ஒரே ஒரு ஹோம் லோன் EMI மிஸ் செய்தால் என்ன நடக்கும்! சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு போகுமா? முக்கிய தகவல்
சென்னை: பலரும் ஹோம் லோன் EMIஐ மட்டும் எப்படியாவது கட்டிவிடுவார்கள். மற்ற கடன்களில் சற்று அட்ஜெஸ்ட் செய்தாலும் கூட சட்ட நடவடிக்கைக்குப் பயந்து ஹோம் லோனை உரிய முறையில் கட்டி விடுவோம். அதையும் தாண்டி ஒரு EMI மிஸ் ஆனாலும் பலரும் பதறிவிடுவார்கள். இதுபோல எதிர்பாராத வகையில் மிஸ்ஸானால் என்ன நடக்கும்.. இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
சில நேரங்களில் நம்மையும் மீறி ஹோம் லோன் EMIஐ நாம் தவறவிட்டுவிடலாம்.. மாதச் சம்பளம் தாமதமாவது, அவசர மருத்துவச் செலவுகள் அல்லது பணப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இது நடக்கும். சில நேரங்களில் ஆடோ டெபிட் பிரச்சனையால் கூட இது நடக்கும். இதுபோல நடந்தால் முதலில் அனைவரும் பதறிப் போவார்கள்.

ஒரே ஒரு ஹோம் லோன் EMI
ஐயயோ, வங்கி என்னை வாராக் கடனாளி என்று அறிவித்துவிடுமா? எனது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா? குடும்பத்தினருக்கு அழைப்புகள் வருமா? எனப் பல கேள்விகள் வரும். உண்மையில் இதுபோல ஒரு இஎம்ஐ தொகையை மிஸ் செய்தால் என்ன நடக்கும் என்பது பலருக்கும் தெரியாது.
உங்கள் EMI தேதி முடிந்த பிறகும் பணம் வரவில்லை என்றால் அதை overdueஆக மார்க் செய்வார்கள். இது வங்கிகள் இன்டர்னலாக செய்யும் முத்திரை. இதற்கும் சிபில் ஸ்கோருக்கும் தொடர்பு இல்லை. அடுத்த சில நாட்களில் உங்களுக்கு நினைவூட்டல் மெசேஜ் வரும். அவை சிஸ்டம் மெசேஜ்ஜாகவே இருக்கும். அடுத்து கால் வரத் தொடங்கும். கால் வந்தாலும் சுமுகமாகவே பேசுவார்கள்.
என்ன நடக்கும்?
இது தற்செயலான தவறா அல்லது நிதிப் பிரச்சனைக்கான அறிகுறியா என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள். நீங்கள் அவர்கள் காலுக்கு பதிலளித்து, பணம் செலுத்துவதற்கான தெளிவான காலக்கெடுவை வழங்கினால், வங்கியின் அணுகுமுறை சுமுகமாகவே இருக்கும். நீங்கள் செலுத்தாமல் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால், போனை எடுக்காமல் விட்டாலே அது பிரச்சனையாக மாறும்.
ஒரு தவணை மட்டும் மிஸ்ஸானால், தாமதமான கட்டணம் அல்லது அபராத வட்டி நிச்சயமாகச் சேர்க்கப்படும். இது பெரிய தொகையாக இருக்காது. அதேநேரம் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் இது பெருகி அதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
கிரெடிட் ஸ்கோர்
பலரும் ஒரு இஎம்ஐ மிஸ் ஆனாலே கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 30 நாட்களுக்கு பிறகே பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கும். இந்தக் காலக்கெடுவுக்குள் நீங்கள் EMIஐ செலுத்திவிட்டால், பல வங்கிகள் அதைத் தவறவிட்ட தவணையாகக் கூட குறிக்காது.
ஒருவேளை கிரெடிட் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால்.. நிச்சயம் கிரெடிட் ஸ்கோர் குறையும். ஆனால், இந்தச் சரிவு எவ்வளவு தூரம் இருக்கும் என்பது உங்கள் கடந்த காலக் கடன் வரலாற்றைப் பொறுத்தது. நீங்கள் எப்போதும் சரியான நேரத்தில் EMI செலுத்தியிருந்தால், இதன் தாக்கம் குறைவாக இருக்கும். ஆனால் இதற்கு முன்பும் நீங்கள் கடன் தொகையை மிஸ் செய்திருந்தால் சிபில் ஸ்கோர் கொஞ்சம் மோசமாகவே சரியும். அதாவது ஒரு EMIஐ மிஸ் செய்வது பெரிய பிரச்சனையாக மாறாது. ஆனால், பல EMIகளை மிஸ் செய்வது ஆபத்தின் அறிகுறியாகவே வங்கி பார்க்கும்!
என்ன செய்ய வேண்டும்
எதிர்பாராத விதமாக ஒரு முறை மிஸ் ஆகிவிட்டால் வங்கிகள் கால் செய்யும்போது எடுத்துப் பேசுங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். அதுவே பெரும்பாலான சூழலில் போதுமானதாக இருக்கும். நீங்கள் போனை எடுக்காமல் இருந்தால் தான் வங்கி தரப்பு அதிகம் கவலை கொள்ளும். அப்போது உங்கள் கணக்கு 'overdue' என்ற நிலையிலிருந்து "stressed account" என்ற நிலைக்கு மாறும்.
மேலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வீட்டுக் கடன் 90 நாட்கள் வரை செலுத்தப்படாமல் இருந்தால் மட்டுமே Non-Performing Asset எனப்படும் NPAஆக மாறும் அறிவிக்கப்படும். அதன் பிறகே சட்ட நடவடிக்கை, ரிக்கவரி ஏஜெண்டுகள், சொத்து ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே ஒரு EMIஐ தவறவிடுவது உங்களை அந்த நிலைக்கு அழைத்துச் செல்லாது.
எச்சரிக்கை மணி
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரே ஒரு வீட்டுக் கடன் EMIஐ தவறவிடுவது ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தாது. ஆனால் அது ஒரு எச்சரிக்கை மணி. நீங்கள் விரைந்து செயல்பட்டால், ஏற்படும் சேதம் ஒரு சிறிய அபராதம் மற்றும் கிரெடிட் ஸ்கோரில் சிறிய பாதிப்புடன் முடிந்துவிடும். நீங்கள் அதை அலட்சியப்படுத்தினால் அல்லது வங்கி கால்களை புறக்கணித்தால் மட்டுமே பெரிய சிக்கலாக மாறும்.












Click it and Unblock the Notifications