"இதை" செய்தால் தங்கம் விலை தாறுமாறாக குறையும்.. ஆனா பல ஆயிரம் பேர் வேலை போகும்! புதிய குண்டை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலையைக் குறைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார். அதேநேரம் தங்கம் விலையைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படலாம் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மக்கள் யோசிக்கக் கூட முடியாத அளவுக்குத் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இப்போது இந்தியாவில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிட்டதட்ட ஒரு வாரமாக ரூ.8900- 9000 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இந்தளவுக்கு பணத்தைக் கொடுத்து மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
இதனால் மக்கள் தங்கம் விலை எப்போது குறையும்.. தங்கம் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலையை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதேநேரம் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம், சில்வர், பிளாட்டினம் ஆகியவற்றை வாங்கினால் அது பொருளாதாரத்திற்கு எந்தவொரு பயனையும் தராது. அதை விற்று நாம் செலவு செய்யும் வரை அதில் எந்த நன்மையும் இல்லை. இதன் காரணமாகவே அரசு தங்கத்தை வாங்குவதைத் தடுக்க நினைக்கும். அந்த அரசு என்று இல்லை.. எந்தவொரு அரசாக இருந்தாலும் மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தடுக்கவே பார்ப்பார்கள்.
இதை செய்தால் குறையும்
வட்டி விகிதத்தை அதிகமாக்கினால் தங்கம் விலை குறையும். ஆனால், வட்டி விகிதத்தை உயர்த்தினால் இந்தியாவின் சில பணக்காரர்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும். ஏனென்றால் அவர்கள் அதிக அளவுக்குக் கடன் வாங்கியுள்ளனர்.
ஆனால் பெரிய சிக்கல் ஏற்படும்
வங்கியிலேயே எனக்கு 9% வரை வட்டி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது நான் ஏன் தங்கத்தை வாங்க வேண்டும். இதுபோல 5 ஆண்டுகள் வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருந்தால் தங்கம் விலை குறையும். இதுபோல இருந்தால் பணவீக்கம் கட்டுக்குள் வரும். பொருளாதாரம் பாதிப்படையும். வேலைவாய்ப்பு குறையும். ஆனால், இதுபோல வட்டி விகிதத்தை அதிகமாக வைத்தால் மட்டுமே தங்கம் விலையும் தேவையும் குறையும்" என்றார்.
அதாவது தங்கம் விலை குறைய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். மக்கள் வங்கியிலேயே நல்ல வட்டி கிடைத்தால் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள். அப்போது தங்கத்தின் தேவை மெல்லக் குறைந்து விலையும் குறையும் என்பதே அவரது கருத்து. ஆனால், இது நடந்தால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும்.. வேலைவாய்ப்பு இழப்புகள் அதிகரிக்கும் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
தங்கம் விலை எப்படி இருக்கும்!
அப்போ வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி தான் இருக்கப் போகிறது என்பது குறித்த கேள்விக்கு அவர், "தற்போதுள்ள சூழல் தொடர்ந்தால் தங்கம் விலை உயரவே செய்யும். அதிலும் டிரம்ப் கொண்டு வந்துள்ள ப்யூட்டிஃபுல் மசோதா நிறைவேறினால்.. அவர்கள் அதிகம் கடன் வாங்குவார்கள். இல்லாத பணத்தைச் செலவு செய்வதாக அர்த்தம். இதனால் அழுத்தம் அதிகரிக்கும் தங்கம் விலை உயரும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications