தங்கம் விலை தடாலடியா இறங்குதே.. இதெல்லாம் சும்மா! இனிமேல்தான் இருக்கு சம்பவம்..எக்ஸ்பெர்ட்ஸ்
சென்னை: தங்கம் விலை தினம் தினம் புது உச்சம் தொட்டப்படி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மீண்டும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் அப்படியே சரிந்து வருகிறது. காலையிலும் குறைந்து மாலையிலும் குறைந்து என இரு வேளைகளிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. இது இப்படியே தொடர்ந்து நீடிக்குமா இல்லை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துவிடுமா என்பது குறித்து கோல்ட் குரு சாந்தகுமார் பேட்டியளித்துள்ளார்.
தங்கம் விலை யாரும் தொட முடியாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை இல்லத்தரசிகளுக்கும் நகை பிரியர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதிரடியாக சரிந்து வருகிறது.

தங்கம் விலை கடும் சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்த நிலையில், மாலை ரூ.1,280 குறைந்தது. இதன் மூலம் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே போன தங்கம் விலை இன்று தலைகீழ் மாற்றமாக சரிந்துள்ளது வியப்பை கொடுத்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவு செய்து இருப்பதாலும், பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்து இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்ததாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தனர்.
தங்கம் விலை இனி எப்படி இருக்கும்?
எது எப்படியோ தங்கம் விலை மளமளவென ஒரே நாளில் சரிந்தது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை இப்படியே சரிவை சந்திக்குமா அல்லது அதிரடியாக உயருமா? என்று நகை பிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை இனி எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கோல்ட் குரு சாந்தகுமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
நகைகள் வாங்குவது குறைந்துள்ளது
தங்கத்தை நிறைய பேர் முதலீட்டு நோக்கத்துடன் காயின்ஸ் வடிவில் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் நகைகள் வாங்குவது கொஞ்சம் குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கூடி வரும் நிலையில் வெள்ளியிலும் காயின்ஸ், பார்கள் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
தங்கம் கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது என்றால், இந்த ஆண்டும் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. ஆனால் அளவு குறைந்துவிட்டது. இந்த ஆண்டு 800, 900 கிராம் விற்றாலே ஒரு கோடி வந்து விடுகிறது. அடுத்த 10, 15 வருடங்களில் தங்கம் விலை அரிய பொருளாக கூட மாற வாய்ப்புள்ளது.
9 மாதங்களில் முதல் முறை
தங்கம் விலையில் சின்ன திருத்தங்கள் இருந்தாலும், குறைந்தாலும் கூட ஏறுமுகத்தில்தான் இருக்கும். தொலைதூரத்தில் பார்த்தால் தங்கம் ஏறிக்கொண்டேதான் இருக்கும். தங்கம் விலை ஒரே நாளில் இந்த அளவிற்கு குறைந்தது கடந்த 6, 9 மாதங்களில் இதுவே முதல் முறை. ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் 2,400 குறைந்தது இதுவே முதல் முறை. இது எதனால் குறைந்து இருக்கிறது என்றால் சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்க கூடிய சில மாற்றங்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில கொள்கைகள் எடுத்துள்ளனர். அதனுடைய விளைவு தங்கத்தில் தாக்கம் ஏற்படுத்தி, தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து இருக்கிறது. இது ஒரு சின்ன மாற்றம் தான். குறுகிய காலத்தில்தான் இருக்கும். அதற்கப்புறம் மீண்டும் விலை ஏறத்தான் ஆரம்பிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications