30 கார் செய்ய வேண்டிய வேலையை செய்யும் இரு கார்கள்.. மோடியின் கான்வாயில் உள்ள கார்கள் எவை தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடியின் பாதுகாப்பு கான்வாயில் ஒரு காலத்தில் 30 கார்கள் வரை வந்த நிலையில், இப்போது அது இரண்டாகக் குறைந்துள்ளது. பிரதமர் கான்வாய் இவ்வளவு தூரம் குறைய என்ன காரணம்.. 30 கார்கள் பார்க்க வேண்டிய வேலையை இப்போது இரு கார்கள் மட்டும் பார்க்கும் நிலையில், அவை என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
"மக்களே எரிபொருள் பயன்பாட்டைக் குறையுங்கள்" என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது பாதுகாப்பிற்காகச் செலவிடப்படும் எரிபொருளையும் குறைக்கப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதற்காகச் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG), பாதுகாப்பு விதிகளில் (Blue Book) சமரசம் செய்யாமல் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.

பிரதமர் மோடி
வளைகுடா போர் காரணமாக அந்நிய செலாவணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். பொதுமக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன அவர், ஓராண்டுக்கு வெளிநாடு பயணங்களைத் தவிர்க்கச் சொன்னார். மேலும், தங்கம் வாங்குவதையும் தள்ளிப்போடச் சொன்னார். மேலும், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு தொடர்பாகவும் பேசியிருந்தார்.
இரு கார்கள்
இதற்கிடையே மற்றவர்களுக்கு முன்மாதிரியாகப் பிரதமர் மோடி தனது கான்வாயை அதிரடியாகக் குறைத்துள்ளார். டெல்லியில் வெறும் இரண்டு எஸ்யுவி கார்களுடன் பிரதமர் பயணிக்கும் வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 10 முதல் 30 வரையிலான கார்களுடன் சென்ற பிரதமரின் பாதுகாப்புப் படை, இப்போது இரண்டே கார்களுடன் வரும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
10 முதல் 30 கார்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரு கார்கள் உள்ளது என்றால்.. அது எந்தளவுக்கு நம்பகமாக இருக்க வேண்டும். எஸ்பிஜி தேர்வு செய்துள்ள இரு கார்கள் எவை.. அதன் சிறப்பம்சங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
கார் 1
பிரதமர் கான்வாயில் இருக்கும் முதல் கான்வாய் ரேஞ்ச் ரோவ் சென்டினல் (Range Rover Sentinel).. இதைக் கிட்டத்தட்ட ஒரு நகரும் கோட்டை என்றே சொல்லலாம்.. VR8 தரத்திலான கவசப் பாதுகாப்பு கொண்டது. 7.62 மிமீ தோட்டாக்கள் முதல் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் தாக்குதல் வரை தாங்கும் வலிமை கொண்டது. இதில் ஆக்சிஜன் சப்ளை மற்றும் தீயணைப்பு வசதிகளும் உண்டு.
கார் 2
அடுத்து பிரதமரின் கான்வாயில் இருப்பது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner).. இந்தியாவின் மிகவும் நம்பகமான எஸ்யுவியாக இது இருக்கிறது.. பிரதமரின் பாதுகாப்பிற்குத் தேவையான கூடுதல் கவசங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட இதன் 4WD வசதி, எந்தச் சூழலிலும் தடையின்றிப் பயணிக்க உதவும்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம்!
பிரதமரின் உத்தரவின்படி, இனி வரும் காலங்களில் அவரது அணிவகுப்பில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எஸ்பிஜி திட்டமிட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், மற்ற மாநில முதல்வர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பிற்காக டஜன் கணக்கான கார்கள் என்பது இப்போது இரு கார்களாக குறைந்துள்ளது. இது வெறும் பெட்ரோல் சிக்கனம் மட்டுமல்ல.. மக்களுக்காக நான் உதாரணமாக இருக்கிறேன் என்ற செய்தியையும் அனுப்புகிறது. ஆனால், இந்த இரண்டு கார்களும் மிக உயரிய பாதுகாப்புத் தரம் கொண்டவை என்பதால், பிரதமரின் பாதுகாப்பில் எந்தக் குறையும் இருக்காது.












Click it and Unblock the Notifications