ஐபோன் 17 EMIஐ முதலீடு செய்தால்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்! ஆனந்த் சீனிவாசன் ஸ்டைலில் யோசிங்க பாஸ்
சென்னை: இளைஞர்கள் பலரும் ஐபோன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், ஐபோன் விற்கும் விலைக்குப் பெரும்பாலானோரால் அதைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. இதனால் அவர்கள் இஎம்ஐ முறையைத் தேர்வு செய்கிறார்கள். அதேநேரம் நீங்கள் இஎம்ஐ கட்டும் அதே தொகையை முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு லாபம் வரும் என்று தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகிலேயே அதிக செல்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது.. என்ன தான் மற்ற நிறுவனங்கள் ஆண்டுக்குப் பல ரேட்களில் செல்போனை இறக்கினாலும் கூட ஐபோனுக்கு இருக்கும் மவுசு எப்போதுமே தனி தான். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வெளியாகும் ஐபோன்களை வாங்கவே மக்கள் காத்து கிடப்பார்கள்.

ஐபோன் 17
அப்படித் தான் கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரியஸை வெளியிட்டது. அதில் குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அனைவருக்கும் பிடித்த ஒரு மாடலாக இருந்தது. அதேநேரம் அதன் விலையை கேட்டால் நமக்கு தலையே சுற்றிவிடும். அடிப்படை 256 ஜிபி மாடலின் விலையே ரூ.1,50,000ஆக இருக்கிறது. இது சந்தையில் மிகவும் விலையுயர்ந்த கேஜெட்களில் ஒன்றாக உள்ளது.
இவ்வளவு ரேட் கொடுத்து பெரும்பாலான மக்களால் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை வாங்க முடியாது. இதனால் பலரும் இஎம்ஐ மூலமாகவே ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை வாங்குவார்கள். ஆனால், ஐபோனுக்கு இஎம்ஐ கட்டுவதற்குப் பதிலாக.. அந்தத் தொகையை முதலீடு செய்தால் என்ன நடக்கும் என ஆனந்த் சீனிவாசன் ஸ்டைலில் யோசித்து பார்த்துள்ளீர்களா? இந்தச் சிறிய மாற்றம் உங்கள் சேமிப்பில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்கலாம்!
எவ்வளவு கிடைக்கும்
ஐபோன் 17 ப்ரோவை 36 மாத இஎம்ஐ பிளானில் வாங்கினால் மாதம் ரூ. 4,200 கட்ட வேண்டும். அதே 36 மாதங்களுக்கு நீங்கள் இதே தொகையை முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட்டில் சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் என வைத்துக் கொண்டால். உங்கள் முதலீடு சுமார் ரூ. 1,76,600ஆக உயர்ந்திருக்கும். அதாவது ரூ.29,000 உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
இதே ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் 2 டிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 2,30,000 ஆகும். இந்த மாடலை வாங்கும் தொகையை அப்படியே இஎம்ஐ ஆக முதலீடு செய்தால்.. அதே 3 ஆண்டுகளில் உங்களுக்குச் சுமார் ரூ. 45,300 லாபம் கிடைக்கும்.
ஏன் முக்கியம்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "பிரீமியம் கேஜெட்கள் அல்லது ஆடம்பரப் பொருட்களில் செலவழிக்கும்போது உங்களுக்குக் குறுகிய காலத் திருப்தி கிடைக்கலாம்.. இருப்பினும், பிற்காலத்தில் அதிகத் தொகையைச் செலவழித்துவிட்டுமோ எனக் கவலைப்படுவீர்கள்.. அதேநேரம் அந்தத் தொகையை நீங்கள் முதலீடு செய்தால் அது எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தரும்" என்கிறார்கள்.
எப்போது வாங்கலாம்
அதற்காக ஐபோனை வாங்கவே கூடாது எனச் சொல்லவில்லை.. உங்களுக்கு நிஜமாகவே ஐபோன் தேவை தானா என்பதை யோசியுங்கள்.. புதிய ஐபோன் உங்கள் வாழ்க்கையையோ அல்லது உற்பத்தித்திறனையோ உண்மையாக மேம்படுத்தினால், அது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், மற்றவர்கள் வைத்திருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஐபோன் வாங்கினால் அது உங்களுக்கு நஷ்டத்தையே கொடுக்கும். அதே தொகையை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications