"அந்த 4 பேர்.." உலக தங்க மார்கெட்டையே ஆட்டுவிப்பதே இவங்க தான்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. தங்கம் விலை இனிமேல் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பதே இப்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாக விளக்கத்தைக் கொடுத்துள்ள ஆனந்த் சீனிவாசன், இதன் விலையைத் தீர்மானிப்பது யார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
வரலாறு காணாத அளவுக்கு இந்தாண்டு தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் சரிந்தாலும் கூட தொடர்ச்சியா அது உயர்ந்தே வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இது குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "திங்கள்கிழமை உச்சத்திற்குப் போன தங்கம் விலை ரூ.12500 தாண்டியது. நேற்று அது சற்று குறைந்திருந்தது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,350க்கு விற்கப்பட்டது. மேலேயும் கீழேயும் இறங்கினாலும் தங்கமும் சில்வரும் தொடர்ந்து உயரவே செய்யும். ஆனால், சில்வரில் கவனம் தேவை. அது ரிசர்வ் கரன்சி இல்லை என்பதால் அதில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். சில்வர் ஏற்றுமதிக்குச் சீனா விதித்த கட்டுப்பாடு காரணமாகவே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதில் பிரச்சினை வரக்கூடும். சில்வரில் மாட்டிக் கொண்டால் பெரிதாகச் சிக்க வாய்ப்பு பிரகாசம். எனவே, கவனம்!
தங்கம் vs வெள்ளி
தங்கம் விலை சீராகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவசரப் பணத் தேவை என்றால் தங்கத்தை எடுத்துச் சென்று வங்கியில் வைத்தால் போதும்.. மீண்டும் பணத்தைச் செலுத்தினால் தங்கத்தையும் எடுத்துவிடலாம். ஆனால், சில்வரை அதுபோல ஈஸியாக பணமாக்க முடியாது. இப்போது சில்வர் இஎடிஎஃப் என சிலவற்றை எடுத்து வருகிறார்கள். ட்ராக்கிங் எரர் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது. இன்று கூட வெள்ளி வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கு இடையேயான வேறுபாடு அதிகம். வெள்ளி வாங்குவது ரிஸ்க் என்றே இப்போதும் நான் சொல்கிறேன்.
கடந்த நவம்பரில் இடிஎஃப் ஆக தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். வழக்கமாக வருவதில் 50% தான் வந்துள்ளது. இதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. வழக்கமான ஒன்றாகவே பார்க்கிறேன். இப்போது தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ஒரு தரப்பினர் இடிஎஃப்பை விற்று நகையாக வாங்கலாம். எனக்குத் தெரிந்தே பலரும் செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்கம் விலை இதுவே அதிகம்.. இதற்கு மேல் உயராது என நினைத்து விற்று இருக்கலாம்.
அந்த 4 பேர்
இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் வருமா என சிலர் கேட்கிறார்கள். இல்லை இது தங்கத்தின் விலையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஜெரம் பவுல் (அமெரிக்க பெடரல் வங்கி தலைவர்), ஜி ஜின்பிங் (சீன அதிபர்), ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்), புதின் (ரஷ்ய அதிபர்) ஆகிய 4 பேர் தான் முக்கியம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். உள்ளூர் மார்கெட்டில் என்ன நடந்தாலும் கவலை இல்லை.
ரூபாய் மதிப்பு
இந்தியாவில் ரூபாய் மதிப்பும் கூட வேகமாகச் சரிகிறது. ரூபாய் மதிப்பு சீக்கிரம் கீழே சரிகிறதோ.. அந்தளவுக்குத் தங்கம் விலை மேலே ஏறும். சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையாக இருந்தாலும் ரூபாய் மதிப்பு சரிவதால் இந்தியாவில் தங்கம் விலை உயர வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது. ஏனென்றால் ரூபாய் மதிப்பு அந்தளவுக்கு வேகமாகச் சரிகிறது. இன்னும் 8 ரூபாய் சரிந்தால் (டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு) 100ஐ தொட்டுவிடும். அப்போது தங்கம் விலை உயரவே செய்யும்" என்றார்.












Click it and Unblock the Notifications