இவரே பாம் வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்! காமராஜ் வீடியோ டிடிவி போட்ட ஸ்கெட்ச்? அதிரும் ஆளுநர் மாளிகை
சென்னை: மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக தவெக மீது டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அப்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் உடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காமராஜ் ஆதரவு கடித்தத்தில் கையெழுத்திடுவது போல ஒரு வீடியோ வெளியானது. தவெக அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், அதுவும் டிடிவி தினகரனின் செட்டப் தான் என்கின்றனர் தவெகவினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைப்பதற்கான ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் முழு பெரும்பான்மையை எட்ட வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு உள்ளது. இந்த சூழலில், அமமுகவின் ஒரே எம்எல்ஏவான மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ், தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியானது.
அமமுக காமராஜ்
இதற்கிடையே, டிடிவி தினகரன் திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். காமராஜின் பெயரில் போலியான ஆதரவு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதோடு, "காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை, அவர் காணாமல் போயுள்ளார்" என்றும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.
டிடிவி தினகரன்
ஆனால், அதற்கு சில மணி நேரங்களிலேயே சினிமாவில் வருவது போல் புதிய திருப்பம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அப்போது டிடிவி தினகரனும் அங்கு இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "நான் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. என் பெயரில் வந்த கடிதம் போலியானது" என்று தெரிவித்தார். மேலும், "நான் வாட்ஸ்அப் பயன்படுத்தாத சாதாரண போன் வைத்திருக்கிறேன். அதனால், வாட்ஸ்அப் மூலம் கடிதம் அனுப்பியதாக கூறுவது பொய்" என்றும் விளக்கம் அளித்தார்.
காமராஜ் வீடியோ
இந்த நிலையில், மறுபுறம் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகத் தொடங்கியது. அந்த வீடியோவில், காமராஜ் காரில் அமர்ந்தபடி ஒரு கடிதத்தில் கையெழுத்திடும் காட்சி இடம்பெற்றிருந்தது. "அவர் சுய விருப்பத்தோடு தவெகவுக்கு ஆதரவு அளித்தார்" என்ற தகவலுடன் அந்த வீடியோ பரவியது. இதனால், அரசியல் களம் மீண்டும் பரபரப்பானது. ஆனால், அந்த வீடியோவை தவெக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது தற்போது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
டிடிவி போட்ட ஸ்கெட்ச்?
"வீடியோ உண்மையெனில் ஏன் தவெக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை?" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதையே அடிப்படையாக வைத்து, தவெக நிர்வாகிகள் சிலர், "இது கூட டிடிவி தினகரன் போட்ட அரசியல் ஸ்கெட்சாக இருக்கலாம்" என சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, முதலில் காமராஜ் ஆதரவு அளித்ததாக தகவலை வெளியிட்டு, பின்னர் அதையே மறுத்து தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டை உருவாக்கும் அரசியல் தந்திரம் நடந்திருக்கலாம் என்று தவெக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர் மாளிகை
"இவரே பாம் வைப்பாராம்... இவரே எடுப்பாராம்" என்ற வகையில் அரசியல் நாடகம் அரங்கேறுகிறது என்று சமூக வலைதளங்களிலும் கடும் விவாதம் நடந்து வருகிறது. மற்றொரு பக்கம், ஆளுநர் மாளிகையும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எம்எல்ஏ ஆதரவு கடிதங்கள் உண்மையா? போலியா? என்ற விவகாரம் சட்டரீதியான சிக்கலாக மாறும் வாய்ப்பு இருப்பதால், ஒவ்வொரு ஆவணமும் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தவெக அரசு
இந்த சர்ச்சை காரணமாக, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் ஆளுநர் மூன்று முறை விஜய்யை சந்தித்தும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில், தற்போது இந்த "காமராஜ் வீடியோ" விவகாரம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம்
அதே நேரத்தில் நேற்றைய இந்த விவகாரம், டிடிவி தினகரன் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்கின்றனர் தமிழக வெற்றி கழக தரப்பினர். பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருக்கும் அல்லது தற்போது மாறி இருக்கும் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தடுக்க இது போன்ற முயற்சிகளை செய்வதாக சொல்கின்றனர். முதலில் காமராஜர் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற அவர் பிறகு அவருடன் ஆளுநர் மாளிகை வந்தது எப்படி? காரில் வைத்து எந்த எம்எல்ஏவாவது கையெழுத்து போடுவார்களா? அப்படியே கையெழுத்து போட்டாலும் சிக்கல் வரும் என தெரிந்தே அதனை வெளியிடுவார்களா? என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
குதிரை பேரம்
ஒருவேளை தமிழக வெற்றி கழகத் தரப்பு காமராஜர் தொடர்பு கொண்டு கையெழுத்து பெற்றிருந்தாலும் அவரை எப்படி தனியாக ஆளுநர் மாளிகை செல்ல அனுமதித்திருக்கும் என்றும் கேட்கின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே குதிரை பேரம் நடந்ததா? அல்லது நடப்பது போல் சித்தரிக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications