தமிழகம் இதுவரை பார்க்காத குதிரை பேரம்! விஜய் சொன்ன மாற்றம் இதுதானா? திமுக எம்பி வில்சன் அட்டாக்
சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக பார்க்காத குதிரை பேரம் நடந்துள்ளது என்றும் இதுதான் தவெக தலைவர் விஜய் கூறிய மாற்றமா என திமுக ராஜ்யசபா எம்பி வில்சன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் 'மாற்றத்தைக்' கொண்டு வருவோம் என்று அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

இத்தனை ஆண்டுகளில் தமிழகம் இதுபோன்ற குதிரை பேர முயற்சிகளைப் பார்த்ததே இல்லை! இன்னும் பதவியேற்கக் கூட இல்லை, அதுக்குள்ளேயே இவ்வளவு கலாட்டாவா!" என அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பெரும்பான்மையை நிரூபிக்க போலி கடிதங்களை சமர்ப்பித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நடந்தது என்ன? - பின்னணி
108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. இந்நிலையில், மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி ஒரு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதே இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணம்.
டிடிவி தினகரனின் அதிரடி குற்றச்சாட்டுகள்
ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தவெக-வை 'ராவணன்' செயலோடு ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.
போலி கடித மோசடி: "எங்கள் எம்.எல்.ஏ காமராஜின் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தின் நகல் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டு ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காமராஜ் பயன்படுத்துவதோ வாட்ஸ்அப் வசதி இல்லாத சாதாரண போன். இது ஒரு அப்பட்டமான மோசடி."
குதிரை பேரம்: "தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக, ராவணன் சீதையை கடத்தியது போல மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்கப் பார்க்கிறது. இது குதிரை பேரம் இல்லையென்றால் வேறு என்ன?"
ஆணவப் போக்கு: "எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.எல்.ஏ என்பதால் அவரை எளிதாக வளைக்கப் பார்க்கிறார்கள். ஆட்சிக்கு வரும் முன்பே இப்படிப்பட்ட போலித்தனத்தில் ஈடுபடுபவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?"
எம்.எல்.ஏ காமராஜின் விளக்கம்:
நள்ளிரவில் தினகரனுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த எம்.எல்.ஏ காமராஜ் கூறுகையில், "நான் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தேன். ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்த பிறகே இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. நான் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கவில்லை," எனத் திட்டவட்டமாக மறுத்தார்.
தவெக-வின் பதிலடி: வீடியோ ஆதாரத்துடன் மறுப்பு
டிடிவி தினகரனின் புகார்களைத் தமிழக வெற்றிக் கழகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
"தினகரன் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் தவெக-வுக்கு இல்லை" என்று அக்கட்சி தலைமை விளக்கம் அளித்துள்ளது.
ஆதாரமாக, எம்.எல்.ஏ காமராஜ் தனது கைப்பட ஆதரவு கடிதத்தை எழுதும் வீடியோ காட்சியை தவெக வெளியிட்டு, தினகரனின் புகாருக்குப் பதிலடி கொடுத்துள்ளது.
அடுத்த கட்டம்: இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். "மாற்றத்தை" எதிர்நோக்கிய தமிழக அரசியலில், ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரங்கேறும் இந்த 'கடிதப் போர்' பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக் காட்டியே பி.வில்சன் பதிவு போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications