைக்கப்பட்டது.காவல்துறையால் எவ்வித நியாயமோ, பதிலளிக்கும் பொறுப்போ இல்லாமல் மக்களைக் கொல்கிற நிகழ்வுகள் தான்தோன்றித்தனமான கொலைகளே.அமெரிக்காவில் 2016ம் ஆண்டில் 963 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.காவல்துறையை இப்படி உயிர்ப்பலிப் படையாகப் பயன்படுத்துவது தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள உலகளாவிய விதிகளை அமெரிக்காவின் எந்தவொரு மாநிலமும் பின்பற்றுவதில்லை."
என்கவுன்டர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மோதல் என்றுதான் பொருள்.அதாவது காவல்துறை நடவடிக்கையின்போது எதிராளிகள் தாக்க, இவர்கள் திருப்பித் தாக்க அப்போது நிகழ்வதுதான் என்கவுன்டர்.நம் நாட்டில் என்கவுன்டர் என்றாலே போலி என்கவுன்டர்தான் என்று அர்த்தமாகிவிட்டதே, எப்படி?
சுதந்திரமாக, சமமாகப் பிறந்தோம்: "பிரகடனம் 'மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் கண்ணியம் மற்றும் உரிமைகளில் சமமாகவும் பிறந்திருக்கிறார்கள்' என்கிறது. ஆயினும், குறிப்பாகப் பெண்கள், சிறுமிகள், சிறுபான்மைப் பிரிவுகளுக்கு எதிரான சமத்துவமின்மை தொடர்கிறது.பல நாடுகளில் வன்முறைகளாலும், கட்டாயப்படுத்தப்பட்ட திருமணங்களாலும், ஆட்கடத்தல்களாலும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.கருவுற்றிருக்கிறபோது, குழந்தை பிறக்கிறபோது மரணம் நிகழ்வது இப்போதும் அதிகமாக இருக்கிறது.சில நாடுகளில் இப்போதும் கருவுறுதல் தொடர்பாகப் பெண்ணுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுகிறது."
எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம், குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கிற உரிமை மறுக்கப்பட்ட பெண்கள், அதற்கான உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று தெரியாத பெண்கள் இங்கே வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.பெண்ணின் இந்த உரிமையைப் பற்றிப் பேசினால் அதெல்லாம் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று தள்ளப்பட்டுவிடும்.
உழைக்கும் உரிமை: "ஒருவர் தற்சார்புடனும், சமுதாயத்தில் உற்பத்தியில் ஈடுபடுகிற ஓர் உறுப்பினராகவும் இருப்பதற்கான உரிமையே வேலைக்கான உரிமை.ஆனால் உலகெங்கும் அகதிகளுக்கு வேலை உரிமை இல்லை. 1990களிலிருந்து கென்யா நாட்டின் தாதாப் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிற 3,50,000 சோமாலி அகதிகளில் ஒருவருக்குக்கூட வேலை செய்யும் உரிமை கிடையாது. இந்த உரிமை மறுப்பு மக்கள் குடியேறி வாழவும், தொடர்ந்து முன்னேறவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் உதவுவதில்லை.மாறாக, வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உணர்வு இல்லாதவர்களாக அவர்களை மாற்றுகிறது."
அகதிகளின் நிலைக்கு நிகராக, உழைக்கும் உரிமை மறுக்கப்பட்ட, அல்லது அ,ந்த உரிமையைச் சொற்பத் தொகைக்காக விற்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட உள்நாட்டுக் குடிகளின் கதைகள் நிறைய இருக்கின்றன.
அத்துமீறிய காவலிலிருந்து விடுதலை: "சரியான காரணமோ, சட்டப்பூர்வ நடைமுறையோ இல்லாமல் அரசாங்கங்கள் மக்களைக் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ முடியாது. ஆனால், பல நாடுகளில் ஏராளமானோர் அவர்கள் யார் அல்லது அவர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்ற அடிப்படையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.அத்துமீறிய காவலுக்கு எடுத்துக்காட்டுகளாக ஊடகவியலாளர்களையும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களையும் குறிப்பிடலாம். வடகொரியாவில் 1,20,000 பேர் வரையில் அரசியல் கைதி முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்."
டாஃபேன் தருகிற இந்தத் தகவலைப் போலவே, விசாரணைக் கைதிகளாகவே சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்து, தங்கள் இளமைக் காலத்தையும் ஆயுளில் பெரும்பகுதியையும் அரசியல், இனம், மதம் உள்ளிட்ட பின்னணிகளுக்காகப்பறிகொடுத்தவர்கள் பற்றிய செய்திகளும் ஏராளமாக இருக்கின்றன. மனிதநேயத்தோடு இதை அணுகுகிற தாராள மனம்தான் இல்லை.
நியாயமான விசாரணை உரிமை: "குற்றச் செயல் புகார்கள் தொடர்பாக நியாயமான, பொதுவிசாரணை நடத்தப்படுகிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த நியாய விசாரணை உரிமை மீறப்படுவதற்கு ஒரு அப்பட்டமான எடுத்துக்காட்டுதான் கவுன்டாநாமோ தீவு காவல் கைதிகள் (அமெரிக்க அரசால்) நடத்தப்பட்ட விதம்.அந்தச் சிறையில் உச்ச எண்ணிக்கையாக 684 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.2018 வாக்கில் 40 பேர் அடைக்கப்பட்டிருந்தனர் - விசாரணை ஏதுமின்றி."
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் நியாயமான விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்கு அவரது வறுமை, சாதி உள்ளிட்ட காரணங்கள் இருப்பது எப்பேற்பட்ட மானுட அவமானம்! அதிலும், காவல்நிலைய விசாரணைக்காக என ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வறியவர் ஒருவர் கொண்டுவரப்படுகிறார் என்றால், அவர் உட்கார்வதற்கு நாற்காலி தருகிற நாகரிகம் எத்தனை இடங்களில் இருக்கிறது?
பண்பாடு, கலை, அறிவியல் சார்ந்த வாழ்க்கை உரிமை: "சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பூர்வகுடிகளும் தங்களுடைய பண்பாடுகளுக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அரசுகளாலும் தீவிரவாதிகளாலும் இந்த மக்களின் பண்பாடுகள் வம்படியாகச் செரிக்கப்படுகின்றன.இவர்களின் மொழிகளும் கலைகளும் பாரம்பரிய அறிவும் ஆன்மீகமும் அச்சுறுத்தப்படுகின்றன.சில பூர்வகுடிகள் தங்கள் நிலத்தையும் வளத்தையும் இழந்துகொண்டிருக்கின்றன, சில பண்பாடுகள் அழிந்துபோகும் அபாய நிலையில் இருக்கின்றன."
நவீனத்தின் போர்வையில் கார்ப்பரேட் உலகப் பசிக்கு இரையாக்குப் படுபவை வனவாழ் மக்களின் வாழ்விடங்களும், மரபணு போலத் தலைமுறை தலைமுறையாகச் சேர்த்துவைத்த அறிவுமல்லவா? எத்தனை கிராம தெய்வங்களுக்கான வழிபாடுகளில் கலாச்சார ஆக்கிரமிப்பும் மொழித்திணிப்பு நடந்திருக்கின்றன! உலகின் பல பகுதிகளிலும் அரசுகளின் தலையீடுகளால், மத நிறுவனங்களின் ஊடுறுவல்களால் பூர்வகுடிகளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன!
தனிச்சுதந்திர உரிமை: "இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தனிச்சுதந்திர உரிமை மீறல்கள் எங்கும் நிகழ்கின்றன. '(ஒருவரது) தனிச்சுதந்திரம், குடும்பம், இல்லம் அல்லது தொடர்புகளில் அத்துமீறித் தலையிடுவது' இந்த மனித உரிமையை மீறுவதாகும்.உலகெங்கும் அரசுகள் குடிமக்களை வேவு பார்ப்பதற்காக பெருமளவில் கண்காணிப்புத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றன.தேசத்தின் பாதுகாப்புக்காக என்று அரசுகள் சொல்லிக்கொண்டாலும் இது சட்டத்திற்குப் புறம்பானதே.மாற்றத்திற்காகக் குரல்கொடுப்போரை ஒடுக்குவதற்கும் அரசுகள் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன."
'பிரைவசி' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தனிச்சுதந்திரம் என்ற சொல் கச்சிதமான மொழிபெயர்ப்பு இல்லைதான்.ஆனால், 'அந்தரங்கம்' என்றால் வேறுமாதிரியாகப் புரிந்துகொள்ளப்படும் சூழலில் இந்தச் சொல்தான் கைகொடுக்கிறது.எதுவானாலும் ஒருவரது பிரைவசி உற்று நோக்கப்படுகிற அதிகாரப்பூர்வமான அல்லது வணிகத்தனமான கண்காணிப்புகளை விட இந்தச் சொல்லாக்கம் ஒன்றும் மோசமானதல்ல.
அடைக்கல உரிமை: "வேறு நாடுகளில் அடைக்கலம் கோரும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அகதிகள் அடைக்கலம் கோருகிறபோது சட்டவிரோதமாக நுழைந்தார்கள் என்று அரசாங்கங்கள் அவர்களைத் தண்டிக்கக் கூடாது.ஆனால், அமெரிக்காவில் அடைக்கலம் கோருகிறவர்கள் காவலில் வைக்கப்படுகிறார்கள்.அவர்களை அப்புறப்படுத்துவதற்காக அரசு வன்முறைகளைப் பயன்படுத்துகிறது.அவர்கள் அடைக்கலம் கோருவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன."
மியான்மர் நாட்டின் அடக்குமுறைகளிலிருந்து தப்பி அடைக்கலம் கோரி வந்த ரோஹியாங்கா மக்கள் திருப்பி அனுப்பப்படுகிற செய்திகள் மனித நேய நெஞ்சங்களைப் பதறவைக்கின்றன. சிரியாவிலிருந்து ஐரேப்பாவிற்கு அகதியாய் அடைக்கலம் நாடிச் சென்ற குடும்பத்தின் அந்த அலன் குர்தி என்ற மூன்று வயதுச்சிறுவனின் உடல் கடலில் மிதந்த காட்சி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் அகதிகளின் நிலைமைக்கு ஒரு உலக சாட்சியாக மறைய மறுக்கிறதே...
தேசிய இன உரிமை: "மனிதர்களின் தேசிய இன அடையாளம் பறிக்கப்படுவதை இந்த உரிமை தடுக்கிறது. வேறு சொற்களில் சொல்வதனால், வாதநியாமற்ற காரணத்திற்காக ஒருவரது குடியுரிமை உரிக்கப்படுவது சட்டமீறல்.தனக்கென ஒரு நாடில்லாத ஒருவர் எந்த நாட்டிலும் குடியுரிமை பெற முடிவதில்லை.இத்தகையவர்கள் இதர மனித உரிமை மீறல்களுக்கும் இரையாகக்கூடியவர்களாகிறார்கள்.உலகம் முழுக்க இப்படி நாடற்றவர்கள் ஒரு கோடிப்பேர் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது."
பூமி எல்லாருக்கும் பொதுவானது என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வது அழகாக இருந்தாலும், இவ்வாறு எந்த நாடும் அரவணைத்துக்கொள்ளாதவர்கள் இத்தனை பேர் உழல்வது அசிங்கமாக இருக்கிறதே. நிச்சயமாக இவர்கள் வெறொரு கோளிலிருந்து வந்தவர்கள் அல்ல. பூமியின் இயற்கையான எல்லைகள் அல்லாத செயற்கையான வரைகோடுகளால் பிரிக்கப்பட்ட எல்லைக்கோடுகளின் அரசியல் அல்லவா இதற்குக் காரணம்?
நடமாட்ட உரிமை: "அனைவருக்கும் தங்கள் நாட்டிற்குள் நடமாடவும், வேறு நாட்டிற்குச் செல்லவும், தங்கள் நாட்டிற்குத் திரும்பி வரவும் உரிமை இருக்கிறது. வடகொரியாவில் அரசின் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியே செல்வது ஒரு குற்றம்.மீறுகிறவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சிறை முகாம்களில் அடைக்கப்படலாம்.மூன்று தலைமுறைகளுக்கான சட்டவிதியாக இருப்பதால், அவர்களின் வாரிசுகள் கூட சிறையில் இருக்க நேரிடலாம்."
மற்ற நாடுகளில் அரசின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றுவர முடியுமா?'பாஸ்போர்ட்' என்பதே வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதி ஏற்பாடுதானே?ஆயினும் குடும்பத்திற்கே சிறை, தலைமுறைகளுக்கும் தண்டனை என்பது உணர்வை உறைந்துபோகச்செய்கிறது. எந்த அளவுக்கு அங்கே இந்த விதிகள் செயல்படுத்தப்படுகின்றன, வேறு பல நாடுகளிலும் கொஞ்சம் கூடக்குறைய இப்படிப்பட்ட உரிமை மிதிப்புச் சட்டங்களும் விதிகளும் இருகின்றனவா?தகவல்களைச் சேகரிக்கக்கூடியவர்கள் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம்.
ஓய்வெடுக்கும் உரிமை: "நியாயமான வேலை நேர வரம்புகள், ஊதியத்துடன் காலமுறை விடுமுறைகள் ஆகியவை இந்த உரிமைக்குள் வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் நியாயமற்ற பணி நேரங்களுக்கு உழைக்கிறார்கள், கூடுதல் நேரத்திற்கான ஈட்டுத்தொகை வழங்கப்படுவதில்லை.இனிப்புவகைகளுக்கான கடைகள் இவ்வாறு அதிக நேரம் வேலை வாங்குவதில் மோசமாகப் பெயரெடுத்தவை.பங்களாதேஷ் நாட்டின் ஆலைகளில் தொழிலாளர்கள் 16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்."
எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர வாழ்வு என்ற முழக்கத்தை சட்டப்பூர்வ நிகழ்வாக மாற்றிய போராட்ட எழுச்சியின் அடையாளமாக மே தினம் கொண்டாடப்படுகிறது. இப்போதோ அந்தக் கொண்டாட்டத்தை அர்த்தமற்றதாக்கும் உரிமைப்பறிப்புகள் சட்டப்பூர்வமாக்கப்படுகின்றன.இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை.அந்த முழக்கத்தைக் கொண்டாட்டமாக அல்லாமல் போராட்டமாக இன்னும் வலுவாக உலகத்தொழிலாளர்கள் ஒன்றுபட்டு எழுப்பியாக வேண்டிய காலம் இது.
சொத்துடைமைக்கான உரிமை: "இந்த உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் பல ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் உரிமை இல்லை.ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமை.ஆகவே, ஒரு பெண்ணின் கணவர் இறந்துபோகிறார் என்றால், நிலத்திற்கான உரிமை தந்தைக்கு அல்லது மைத்துனருக்குப் போய்ச்சேரும்.அதன் விளைவாக இந்த ஆண்கள் நிலத்தை விற்க முடியும்.பெரும்பாலும் அது பயிர் நிலமாக இருக்கும்.ஆகவே பெண்கள் தங்களது வீட்டை, சொத்தை, உணவுக்கான ஆதாரத்தை இழக்கிறார்கள்."
இந்தியாவில் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை, பிரதமர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் கொண்டுவந்தது, அதற்குப் பழமைவாதிகள் மரபின் பெயரால் தடைக்கல் போட்டது, அதன் காரணமாகவே அவர் பதவி விலகியது, பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கியதும் முதன் முதலாக இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது, பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது - இந்த வரலாற்றை நினைவில் கொள்வது அவசியம். இந்திய அரசமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சொத்துரிமையும் சேர்க்கப்பட்டிருந்தது, பின்னர் அது நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
டாஃபேன் மேக்டொனால் தன்னளவிலான முயற்சியில் இந்த 20 அடிப்படை உரிமை மீறல்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.ஐ.நா.பிரகடனத்தின் மற்ற உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டனவா? சட்டத்தின் முன் அங்கீகாரம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீர்வு பெறல், நிரூபிக்கப்படும் வரையில் குற்றமற்றவராகக் கருதப்படுதல், திருமணம் மற்றும் குடும்பம் அமைத்தல், மக்களாட்சி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமான நியாயமான உலகு, சமூகத்திற்கான பொறுப்புகள், இவ்வுரிமைகள் மாற்றமுடியாதவை என வரையறுக்கப்பட்டுள்ள அந்த 10 உரிமைகளின் நிலை இன்று எப்படியெல்லாம் இருக்கிறது? விடைகாண வேண்டிய, விவாதிக்க வேண்டிய நியாயமான வினாக்கள்.விடை காண்பதும் விவாதிப்பதும் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக அல்ல - அடிப்படை உரிமைகள் அனைத்தையும் உறுதிப்படுத்துவதற்காக.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications