இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!


  • சென்னை: அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், தற்போது திமுகவில் அதிருப்தியில் உள்ள சிலர் கூட தவெக பக்கம் நகர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவில் இருந்து வரும் நிர்வாகிகளை கட்சியில் சேர்க்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அதிருப்தி நிர்வாகிகளை சமாளிக்க திமுக தலைமை வேலைகளை முடுக்கி விட்டுள்ளதாம்..

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. ஆட்சியை கைப்பற்றிய தவெக, தற்போது அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தன்னுடைய செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.

    Advertisement

    குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து பல முக்கிய முகங்கள் தவெக பக்கம் நகர்ந்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளக்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வரை பலரும் அணி மாறியுள்ளனர்.

    தவெக

    சமீபத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியான கமலகண்ணன் கூட தவெகவில் இணைந்தது, அதிமுக முகாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நகர்வுகளுக்கு பின்னால் தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வியூகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கட்சி விரிவாக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

    Advertisement

    திமுக நிர்வாகிகள்

    இந்நிலையில், அதிமுக மட்டுமின்றி திமுகவிலும் சில அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்புகள், எதிர்காலம் குறித்த குழப்பங்கள் போன்ற காரணங்களால் சில நிர்வாகிகள் மாற்று அரசியல் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தவெக முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் நேரடியாகவும், சிலர் மூன்றாம் நபர்கள் மூலமாகவும் தவெக தலைமைக்கு தூது அனுப்பியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜய்

    ஆனால் இங்குதான் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் இருந்து வரும் நிர்வாகிகளை தற்போது கட்சியில் இணைப்பது சரியாக இரு க்காது என்ற கருத்தை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முழுவதும் திமுகவை பிரதான அரசியல் எதிரியாக சித்தரித்துதான் தவெக அரசியல் செய்தது. "தீய சக்தி" என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வந்த நிலையில், தற்போது திமுக நிர்வாகிகளை கட்சியில் சேர்த்துக்கொள்வது தவெகவின் அரசியலையே கேள்விக்குறியாக்கும் என்ற பார்வை கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    திமுக நிர்வாகிகள்

    இதன் காரணமாகவே, திமுக நிர்வாகிகளின் முயற்சிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சில அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திமுக தரப்பில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கூட தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவின் தொண்டர்களிடம் கூட இந்த விஷயத்தில் ஒரு தெளிவான மனநிலை இருப்பதாக கூறப்படுகிறது.

    அதிமுக

    அதிமுகவில் இருந்து வருபவர்களை அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், திமுகவில் இருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களிலும், கள அரசியலிலும் தவெக ஆதரவாளர்கள் திமுகவையே தங்களின் முக்கிய அரசியல் எதிரியாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர். அந்த சூழலில் திமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தால், கட்சி உருவாக்க முயலும் "தூய சக்தி" என்ற பிம்பம் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

    Advertisement

    திமுக தலைமை

    மறுபுறம் இந்த தகவல்கள் அறிவாலயத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கட்சிக்குள் உள்ள அதிருப்திகளை சரிசெய்யும் பணிகளை திமுக தலைமை முடுக்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், "தற்போதைய சூழ்நிலையை வைத்து அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்" என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    தவெக ஆட்சி

    மேலும், தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மதிப்பீடு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. அரசியல் சூழல் எந்த நேரத்திலும் மாறலாம். அதனால் கட்சியினர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் திமுக தரப்பில் பரப்பப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Reports suggest dissatisfied DMK functionaries explored joining TVK, but Vijay is said to have discouraged such moves.