இப்போது தங்கம் வாங்க வேண்டாம்.. ட்விஸ்ட் கொடுத்த ஆனந்த் சீனிவாசன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பைத் தங்கமே கொடுக்கும் என்பதால் அதை வாங்கலாம் என ஐடியா கொடுப்பவர் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஆனால், அவரே இப்போது தங்கத்தை வாங்க வேண்டாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்பதே சரியாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார். அவர் இதுபோல சொல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒரு நாள் குறைந்தாலும் கூட வட்டியும் முதலும் சேர்ந்து மறுநாள் தங்கம் விலை உயர்ந்துவிடுகிறது. இப்படித் தங்கம் விலை நிற்காமல் உயர்வதால் இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பதில் மக்களிடையே குழப்பம் இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்கம் விலை தாறுமாறாக ஏறியதற்கான காரணத்தை விளக்கியுள்ள பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இப்போது தங்கத்தை வாங்காமல் கொஞ்சம் காத்திருப்பதே சரியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இது தங்கம் விலை இப்போது 14500ஐ தாண்டிவிட்டது.. 24 கேரட் தங்கம் வரி எல்லாம் சேர்த்தால் ஒரு கிராம் 16,000ஐ தொட்டுவிட்டது. இந்த நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கோல்ட்மேன் சாக்ஸ் என்ற பிரபல முதலீட்டு நிறுவனம், 2026 டிசம்பரில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4800 டாலரை எட்டிவிடும் என்றனர். ஆனால், ஜனவரி மாதமே முடியவில்லை அதற்குள் 4800 டாலரை தாண்டிவிட்டது. இப்போது 4870ஐ தாண்டிவிட்டது. அடுத்து யூபிஎஸ் என்ற நிறுவனம் செப்டம்பருக்குள் 5000 டாலருக்கு போகும் என்றார். இதேபோல டிரம்ப் இரண்டு குண்டை இறக்கினால் நாளைக்கே கூட 5000 டாலர் போய்விடும். அதாவது தங்கம் விலை எல்லா டார்கெட்களையும் அடைந்துவிட்டது.
தங்கம் விலை சரியலாம்
இப்போது தங்கம் விலை ரூ.15,000ஐ எட்டவிட்டது. அது இங்கிருந்து சரிந்தாலும் ரூ.12,500 வரை தான் போகும்.. ஏன் 12,500 எனச் சொல்கிறேன் என்றால் தங்கம் விலை 10% வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. 10% சரிய வாய்ப்பு பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது. டிரம்பிற்கு நல்ல புத்தி வந்து, கிரீன்லாந்துடன் கட்டிப்பிடி வைத்தியம் தான்.. நான் கிரீன்லாந்து பற்றி எல்லாம் பேசவே இல்லையே.. நானும் அவர்களும் நண்பர்கள் என பேக் அடித்தால் தங்கம் விலை 10% வரை சரிந்து, சர்வதேச சந்தையில் 4400 டாலர் வரை போகும்.
ஆனால், அதேநேரம் இரண்டு குண்டை இறக்கிறேன் பார் எனச் சொன்னால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறும். எனவே, குறுகிய காலத்தில் தங்கம் விலை என்னவாகும் என்பது நமக்குத் தெரியாது. இன்று தங்கமும் கிட்டத்தட்ட பங்குச்சந்தை மாதிரி ஏற்றம் இறக்கம் என ஆகிவிட்டது. எனவே, இன்று வாங்கிவிட்டு 5 ஆண்டுகள் மறந்துவிடுவேன் என்றால் மட்டுமே தங்கத்தை வாங்குங்கள். இல்லையென்றால் டிரம்ப்பிற்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
தங்கம்
டிரம்ப்பிற்கு நல்ல புத்தி வரவில்லை என்றால் தங்கம் விலை இன்றும் எகிறும். எனவே, குறுகிய காலத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடே இருக்கும். தங்கம் விலை ரூ.12,500க்கு வந்தால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம்.. இப்போதைய சூழலில் வேடிக்கை பார்ப்பதே சிறந்தது. தேவையில்லாமல் உள்ளே போய் மாட்டிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இப்போது தங்கம் விலை எப்படிப் போகும் என்பதில் தெளிவான திசை இல்லை.
யாருக்கும் தெரியாது
எனவே, இப்போது வீட்டில் கல்யாணம், காதுகுத்து என எதாவது இருந்தால் மட்டும் தங்கத்தை வாங்குங்கள். இப்போது கொஞ்சம் காத்திருப்பதே சரியாக இருக்கும். டிரம்ப் திடீரெனப் பல்டி அடித்தால் நாம் வருத்தப்படக்கூடாது. அதேநேரம் விலை குறையும் என்றும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications