நீங்கள் எந்தப் பக்கம்? - 8 தேர்தல் வாக்களிப்பா, புறக்கணிப்பா? - -சுப. வீரபாண்டியன்
1980 களின் இறுதியில், தோழர்கள் பெ.மணியரசன், தியாகு ஆகியோருடன் அறிமுகம் கிடைத்தது. அப்போது நான், அய்யா நெடுமாறன் அவர்களிடமிருந்து பெற்ற உணர்வுகளால், ஈழ ஆதரவாளனாகவும், விடுதலைப் புலிகள் ஆதரவாளனாகவும் இருந்தேன் எனினும், எந்த அமைப்பிலும் உறுப்பினனாக இல்லை.
இன்று தேர்தல் அரசியலில் முழுமையாகத் திமுக வை ஆதரித்துப் பரப்புரை செய்யும் என்னுடைய நிலை அன்று வேறாக இருந்தது. "தேர்தல் பாதை திருடர் பாதை" என்பது போன்ற முழக்கங்களால் அன்று நான் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். தேர்தல் என்பதே ஓர் ஏமாற்று வேலை, புரட்சி வெடித்தால் மட்டுமே, நாட்டின் நிலையை முற்றிலுமாக மாற்ற முடியும் என்று எண்ணியிருந்தேன்.
அப்போது என் கருத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயன்றவர் தோழர் மணியரசன்தான். அவரும், அவரது நண்பர்கள் சிலரும், சிபிஎம் கட்சியிலிருந்து விலகிவந்து, எம்சிபிஐ (Marxist Communist Party of India) என்று ஒரு கட்சியை அப்போது தொடங்கியிருந்தனர். அவர்கள் அன்று தேர்தல் அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 'தேர்தலில் பங்கெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை' என்னும் கருத்தைத் தோழர் எடுத்துச் சொன்னார். அப்போதும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அடுத்த சந்திப்பில், லெனின் எழுதியுள்ள "இடதுசாரி கம்யுனிசம் - ஓர் இளம்பருவக் கோளாறு" (Left Wing Communism - An Infantile Disorder) என்னும் நூலைக் கொடுத்து, இதனைப் படித்துப் பாருங்கள், தெளிவு பிறக்கும் என்றார். அந்த நூலில்,
"1906 ஆம் ஆண்டில் பிற்போக்கான நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த
போல்ஷ்விக்குகள், அந்த முடிவு தவறானதென
உணர்கின்றனர். பின்னர் 1908 ஆம் ஆண்டில் மிகவும்
பிற்போக்கான நாடாளுமன்றத்தில்
பங்கெடுக்க முடிவுசெய்கின்றனர். வெகுஜன வேலை நிறுத்தங்கள் ஒரு
எழுச்சியாக வேகமாய்
வளர்ச்சியடையும் சூழல் இல்லாதபோது
நாடாளுமன்றம் பகிஷ்கரிக்கப்படுவது
பெருந்தவறாகிவிடும்" என்று எச்சரிக்கிறார் லெனின்.
அந்த நூலைப் படித்து முடித்த பிறகும், என் கருத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதோடு, அந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துகள் அன்று எனக்கு முழுமையாகப் புரியவும் இல்லை. அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு நடை எனக்கு எளிதானதாகவும் இல்லை.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம் ஆகியவற்றுடன் கூட்டணியில் பங்கேற்று, ஒரே ஒரு தொகுதியில் மணியரசன் கட்சியும் போட்டியிட்டது. கடலூர் தொகுதியில் தேவநாதன் என்னும் தோழரை அவர்கள் வேட்பாளராக நிறுத்தினர்.
காலங்கள் மாறியபொழுது. கருத்துகளும் மாறின. இப்போது இருவரும் இடம் மாறி நிற்கிறோம்! நான் தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டு, நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும், திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முழுமையாக ஆதரிக்கிறேன். அவரோ, தேர்தல் புறக்கணிப்புப் பாதைக்கு வந்துவிட்டார். இது இரண்டு தனி மனிதர்களின் மாற்றம் பற்றிய விவாதம் அன்று. இருவேறு கருத்துகள் இடம்பெயர்ந்துள்ள செய்தி. இவற்றுள் எது சரி - தேர்தலில் வாக்களிப்பது சரியா, தேர்தலைப் புறக்கணிப்பது சரியா என்னும் வினா நம்முன் உள்ளது.
தேர்தலில் வாக்களிப்பது இயல்பானது. மிகப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்ட முறை அதுதான். வாக்களிக்காதவர்களிலும், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வாக்குச் சாவடிக்குச் செல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவானதே. அலட்சியம், இயலாமை காரணமாகவே பலர் வாக்களிப்பதில்லை. ஆகவே அவர்கள் தேர்தல் புறக்கணிப்பாளர்கள் இல்லை. எவ்வாறாயினும், ஏன் மிக மிகச் சிலர் வாக்களிக்கக் கூடாது என்றும், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் என்பதை நாம் எண்ணிட வேண்டியுள்ளது.
எந்த ஒரு கட்சியின் மீதும் நம்பிக்கையில்லை என்று கருதும் அமைப்பினர் அல்லது தனி மனிதர்கள் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். கொள்கை அடிப்படையில், இந்திய அமைப்பு முறை ஓர் ஏகாதிபத்திய அமைப்பாக உள்ளது, இங்குள்ள மாநில அரசுகள் வெறும் கங்காணி வேலைதான் செய்கின்றன என்று கருதி இந்தத் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களும் உண்டு.
அதிலும் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று வாக்குச்சாவடிக்கே போகாமல் இருப்பது. இன்னொன்று, அங்கு போய், 49(ஓ) விதியின்கீழ் நோட்டாவிற்கு (அதாவது யாருக்கும் என் வாக்கு இல்லை) வாக்களிப்பது! ஒன்று தேர்தல் புறக்கணிப்பு, இன்னொன்று, வேட்பாளர் புறக்கணிப்பு.
30 ஆண்டுகளுக்கு முன்னால், தேர்தல் புறக்கணிப்புக் கோட்பாடு பல அமைப்புகளிடம் இருந்தது. இன்று அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போதும் அதனை உறுதியாக முன் மொழியும் அமைப்புகள், பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் ஒரு சில எம்.எல். அமைப்புகள் மட்டுமே! ஏறத்தாழ அந்தக் கோட்பாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இருப்பினும், தேர்தல் புறக்கணிப்பால் என்ன விளைவு ஏற்படும்? அதனால் யார் நன்மை அடைவார்கள்? இந்த இரண்டு வினாக்களுக்கும் விடையைக் கண்டறிந்தால், தேர்தலைப் புறக்கணிப்பது சரியா, தவறா என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
தேர்தலைப் புறக்கணிப்பதால், தேர்தல் நின்றுவிடாது.வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால் கூட, அளிக்கப்பட்ட வாக்குகளில் யார் கூடுதலாகப் பெற்றுள்ளாரோ, அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்மூலம், பெரும்பான்மையினரின் கருத்து என்னவென்றே தெரியாமல் போய்விடும். வாக்களித்த சிறுபான்மையினரின் விருப்பத்திற்கேற்ப ஒருவர் வெற்றி பெறுவார்.
புறக்கணிப்பு முறையால், இன்னொரு பெரும் ஆபத்தும் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் மோசமானவர்கள் என்றே கூட வைத்துக் கொள்ளலாம். அந்த நிலையிலும், நம் வாக்கு யாருக்குப் போகும்? 'உள்ளதில் நல்லது' என்னும் விதிப்படி, யார் ஓரளவு ஏற்புடையவர்களோ, அவர்களுக்கே நாம் வாக்களிப்போம். யாருக்கும் வாக்களிக்கவில்லையென்றால், அந்த 'சுமாரானவருக்கு' வாக்குகள் குறையும். அதன்மூலம், அவரைவிட மோசமானவருக்குத்தானே பயன் கிடைக்கும்! எனவே, தேர்தல் புறக்கணிப்பு என்பது, இருப்பவர்களில் யார் மிக மோசமானவர்களோ, அவர்களுக்கு மறைமுகமாக உதவுவதாகத்தான் அமையும்.
இந்தக் குற்றச்சாற்றிலிருந்து விடுபடுவதற்காக, தேர்தல் புறக்கணிப்பாளர்கள் இன்னொரு உத்தியைக் கையாள்கின்றனர். இங்கு எல்லோருமே மோசமானவர்கள்தாம் என்கின்றனர். இவர்களுக்குள் இவர் மேல்,இவர் கீழ் என்று பிரிக்க முடியாது என்று சொல்லி விடுகின்றனர். அதாவது, சமமற்றவர்களைச் சமமாக மதிப்பிடுகின்றனர். பாஜக வின் குறை ஒன்றை எடுத்துக்காட்டினால், ஏன் காங்கிரஸ் கட்சியில் மட்டும் குறையில்லையா என்று கேட்கின்றனர். அதிமுக வைப் பற்றிப் பேசும்போது, உடனே திமுக வும் இப்படித்தான் என்று இருவரையும் சமப்படுத்துகின்றனர். மறைமுகமாக பாஜக, அதிமுக இரண்டையும் காப்பாற்றும் முயற்சிதான் இது!
உலகில் எந்த இரு அமைப்பும், இரு மனிதர்களும் ஒரே மாதிரி சமமாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொருவிதமான இயங்கியல் போக்கு உண்டு. ஒன்றே கூட, எப்போதும் அதே ஒன்றாக இருப்பதில்லை. நிலைமறுப்பின் நிலைமறுப்பே இயங்கியல் என்பதை அனைவரும் அறிவோம். அப்படியிருக்க, இரண்டு கட்சிகளை, ஏற்றத்தாழ்வே இல்லாமல், ஒரே இடத்த்தில் வைத்துப் பார்ப்பது, ஒன்றைக் கீழிறக்கி, இன்னொன்றைக் காப்பாற்றுவதற்காகவே!
சோதனைக்காக, தோழர்கள் மணியரசன், தியாகு போன்ற நண்பர்களிடம், பாஜக அல்லது அதிமுக பற்றி ஒரு வினாவை எழுப்புங்கள். உடனே அவர்கள், காங்கிரஸ், திமுக இரண்டையும் கொண்டுவந்து சேர்த்துத்தான் விடை சொல்வார்கள்! கேட்ட கேள்விக்கு நேரடியாக விடை சொல்லவே மாட்டார்கள்.
தோழர் தியாகுவின் தமிழ்த்தேச விடுதலை இயக்கம், வரும் தேர்தலில், வேறு சில அமைப்புகளுடன் இணைந்து, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும்,'பாசிச பாஜகவை வீழ்த்துவோம்' என்று பரப்புரை செய்ய முடிவெடுத்து உள்ளது. ஆனால் அந்த 20 தொகுதிகளிலும் கூட, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்களாம். இது குறித்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"மூலவுத்தி வகையில் இந்தியத் தேர்தல் முறையில்
பங்குபற்றும் வாய்ப்பில்லாதவர்களாக நாம் இருந்த போதும்
குறுவுத்தி வகையில் தேர்தல் அரசியலில் இடையீடு செய்வதில்
நமக்குத் தயக்கமில்லை" என்கிறார். (இந்த அறிக்கையும் கமல்ஹாசன் எழுதியது போலவே உள்ளதே!!!) மேலும் அவர் அந்த அறிக்கையில்,
"இப்போது வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் பாசிச பாரதிய
சனதாக் கட்சி தமிழகத்தில் கால் பதிக்க முயன்று வரும்
பகைப்புலத்தில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, "பாசிச
பாசகவை வீழ்த்துவோம்" என்ற முழக்கத்துடன் ஒருங்கிணைந்துள்ள
அமைப்புகள் சார்பில் பாசகவை எதிர்த்து வாக்களிக்குமாறு தமிழ்
மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடிவெடுத்துள்ளோம்.
மற்றத் தொகுதிகளைப் பொறுத்த வரை பாசக ஆதரவுக்
கட்சிகளையும் தோற்கடிக்குமாறு அழைப்பு விடலாமா? என்று
கருதிப் பார்த்தால், பெரும்பான்மைத் தொகுதிகளில் இப்படிச்
செய்வது புறநோக்கில் திமுகவை ஆளும்கட்சியாக்குவதற்கு
அளிக்கும் ஆதரவாக அமைந்து, மாநில ஆட்சியால் பயனில்லை
என்ற நம் மூலவுத்தி நோக்கிற்கு முரணாக அமைந்து விடும்." என்று குறிப்பிடுகின்றார்.
ஆகமொத்தம், திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அந்த அறிக்கையின் கவனம் பதிந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. எவ்வாறாயினும், இவ்வமைப்புகள், தேர்தலபுறக்கணிப்பு என்ற நிலையை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. .
தேர்தல் புறக்கணிப்பில் இன்றும் உறுதியாக இருப்பதாகக் கூறும், தோழர் மணியரசனின் கட்சியும், அதில் பல தளர்வுகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. முன்பெல்லாம், 'தேர்தலைப் புறக்கணிப்போம்' என்ற தலைப்பில், ஊர் ஊராகக் கூட்டங்கள் நடத்துவார்கள். பல ஆண்டுகளுக்கு முன், அவர்களோடு இணைந்து நானும் அப்படப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். இப்போது அப்படி எந்தக் கூட்டமும் நடப்பதாகத் தெரியவில்லை. அதற்கான விளக்கத்தைத் தோழர் மணியரசனிடமே, தொலைபேசி மூலம் கேட்டேன்.
"மக்களிடம் அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், விட்டுவிட்டோம்" என்று கூறினார். "சரி, உங்கள் ஏட்டில் (தமிழர் கண்ணூட்டம்) கூட, இம்மாதம் அது குறித்து ஏதும் எழுதவில்லையே?" என்று கேட்டேன். "நாங்கள் யாருக்கும் வாக்களியுங்கள் என்று எழுதியிருக்கிறோமா?" என்று திருப்பிக் கேட்டார். அதன்பின் நேரடியாகவே, "நீங்கள் ஆதரிக்கும் சீமான், தேர்தலில் போட்டியிடுவதால், தேர்தல் புறக்கணிப்பில் நீங்கள் முனைப்பு காட்டவில்லையா?" என்று கேட்டதற்கு, "நாங்கள் எங்காவது சீமான் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருக்கிறோமா?" என்றார்.
"தேர்தலைப் புறக்கணித்த பின், உங்கள் குறிக்கோளை அடைவதற்கு மாற்று வழி என்ன வைத்துள்ளீர்களா?" என்று கேட்டபோது, "இப்போதே சல்லிக்கட்டு போன்ற மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். எதிர்காலத்தில், லட்சியத்தை நோக்கிக் கட்டமைக்கப்பட்ட போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்" என்று சொன்னார். 'லட்சியம் என்றால் எது?' என்று கேட்டேன். "இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியம்" என்றார். அதாவது தனித் தமிழ்நாடுதானே என்றேன். ""இறையாண்மை கொண்ட தமிழ்த்தேசியம்" என்பதுதான் எங்களின் சொல்லாடல் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
மேலே உள்ள செய்திகளின் மூலம், தேர்தல் புறக்கணிப்பால், மோசமான கட்சிகள் பயன் அடைவதைத் தவிர, வேறு ஒரு பயனையும் பெற இயலாது என்றே நான் புரிந்து கொள்கின்றேன்.
எனவே நான் தேர்தல் வாக்களிப்பின் பக்கம்! நீங்கள் எந்தப் பக்கம்?
(கேள்வி தொடரும்)












Click it and Unblock the Notifications