சென்னை: வழக்கமாக சட்டசபை கூடும்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்படும். ஆனால், இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை கூட்டவில்லை. மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இருப்பதால் எடப்பாடி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தனது ஆதரவாக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி செல்போன் மூலம் பேசியதாகவும், சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனக்கென தனி சேனல் ஒன்றை தொடங்கும் முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருக்கிறார் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சிலர். அதில் மரகதம் குமரவேல், விஜயபாஸ்கர்களுக்கு பதவி வழங்கியிருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் விரைவில் நீதிமன்றத்தில் இடைத்தேர்தலுக்கு அனுமதி பெற்று தேர்தலை சந்திக்க அந்த மாஜிக்கள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க வழக்கமான பரபரப்புடன் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை கூட்டத்தை கூட்டவில்லை. எஸ்.பி வேலுமணி தரப்புக்கு 20 எம்எல்ஏக்கள் வரை ஆதரவாக செயல்படும் நிலையில் கூட்டத்தை கூட்டினால் அவர்கள் வரமாட்டார்கள். இதனால் அதிமுக பிளவுபட்டது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும் என்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை கூட்டவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் செல்போன் மூலம் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு எப்படி பேச வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி போன்றோர் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். மேலும் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கட்சியை விட்டு நீக்கலாமா என்ற ஆலோசனையையும் எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அதிமுக வட்டாரங்களில் இன்னொரு தகவல் உலாவுகிறது. ஜெயலலிதா இருந்தபோது ஜெயா தொலைக்காட்சியும் நமது எம்ஜிஆர்-ம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களாக இருந்தன. சசிகலா சென்ற பிறகு நியூஸ் ஜெ மற்றும் நமது அம்மா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. நமது அம்மாவின் கண்ட்ரோலை வேலுமணியும், நியூஸ் கண்ட்ரோலை சிவி சண்முகம் வைத்துள்ளனர். தற்போது எடப்பாடி உடன் அவர்கள் மோதல் போக்கை கையாண்டு வருவதால் எடப்பாடியின் செய்திகள் அந்த சேனல்களில் ஒளிபரப்பப்படுவதில்லை. இந்த நிலையில் போர்வாள் என்ற அதிமுகவின் அதிகார பூர்வ செய்தித்தாளை தொடங்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சேனல் ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக சில முன்னால் எடிட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.அதிமுக
தமிழக சட்டசபை
எடப்பாடி பழனிச்சாமி
ஊடகங்கள்
புதிய சேனல்