துணை முதல்வர் + முக்கியத் துறையை குறி வைக்கும் விசிக? தவெக உடன் முடிவு எட்டப்படாமல் இருக்க பின்னணி என்ன?
சென்னை: தவெக பெரும்பான்மை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில், விசிக ஆதரவு தந்தால் எளிதில் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியும், பெரும்பான்மையும் கிடைக்கும். ஆனால் நேற்று முன் தினம், நேற்று, நாளை என முடிவை கூறாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு பின்னணி காரணமாக துணை முதல்வர் மற்றும் முக்கியத் துறையை கேட்பதால் தான் இந்த தாமதம் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்புடனே கடந்து வருகிறது. தற்போது கோட்டையை நெருங்கியுள்ள விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. விசிக இன்று தனது முடிவினை தெரிவிக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். இதனால் விஜய் முதல்வர் ஆவது கிட்டத்தட்ட திருமாவளவன் கையிலேயே உள்ளது.

காலம் தாழ்த்தும் விசிக
அப்படி இல்லையென்றால் டிடிவி தினகரன் (1) மற்றும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் (1) அல்லது பாமக (5) மட்டுமே கடைசி வாய்ப்பாக உள்ளது. ஏனெனில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுகவுக்கு தான் ஆதரவு என திட்டவட்டமாக கூறிவிட்டது. விஜய் மதசார்பற்ற கட்சியுடனேயே கூட்டனி வைக்க விருப்பப்படுவதால் திருமாவளவனை மலை போல் நம்பி உள்ளார்.
ஆனால் அவரோ கடந்த 3 நாட்களாகவே ஆலோசனை நடத்துகிறோம். உடனடியாக எதையும் சொல்லிவிட முடியாது. கட்சியில் உள்ள நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க முடியும் என 3 நாட்களாக கூறி வருகிறார். இறுதி வரை ஆதரவா இல்லையா என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என சொல்லவில்லை.
திருமாவளவன் கையில் முடிவு
இதனால் விஜய் முதல்வர் ஆகும் நாள் நீண்டு கொண்டே போகின்றது. இந்த நிலையில் விஜய் ஏற்கனவே தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக கூறியிருப்பதால், துணை முதல்வர் பதவி அல்லது முக்கியத்துறையை கேட்க இருப்பதாகவும் இதனாலே இந்த தாமதம் எனவும் பேசப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளும் தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் விசிக சார்பில் திருமாவளவன் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அவர் துணை முதல்வராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிபிஐ, சிபிஎம் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள சூழலில், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளை போல் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்காது என்றும், அமைச்சரவையில் இடம் கேட்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
விசிக என்ன முடிவு எடுக்க போகிறது?
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்தால் அங்கு திருமாவளவன் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாத நிலையில் இன்று விசிக இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கிறது. விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் துணை முதல்வர், முக்கியத் துறை தந்தால் மட்டுமே விஜய்யுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு இடையில் தான் வன்னியரசு, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமாவளவன் காலம், இனி உயர்வோம் மேலும் மேலும்!" என பதிவிட்டு இருந்தார். விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனும், "தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை. உளிகளை கொண்டு செதுக்க அவர் வெறும் கல் அல்ல. எழுந்து நிற்கும் இமய மலை. நாளைய பொழுது நமக்காய் விடியும்" எனத் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications