பிரேமலதா சட்டசபை வாசலில் செய்ததை பாருங்க.. ஒரேநாளில் கவனம் பெற்ற எம்எல்ஏ பல்லவி! நெகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை பதவியேற்பு விழா நேற்றைய தினம் வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், பல சுவாரஸ்யமான தருணங்களை உள்ளே கொண்டிருந்தது.. சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.. அதிலும் இதில் மிகவும் கவனிக்கப்பட்டவர் யார் தெரியுமா? சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் வெற்றி பெற்ற பல்லவி தான்.. அப்படியென்ன நடந்தது நேற்றைய சட்டசபையில்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் சீனிவாச சேதுபதி, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை வெறும் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.. பெரியகருப்பன் பதவியேற்பை தடுக்க வழக்கு தொடர்ந்த நிலையிலும் சீனிவாச சேதுபதி நேற்று பதவி ஏற்றார்..

எதிர்க்கட்சி வரிசையில் மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு இடம் கிடைக்கவில்லை.. துறைமுகம் எம்எல்ஏ சேகர்பாபு, "மூன்று முறை முதல்வராக இருந்தவருக்கு இடம் கொடுங்கள்" என்று சொன்னதும் மூன்றாவது வரிசையில் இடம் கிடைத்தது.. இந்த தருணம் சட்டசபையிலேயே சிரிப்பை கிளப்பி விட்டதாம்.
அ.தி.மு.க நத்தம் விஸ்வநாதன் பதவி ஏற்க வரும்போது முதலில் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பிறகு முதல்வர் விஜய்க்கும் வணக்கம் தெரிவித்து பதவி ஏற்றார்.. பரமக்குடி எம்எல்ஏ கதிரவன் உறுதிமொழிக்கு முன்பாக "சனாதன போராளி உதயநிதி தலைமையில் தமிழகம் என்றைக்கும் போராடும்" என்று கூறியது சபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை பதவியேற்பு
தி.மு.க எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வணங்கி பதவி ஏற்பதாக சொன்னார்.. அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின்படி உறுதிமொழி எடுப்பதாக கூறியதும் சட்டசபை செயலர் உறுதிமொழியை மட்டும் வாசிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த பதவியேற்பு விழாவில் விஜயபாஸ்கர், கதிரவன், கார்த்திகேயன் உள்ளிட்ட பல பெயர்களில் தலா இரண்டு எம்எல்ஏக்களும், சிவகுமார், ராஜேந்திரன் பெயர்களில் தலா மூன்று எம்எல்ஏக்களும் பதவி ஏற்றனர்.. ஆனால், ஒரே பெயரில் பல எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் பதவி ஏற்றது சட்டசபை வரலாற்றில் வழக்கமான காட்சியாகிவிட்டது..
சென்னை திருவிக நகர் பல்லவி
இதில் அதிகம் கவனம் பெற்ற பெண்கள் ஒருவர் பல்லவி, மற்றொருவர் பிரேமலதா ஆவர்.. திருவிக நகர் தொகுதி பல்லவியும் நேற்று பதவியேற்று கொண்டார்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்ப்ப காலத்தில் இருந்த உடல் சவால்களையும் தாண்டி பல்லவி தொகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்.
ஒருமுறை பிரச்சாரத்திற்குச் சென்ற போது அவர் சோர்வடைந்து மயக்கமடைந்த போதிலும், சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து மக்களைச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்றத்திற்குச் செல்லும் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளதும் கவனம் பெற்றது.
இந்நிலையில்,நிறைமாத கர்ப்பிணியாக பல்லவி எம்எல்ஏ பதவி ஏற்றார்.. இந்த தருணம் சட்டசபை வரலாற்றில் அரிதான கணமாக பேசப்படுகிறது..
பிரேமலதா நெகிழ்ச்சி செயல்
அதேபோல தே.மு.தி.க பொதுச்செயலர் பிரேமலதா முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்க வந்தார்.. சட்டசபை நுழைவாயிலை தொட்டு கும்பிட்டு உள்ளே நுழைந்த அவரின் பணிவான செயல் பலரின் கவனத்தை ஈர்த்தது.
சட்டப்பேரவைக்கு வந்த அவர், சட்டப்பேரவை வாயிலைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்தார். பிறகு முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார். எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தபோது விஜய் எழுந்து நின்று பிரேமலதாவுக்கு கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
கடவுள் பெயரால் உறுதிமொழி
அதேபோல, இந்த பதவியேற்பு விழாவில் வேலுமணி பதவி ஏற்ற போது அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.. எழும்பூர் தொகுதி அமைச்சர் ராஜ்மோகன், மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை ஆகியோர் கடவுள் பெயரால் என்று சொல்லி, விஜயை பார்த்து உறுதிமொழி எடுத்தனர்..
உறுதிமொழி வாசிக்கும் முறை, வணங்கும் விதம், சொல்லும் வார்த்தைகள் என ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை சட்டசபையில் தெளிவாக வெளிப்படுத்திய விழாவாக நேற்றைய பதவியேற்பு அமைந்தது..!!












Click it and Unblock the Notifications