டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ செய்த மிகப்பெரிய தவறு.. இனி ஒவ்வொரு நாளும் பிரச்சனை தான்!
இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை கொரோனா காலத்திற்குப் பிறகு சந்தையில் இருக்கும் தனது பங்குகளை திரும்ப பெற பைபேக் (Buyback) திட்டங்களை பெரிய அளவில் அறிவித்தன.
ஆனால் இப்போது அந்த முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. பங்குச் சந்தையின் உச்சத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த முடிவுகள், தற்போது இந்திய ஐடி நிறுவனங்களின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்கியுள்ளன. இதனால் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் மோசமான நிலையில் இருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் பைபேக் திட்டத்தால் அதன் சந்தை மதிப்பிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ரூ.1.24 லட்சம் கோடி
கடந்த சில ஆண்டுகளில் மூன்று பெரிய ஐடி நிறுவனங்களும் சேர்ந்து சுமார் ரூ.1.24 லட்சம் கோடி அளவுக்கு பைபேக் திட்டங்களை அறிவித்து சந்தையில் இருக்கும் பங்குகளை வாங்கியுள்ளது. இந்தத் தொகை மிகப் பெரியது.
ஒரு நிறுவனம் தங்கள் பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்கினால், அந்தப் பங்குகள் சந்தையில் தனது உண்மையான விலையை காட்டிலும் குறைந்து மதிப்பிடப்படுகின்றன என்று பொதுவாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் விஷயத்தில் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது.
இன்போசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோவின் நிலை
சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் ரூ.18,000 கோடி மதிப்பிலான பைபேக் திட்டத்தை அறிவித்தது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலை, தற்போதைய சந்தை விலையை விட 56 சதவீதம் அதிகம். இந்த இடைவெளி நிறுவனம் பங்குகளை உச்ச விலையில் திரும்பப் பெற்றதை தெளிவாகக் காட்டுகிறது. இதனால் அப்போது பங்குகளை விற்றவர்கள் லாபம் ஈட்டினர், ஆனால் நீண்டகால முதலீட்டாளர்கள் இப்போது நஷ்டத்தில் உள்ளனர்.
டிசிஎஸ் 2020 முதல் 2023 வரை மூன்று முறை பங்கு பைபேக் திட்டங்களை அறிவித்தது. அந்த நேரத்தில் டிசிஎஸ் பங்குகளின் P/E விகிதம் 34x, 39x மற்றும் 30x எனமிக உயர்ந்த நிலையில் இருந்தது. அந்த நேரங்களில் பங்குகள் ரூ.3,000, ரூ.4,500, ரூ.4,150 போன்ற உயர்ந்த விலையில் வாங்கப்பட்டன. அப்போது பங்கின் மதிப்பீடும் (valuation) மிகவும் உயரமாக இருந்தது.
ஆனால் இன்று அந்த பங்குகள் சுமார் ரூ.2,400 அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் என்ன நடந்தது என்றால், buyback-ல் பங்குகளை விற்றவர்கள் நல்ல லாபம் எடுத்துவிட்டார்கள். ஆனால் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து பங்குகளை வைத்திருந்தவர்கள் இப்போது 20% முதல் 47% வரை இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
தற்போது அந்தப் பங்குகளின் விலை CAGR அடிப்படையில் சுமார் 19 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது, buyback நடந்த சமயத்தில் இருந்த மதிப்பின் பாதி அளவுக்கு தான் இப்போது வர்த்தகம் ஆகிறது. இதே காலத்தில் நிப்டி 50 போன்ற குறியீடுகள் கூட 7% முதல் 14% வரை வளர்ச்சி கொடுத்துள்ளது.
இதேபோல் விப்ரோவும் 2023 மற்றும் 2026-ல் அறிவித்த திட்டங்களில் தற்போதைய சந்தை விலையை விட அதிக விலையில் பங்குகளைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஒரு முக்கியமான உண்மை முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலக்கட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் buyback என்றால் பங்கு விலை கீழே போகாது என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
உச்சக்கட்ட நம்பிக்கை
பொதுவாக பங்கு பைபேக் என்பது நிறுவனம் தன் பங்குகள் சந்தையில் குறைந்து மதிப்பிடப்படுவதாகக் கருதி வாங்குவதைக் குறிக்கும். ஆனால் இந்த ஐடி நிறுவனங்கள் பங்குச் சந்தையின் உச்சத்தில் (Peak-cycle) இருந்தபோது இந்தத் திட்டங்களை அறிவித்தன. இது "Peak-cycle optimism" என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, எல்லாம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இப்போது தவறாகத் தெரிகின்றன. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாரன் பஃபெட், ஒரு நிறுவனம் தன் பங்குகளை உண்மையான மதிப்பை விட குறைந்த விலையில் இருக்கும்போதுதான் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவார். ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த அடிப்படை விதியை முழுமையாக மீறியுள்ளன.
மாற்று வழிகள்
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை பைபேக் திட்டத்திற்காக பயன்படுத்திய ரூ.1.24 லட்சம் கோடி பணத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்திருந்தால் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்திருக்கும். அல்லது இந்தத் தொகையை டிவிடெண்ட் வடிவில் அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்திருந்தால் எல்லோருக்கும் பலன் கிடைத்திருக்கும்.
ஒரு நிறுவனம் பங்கு பைபேக் அறிவிக்கிறது என்பதற்காக மட்டும் அதன் பங்குகளை வாங்கிவிடக் கூடாது. சந்தை நிலவரம், நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை கவனமாக ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்தச் சம்பவத்தின் முக்கிய பாடமாக உள்ளது.
தற்போதைய சூழலில் இந்திய ஐடி நிறுவனங்களின் பைபேக் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications