இனி வருமான வரியே இருக்காது.. எல்லோருக்கும் '0'டாக்ஸ்.. மிகப்பெரிய மாற்றம் வரபோகுது!
உலகப் பொருளாதாரம் வேகமாக மாறி வரும் நிலையில், வரி விதிப்பிலும் உலக நாடுளில் மாற்றம் வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஏஐ பெரும்பாலான வேலைகளை செய்யக்கூடிய இக்காலக்கட்டத்தில் கொள்கை உருவாக்குவது முதல் வர்த்தகம் செய்யும் முறை, வரி விதிப்பு, வரி வசூல் என அனைத்தும் மாறப்போகிறது.
இந்த நிலையில் வருமான வரிக்கு பதிலாக AI உள்கட்டமைப்புக்கு வரி விதிக்கும் புதிய ஐடியா பல நாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்லைன் வங்கி மான்சோ-வின் நிறுவனர் டாம் ப்ளூம்ஃபீல்ட், சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் இந்த முக்கியமான கருத்தை வெளியிட்டார்.

அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் வருமான வரி விதிப்பை முழுமையாக நீக்கிவிட்டு AI உள்கட்டமைப்புக்கு வரி விதிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். இந்த யோசனை உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
AI உள்கட்டமைப்புக்கு வரி
டாம் ப்ளூம்ஃபீல்ட் The Rest is Money என்ற பாட்காஸ்டில் பேசியபோது, மனித உழைப்பின் மீது வரி விதிப்பதை விட, கம்பியூட் அதாவது டேட்டா சென்டர்கள் உள்ளிட்ட AI உள்கட்டமைப்புக்கு வரி விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசு செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
தற்போது நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்தி வருவதால், இந்த மாற்றம் தேவைப்படுகிறது என்று அவர் விளக்கினார். இது அரசுக்கு புதிய வரி வருமான ஆதாரத்தை உருவாக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
மனிதர்களை மிஞ்சும் AI
AI தொழில்நுட்பம் ஏற்கனவே சில துறைகளில் மனிதர்களை மிஞ்சி செயல்படத் தொடங்கியுள்ளது என்று டாம் ப்ளூம்ஃபீல்ட் சுட்டிக்காட்டினார். பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களை விட AI கருவிகள் சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வரி கணக்கு, சாப்ட்வேர் டெவலப்பர் போன்ற வொயிட் காலர் (white-collar jobs) வேலைகளுக்கு இனி மனிதர்களின் தேவை குறையும் என்றும் அவர் எச்சரித்தார். தற்போது AI ஒரு சில துறைகளில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் 2026 இறுதிக்குள் இது பொதுமையான (generalizable) தொழில்நுட்பமாக மாறிவிடும் என்று அவர் கூறினார். இதனால் பல தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது.
அரசுக்கு புதிய வரி வருமானம்
டாம் ப்ளூம்ஃபீல்டின் கருத்துப்படி, AI உள்கட்டமைப்புக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசு பயன்படுத்தி பொதுச் செலவுகளைச் செய்யலாம். இது வருமான வரியை சார்ந்திருக்கும் தற்போதைய முறையை மாற்றும். நிறுவனங்கள் AI-ஐ அதிகம் பயன்படுத்தும் போது, அவர்களிடமிருந்து கிடைக்கும் வரி வருமானம் அரசுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த மாற்றம் 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த முக்கிய பிரச்சனை
ஏஐ (AI) துறையில் வேகமாக வளர்ச்சி நடைபெற்று வரும் நிலையில், நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தற்போது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றனர்: வேலை வாய்ப்புகள் குறைந்தால், மனிதர்களின் வருமானம் எவ்வாறு நிலைத்திருக்கப் போகிறது?
இந்த சவாலுக்கு உலகளவில் இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் பேசப்பட்டு வருகின்றன.
அனைவருக்கும் அடிப்படை வருமானம்
முதல் தீர்வாக "அனைவருக்கும் அடிப்படை வருமானம்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த முறையில், ஏஐ நிறுவனங்களிடமிருந்து அரசு வரி வசூலித்து, அந்த வருவாயை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும். இதன் மூலம், வேலை இல்லாத சூழலிலும் மக்கள் ஒரு குறைந்தபட்ச வருமானத்தைப் பெற முடியும். இந்த யோசனையை செயல்முறைப்படுத்தும் நோக்கில், டெத் துறையில் முன்னணி தலைவர்களில் ஒருவரான சாம் ஆல்ட்மன், ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 டாலர் வழங்கிய ஒரு பெரிய அளவிலான ஆய்வை மேற்கொண்டார். இப்படியான முயற்சிகள் எதிர்கால பொருளாதார அமைப்புக்கான அடித்தளமாக பார்க்கப்படுகின்றன.
சொத்து உரிமை பகிர்வு
இரண்டாவது அணுகுமுறை "அனைவருக்கும் சொத்து உரிமை" என்ற மாடல். இதில், பணத்தை நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக, ஏஐ நிறுவனங்களில் மக்களுக்கு பங்கு உரிமை வழங்கப்படும். இதனால், மக்கள் சம்பளத்திற்கு பதிலாக, நிறுவனங்களின் லாபத்தில் இருந்து பங்குதாரர்களாக லாபப் பங்குகளைப் பெறுவார்கள். இதற்காக, சாம் ஆல்ட்மன் முன்வைத்த "அமெரிக்கன் ஈக்விட்டி ஃபண்ட்" போன்ற யோசனைகள், பெரிய நிறுவனங்களின் ஒரு பகுதியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்த அணுகுமுறை நடைமுறைக்கு வந்தால், மக்கள் வெறும் ஊழியர்களாக இல்லாமல், நிறுவனங்களின் பங்குதாரர்களாக மாறும் ஒரு புதிய பொருளாதார சூழல் உருவாகும். இதேவேளையில் வருமான வரிக்கும் அவசியம் இல்லாமல் போகும். கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை உலக நாடுகள் ஆய்வு செய்து வருகிறது, ஏஐ அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் வேளையில் இத்தகைய மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.












Click it and Unblock the Notifications