For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் எந்தப் பக்கம் - பகுதி 4... சாதியா, சமூக நீதியா? - பேரா. சுப.வீரபாண்டியன்

Google Oneindia Tamil News

சிலவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் முரண் போலத் தெரியும். ஆழ்ந்து பார்க்கையில் வேறு பொருள் புரியும்!

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்று சொன்ன வள்ளுவர், இன்னொரு குறட்பாவில் "அறிவினான் ஆகுவதுண்டோ?" என்று கேட்பது முரண் என்றே கருத வைக்கும். ஆனால் இரண்டிற்குள்ளும் உள்ள ஓற்றுமையைத் திருக்குறள் தோய்வு நமக்கு உணர்த்தும்.

Prof. Subavee Article on Tamilnadu and Social Justice

அது போலத்தான், சாதி இல்லை என்று சொன்ன பெரியார், சாதிச் சங்கங்கள் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற செயலும் ஆகும். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், கோயில்களுக்குச் செல்ல விரும்புவோரைத் தடுக்காதீர்கள் என்று சொன்னதும் அத்தகையதே!

தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி, இந்தியச் சமூகமே சாதியச் சமூகம்தான் என்பதை நாம் !அறிவோம்! எனவே, சாதி இருக்கும்போது, சாதி அடிப்படையிலான சங்கங்கள் இருப்பதும் இயற்கையே!. எனினும், சங்கங்களின் அன்றைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் இடையே பல வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது.

அது குறித்து, 'புதிய குரல்' அமைப்பாளர் தோழர் ஓவியா, தன் கட்டுரை ஒன்றில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்.அன்று, சாதிச் சங்கங்கள் இரண்டு முதன்மையான நோக்கங்களைக் கொண்டிருந்தன என்பார் அவர். ஒன்று, ஒரு குறிப்பிட்ட சாதியினரை ஒருங்கிணைத்து, அச்சாதியினருக்கான உரிமைகளை வென்றெடுப்பது. இன்னொன்று, அச்சாதிக்குள் நலிந்திருப்போருக்கு வசதியாக இருப்பவர்கள் உதவுவது! சுருங்கச் சொன்னால், சின்னச் சின்னக் குழுக்களாகப் பிரிந்து வளர்ந்தபின், ஒட்டுமொத்தச் சமூகமும் சேர்ந்து வளர்வது!

இந்நோக்கம் கால ஓட்டத்தில் கரைந்து போயிற்று. சாதியின் அடிப்படைப் பண்பும், மிகத் தீய பண்புமான ஏற்றத்தாழ்வு, ஆண்டான் அடிமை உளவியல் ஆகியனவே வளர்ந்தோங்கின. அதன் விளைவாக, இன்றைய சாதிச் சங்கங்களில், வேறு இரண்டு தன்மைகள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று, 'நாம் ஆண்ட பரம்பரை, மற்றவர்கள் எல்லோரும் தமக்குக் கீழானவர்கள் என்னும் தேவையற்ற பெருமிதம். இன்னொன்று, மேல் கீழ் அடிப்படையில் வளர்க்கப்படும் சாதிப் பகையும், சாதி மோதல்களும்!

சாதிச் சங்கங்கள் சாதிக் கட்சிகளாக மாற்றம் பெற்றபின், சாதி உணர்வுகள் மேலும் இறுகத் தொடங்கின. பிற கட்சிகளும், சாதி அடிப்படையில் வாக்குகளைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்ட பிறகு, அரசியலில் வெற்றி தோல்விகளைச் சில இடங்களில் தீர்மானிக்கும் சக்திகளாகச் சாதிச் சங்கங்கள் மாறி விட்டன.

சாதி அடிப்படையிலான கட்சி, 1920 களின் இறுதியில் முதலில் காலூன்றியது. அதற்கு அப்போது ஒரு தேவையும் இருந்தது. ஆங்கிலேயர்கள் குற்றப் பரம்பரை (தடுப்பு) சட்டம் 1871 இல் கீழ், இந்தியாவில் உள்ள 127 சாதிகளைப் பட்டியலிட்டனர். அதன்கீழ் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குற்றப் பரம்பரை என்று 1920 இல் முத்திரை குத்தினர். அவர்களை எப்போதும் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தனர். ஊரில் எந்தக் குற்றம் நடந்தாலும், அவர்களையே முதலில் விசாரித்தனர்.

எல்லாவற்றையும் விடக் கொடுமையாக, அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் மறுநாள் காலை வரையில், காவல் நிலையத்தில் அல்லது, காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.தனி மனிதச் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான அந்த ஆணையை அம்மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆப்பநாடு என்று அழைக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த 19 கிராம மக்கள் அதனை ஒன்றுகூடி எதிர்த்தனர். தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கலவரங்கள் மூண்டன. 1926 ஆம் ஆண்டு, உசிலம்பட்டி அருகே ஒரு கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் மடிந்து போயினர்.

அப்போதுதான், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் அவர்கள் ஒரு கட்சியாய் உருவெடுத்தனர். தென் மாவட்டம் முழுவதும் அக்கட்சி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது.

இந்தியா விடுதலை பெற்றபின் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள். மாணிக்கவேல் நாயக்கர் காமன் வீல் கட்சியையும், எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் 'உழவர் உழைப்பாளர் கட்சியையும் உருவாக்கினார்கள். அவை இரண்டும் 1952 தேர்தலில் போட்டியிட்டு, சில தொகுதிகளில் வெற்றியையும் பெற்றன. மாணிக்கவேல் நாயக்கர் 1953 தொடங்கி, அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1989 இல் உருவான பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகள் என்று இக்கட்சிகளைக் குறிக்கலாம். இப்போது பல்வேறு சாதிகள், தங்களுக்கென்று கட்சிகள் தொடங்கி, வலிமையுடையனவாக உள்ளன.

சாதிச் சங்கங்களைப் போல, இக்கட்சிகளும் தம் சாதியினருக்குச் சில நன்மைகளைச் செய்துள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் காலப்போக்கில் நிலைமைகள் மாறத் தொடங்கின. பா ம க வின் போராட்டங்கள், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதி திராவிடர் மக்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறே, தேவேந்திர குல வேளாளர் என்று தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்று கோரும் பள்ளர் அல்லது மள்ளர் சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தினர் ஆகியோரும் கட்சிகளால் ஒருங்கிணைக்கப் பெற்றனர்.

ஆனால், எந்த நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை முன்வைத்தே இன்றும் அக்கட்சிகள் நகர்கின்றனவா என்று கேட்டால், எல்லா நேரங்களிலும் நம்மால் ஆம் என்று சொல்ல முடியவில்லை.

குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறிக் கூட்டணி அமைத்து, குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சில தேர்தல்களில் பெற்றுள்ளது. சில தேர்தல்களில், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தும் உள்ளது. மத்திய அமைச்சர் வரையிலான பதவியையும் பெற்றுள்ளது.

பெற்ற வெற்றிகளும், பதவிகளும், வன்னிய மக்களை, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளதா என்ற கேள்விக்கு, குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் இன்னும் உழைக்கும் மக்களாகவும், ஏழை மக்களாகவும்தான் உள்ளனர். தைலாபுரம் தோட்டம் மட்டுமே இன்று ஓர் அரண்மனையாக உயர்ந்துள்ளது.

திராவிடக் கட்சிகளோடு இனி எக்காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது என்று பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பலமுறை சத்தியம் செய்தார். ஆனால் அதில் நிலையாக நிற்கவே இல்லை. ஒருமுறை. அவர் மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்று தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஒன்றும் பயனில்லை. மாற்றம் ஏமாற்றம் ஆகிவிட்டது. மீண்டும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி தொடர்ந்தது.

இப்போதும் அமைச்சர்கள் தைலாபுரம் சென்று வந்து கொண்டுள்ளனர். அது இடஒதுக்கீடு குறித்துப் பேசுவதற்காக என்று சொல்லப்படுகிறது. அவ்வாறாயின் அது முறைப்படி சென்னை, தலைமைச் செயலகத்தில் அல்லவா நடக்க வேண்டும் என்று விவரம் அறிந்தவர்கள் கேட்கின்றனர். .தைலாபுரத்தில் நடப்பது தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தையாகத்தான் இருக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. .

அதிமுகவோடு மட்டுமில்லாமல், 2014 இல், பாஜகவுடனும் பா ம க கூட்டணி சேர்ந்தது. பாஜக முற்று முழுக்க இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. 1990 ஆம் ஆண்டே, மண்டலை எதிர்க்க, மறைமுகமாக (ராம்) மந்திரைக் கையில் எடுத்தவர்கள் அவர்கள். இப்போதும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு (E W S) 10% இடஒதுக்கீடு என்று சொல்லி, ஒரு மிகப் பெரிய சமுக அநீதிக்கு வழிவகுத்துக் கொண்டுள்ளனர். வன்னியர்கள் உள்ளிட்ட, இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் பாதிக்கும் திட்டம் அது. அதனைக் கொண்டுவந்த அவர்களோடுதான் இப்போதும் பா ம க கைகோத்து நிற்கிறது.

டாக்டர் கிருஷ்ணசாமியின் 'புதிய 'தமிழகம்' கட்சியும் பா ஜ க வுடன்தான் கூட்டணி . வைத்துக் கொள்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமியோ, ஒரு படி மேலே சென்று, நான் ஆர். எஸ் எஸ் ஆதரவாளன் என்று பேசுகிறார்.

ஆர் எஸ் எஸ் எப்போதும் சமூக நீதிக்கு எதிராகவே இருந்துள்ளது. இடஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய்விடும் என்று கூக்குரல் எழுப்பிய அவர்கள், இன்று உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்கின்றனர். இப்போது தகுதியும் திறமையும் போனால் குற்றமில்லையா? அவர்களுக்கு பார்ப்பன சாதி மேலாதிக்ககமும், பிற மதப் பகையுமே என்றும் முதன்மையானவை. அந்தச் சாதி மத வெறிக்கு, உழைக்கும் மக்களான மள்ளர்களை கிருஷ்ணசாமி ஆளாக்கப் போகின்றாரா?

அவர்கள் பாதையில் சென்றால், அம்மக்களுக்காக அன்று பாடுபட்ட இம்மானுவேல் போன்றவர்கள் கூட, பிற மதத்தினராகத்தான் தெரிவார்கள். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே, மதத்தின் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் பிளவுபடுத்தும். பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள்,தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் நிலை வரும்.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் கூடுதல், இப்போது மத மோதல்களையும் ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர்.

நம் நாட்டில், வருண சாதி முறை ஆழ வேரூன்றி இருக்கிறது. அதனை அழிப்பது அத்தனை எளிதன்று. உட்சாதிகளையெல்லாம் ஒருங்கிணைத்த, சாதிகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது சாதி அமைப்பை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

சாதி ஒழிப்பு என்னும் தன் நூலில் அவர் கூறியுள்ள செய்தியை நாம் கவனமாக உள்வாங்க வேண்டியுள்ளது. அவருடைய சொற்களிலேயே அதனை நம் பார்க்கலாம்.

"சாதி என்கிற அஸ்திவாரத்தின் மீது எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்கமுடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும், முழுமை அடையாது.

சாதிய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதை விட உட்சாதிகளுக்குள் நடை, உடை, பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இக்கண்ணோட்டத்திற்குக் காரணம். ஆனால், இந்தக் கண்ணோட்டம் தவறானது என்றே நான் கருதுகிறேன்.

உட்சாதிகளை ஒழிப்பது, சாதிகளை வலுப்படுத்தவே துணை போகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பை விட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணம் ஆகும்"

அவ்வாறாயின், சாதிகளை ஒழிப்பதற்கு அவர் கூறும் வழி என்ன? சமபந்தி விருந்து என்பதெல்லாம் கூட, பெரிய பயனைத் தந்துவிடாது என்கிறார். கலப்புத் திருமணம் (சாதி மறுப்புத் திருமணம்) என்பதை அம்பேத்கர் பரிந்துரைக்கிறார். அதனையும் கூட இன்றைய சமூக நடப்பு நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கிறது என்பது வேறு செய்தி. அது குறித்து விரிவாகப் பேச வேண்டியுள்ளது. எனினும், அத்தகைய திருமணங்கள் சாதிகளின் இறுக்கத்தை உடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அதனால்தான், சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை ஆர் எஸ் எஸ் பரிவாரங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. காதலர் நாள் என்பதைக் கூட ஒழித்து விட வேண்டும் என்று பல வன்முறைகளை அந்த நாளில் கட்டவிழ்த்து விடுகிறது. காதல் சாதி, மதங்களை உடைக்கும் என்பதே அவர்களின் கவலை. அப்படிப்பட்டவர்களுடன், தேர்தலுக்காகக் கூட்டணி சேர்வோர் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் காவலர்களாக இருப்பார்கள்? சமூக நீதியை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

தேர்தலில் சாதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது உண்மைதான். இந்தத் தேர்தல் முறையை மாற்றாத வரையில், அதனைத் தவிர்க்க முடியாது என்பதே உண்மை. விகிதாசாரத் தேர்தல் முறை (Proportionate Electoral System ) வரும் வரையில், இந்நிலை தேர்தலில் நீடிக்கவே செய்யும். அம்முறை வந்துவிடுமானால், இத்தொகுதிக்கு இவர் வேட்பாளர் என்னும் நிலை மாறி, ஒவ்வொரு கட்சியும் பெறும் மொத்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அவரவர்க்கு உரிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அது உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை.

எனவே அது பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதை விட, சமூகத்தில் சாதி எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதுமே உடனடித் தேவைகளாக உள்ளன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளது. இந்தச் சிந்தனை ஏதுமின்றி, சாதியின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் தலைவர்கள் சிலரின் பேராசைக்கு நாட்டை நாம் பலி கொடுத்துவிடக் கூடாது.

ஆதலால், சாதிப் பெருமிதம், சாதிப் பகை வளர்ப்போரைப் புறந்தள்ளி, சாதிகளுக்கான சமூக நீதியை வளர்த்தெடுப்பதே இன்று நம் முன்னால் உள்ள பணி. ஆம், சாதிக்கும், சமூக நீதிக்கும் இடையில் ஒரு போர் இப்போது நடந்து கொண்டுள்ளது. நாம் எந்தப் பக்கம் என்பதைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.

நான் சமூக நீதியின் பக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?

பகுதி [1, 2, 3, 4, 5]

English summary
Here is an article written by Prof. Subavee Article on Tamilnadu and Social Justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X