ராகுல் பேசும்போதே கிளம்பிய மாணவிகள்.. காங்கிரஸ் கட்சியினர் சொன்னதால் வெளியே விடாமல் தடுத்த போலீசார்!

  • சென்னை: சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போதே ஏராளமான மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். காங்கிரஸ் சார்பில், மாணவர்களை வெளியே செல்ல விட வேண்டாம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாணவர்களை வெளியே விடாமல் போலீசார் தடுத்தனர்.

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை தீவுத்திடலில், 'மாணவர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார்.

    Advertisement

    ராகுல் காந்தியின் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போதே ஏராளமான மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். சரியான காற்றோட்ட வசதி இல்லாத நிலையில் புழுங்கிய மாணவிகள் பலர், சுவாசிக்க சிரமப்பட்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றனர்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியினர், மாணவர்களை வெளியே விட வேண்டாம் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாணவர்களை வெளியே விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். வெளியே செல்ல கிளம்பிய மாணவிகளை, போலீசார் உள்ளே செல்லுமாறு கூறினர்.

    ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயன்றபோது, காங்கிரஸ் கட்சியினர் காவல்துறையினர் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே செல்ல விடாமல் தடுத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இச்சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னையில் இன்று ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயன்றபோது, காங்கிரசார் காவல்துறையினர் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே செல்ல விடாமல் தடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியவை.

    மாணவர்களின் குரலைக் கேட்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்த ஜனநாயகமா? மாணவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.

    Advertisement

    மாணவர்கள் என்பவர்கள் அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் முழு உரிமை கொண்டவர்கள். அதை விடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்துவது ஜனநாயக மாண்புகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.

    மாணவர்களின் நலனுக்காகப் பேசுவதாகக் கூறும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், முதலில் மாணவர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களின் குரலை ஒடுக்கிவிட்டு, அவர்களுக்காகப் பேசுவதாக அரசியல் நாடகம் நடத்த முடியாது. அவர்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கோ, கட்டாயப்படுத்துதல்களுக்கோ ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    At the 'Echo of the Students' event held today at Chennai, a large number of students began to leave while Rahul Gandhi was speaking. Acceding to a request from the Congress party not to let the students leave, the police prevented them from exiting the venue.