பாசிச பாயாசம் இனிக்குதா? ஒருவழியாக கோட்டையை எட்டிப்பிடித்த விஜய்.. இதோ திமுகவின் அனல் பறக்கும் கேள்வி
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, விசிக ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டார்.. எனினும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் ஆளுநர் மற்றும் பாஜக குறித்து விஜய் மௌனம் காப்பது ஏன் என திமுக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து விமர்சித்து வருகிறது.. பெரும்பான்மை கிடைத்தும் ஒரு பக்கம் குதிரை பேரம் குறித்த அச்சமும், மறுபக்கம் திமுகவின் 'பாசிச பாயாசம்' தொடர்பான காரசாரமான விமர்சனங்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு உச்சக்கட்ட பரபரப்பை கண்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சியமைப்பதற்கான மேஜிக் நம்பரை ஒருவழியாகத் தொட்டுவிட்ட நிலையில், அவரைச் சுற்றியுள்ள அரசியல் நிழல் யுத்தம் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோட்டையை பிடித்த விஜய்
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 116 இடங்களைப் பெற்று, நூலிழையில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்த விஜய்க்கு, 2 இடங்களை வைத்திருக்கும் விசிகவின் ஆதரவு இப்போது ஆக்சிஜனாகக் கிடைத்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அதிரடி முடிவின் மூலம், தவெகவின் மெஜாரிட்டி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே திமுக எழுப்பியுள்ள "பாசிச பாயாசம்" விவகாரம், வரும் நாட்களில் விஜய் எதிர்கொள்ளப் போகும் சவால்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
மெஜாரிட்டி இல்லாத தருணத்தில் டிடிவி தினகரன் போன்றவர்கள் முன்வைத்த குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுகள் விஜய்யை நிலைகுலைய செய்தது உண்மை.
திமுக கேட்ட கேள்வி
ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவதில் ஏற்பட்ட தாமதம், தவெக தொண்டர்களிடையே ஒருவித பதற்றத்தை உருவாக்கியிருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட திமுக, விஜய்யின் மௌனத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. குறிப்பாக, ஆளுநரின் தாமதம் குறித்து விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்ற கேள்வி இப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காரசாரமான கேள்விகளைப் பதிவிட்டுள்ளது. "புதிய அரசு அமைக்க நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறார். 'நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்' என்று கூட்டணி கட்சிகளையும் அழைத்து சொல்லிவிட்டார்.
பாசிச பாஜக இனிக்குதா
ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெக தலைவர் விஜயோ ஆளுநர் குறித்தோ, பாஜக குறித்தோ ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. பாசிச பாயாசம் இனிப்பதாலா? எங்கள் தலைவர் தெளிவாகச் சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு? பாஜக என்ற வார்த்தையைச் சொல்ல பயம் எதற்கு?" என்று திமுக அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளது.
விஜய் சமாளிப்பாரா
இந்த விமர்சனங்களுக்குப் பின்னால் ஒரு நீண்டகால அரசியல் கணக்கு இருக்கவே செய்கிறது.. தமிழகத்தில் பாஜகவின் அரசியலை "பாசிசம்" என்று விமர்சிப்பதில் திமுக முன்னணியில் இருக்கிறது. ஆனால், ஆளுநரின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் விஜய் மௌனம் காப்பது, அவர் மறைமுகமாக பாஜகவுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறாரோ என்ற சந்தேகத்தை திமுக கிளப்புகிறது.
"பாசிச பாயாசம் இனிப்பதாலா?" என்ற வாசகம், விஜய் தனது கொள்கை நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்கிறாரா என்ற விவாதத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக எடுக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மாநில சுயாட்சி
ஆனால் மறுபக்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் விஜய், மத்திய அரசை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.
மாநில சுயாட்சி பேசும் தமிழக அரசியலில், ஆளுநர் மற்றும் மத்திய அரசுடனான மோதல் போக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதுவரை ஆளுநரை விமர்சிக்காத விஜய், முதல்வராகப் பதவியேற்ற பிறகு நீட் தேர்வு, மாநில நிதிப் பகிர்வு போன்ற விவகாரங்களில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்?
திமுகவின் இந்தத் தொடர் அழுத்தங்கள், விஜய்யை ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளுமா அல்லது அவர் தனது பாணியிலேயே அமைதியாக காய்களை நகர்த்துவாரா? பெரும்பான்மை கிடைத்துவிட்டாலும், விஜய்க்கு இது முட்கள் நிறைந்த பாதையின் தொடக்கம் மட்டுமே! பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications