சென்னை: தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்லேக்கரை கடந்த 15-ந்தேதி மக்கள் மாளிகையில் சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் விஜய். "இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பு அதையும் தாண்டியது" என்கிறார்கள் ஹை-லெவல் சோர்ஸ்கள்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 11-ந்தேதி வந்தார் பிரதமர் மோடி. இதில், மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மட்டும் மோடியுடன் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால், 10-ந்தேதி இரவு, பிரதமர் அலுவலகத்திலிருந்து விஜய்க்கு சில விசயங்கள் அறிவுறுத்தப்பட்டன. அதாவது, "சென்னையில் பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் கலந்து கொள்ளுங்கள்; சென்னையிலிருந்து பிரதமர் கிளம்பும் வரை அவருடன் நேரத்தை செலவிடுங்கள் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்டார் விஜய். அதனால்தான், 11-ந்தேதி அலுவல் ரீதியாக விஜய்க்கு இருந்த அனைத்து ப்ரோக்ராமும் மாற்றப்பட்டது. சென்னை ஏர்போர்ட்டில் மோடியை வழியனுப்பி வைத்தார் விஜய். முன்னதாக, ஏர்போர்ட்டில் இருக்கும் க்ரீன் ரூமில் மோடியும் விஜய்யும் 25 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அரசியல் ரீதியாகவும், அரசின் நிர்வாக ரீதியாகவும் இருவரும் பேசிக்கொண்டனர். அப்போதுதான், ஆளுநர் அர்லேக்கரை முழுநேரமாக நியமிக்கவிருப்பதை விஜய்யிடம் தெரியப் படுத்தி அவரின் கருத்தையும் கேட்டார் பிரதமர் மோடி. அர்லேக்கரை நியமிப்பதில் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார் விஜய். தவெக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைந்து அப்ரூவல் தருவதற்கு ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள் என மோடியிடம் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு, 'நோ ப்ராப்ளம்' என்ற மோடி, முழுநேரமாக அவர் நியமிக்கப்பட்டதும் அவரை சந்தித்து உங்களின் எதிர்பார்ப்புகளை சொல்லலாம் எனவும் பாசிட்டிவ்வாக சொல்லியுள்ளார். இதே ரீதியிலேயே அவர்களின் பேச்சுவார்த்தை இருந்தது. விஜய்யிடம் பேசி விட்டு மோடி புறப்பட்டபோது, அவரின் காலை தொட்டு ஆசி பெற்றுள்ளார் விஜய். இப்படிப்பட்ட பின்னணியில்தான், அர்லேக்கரை விஜய் சந்தித் தார். இந்த சந்திப்பில், நிர்வாக ரீதியாக எந்த ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கலாம். டெல்லியிலிருந்து எனக்கு சில உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று விஜய்க்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் அர்லேக்கர்" என்று சந்திப்பில் நடந்ததை சொல்கின்றன சோர்ஸ்கள். இந்த சந்திப்பில், தமிழகத்தில் இன்னும் 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தொகுதிகளுக்கு எதிராக தேர்தல் வழக்குகள் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அந்த வழக்குகள் விரைந்து முடித்து இடைத் தேர்தல் நடப்பதற்காக ஆளுநர் என்கிற முறையில் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் அர்லெக்கரிடம் விஜய் வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது, அண்மையில் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் தவெக தட்டித் தூக்கியிருக்கிறது. இதே வேகத்தில், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அந்த ஐந்தையும் கைப்பற்றி விடலாம் என்கிற கணக்கில் இருக்கிறார் விஜய். 5 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும் போது தவெகவின் பலம் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் இன்னும் துணிச்சலாக, ஆதரவு கட்சிகளின் எதிர்மறை கருத்துக்களை எதிர்கொள்ள லாம் என்கிற திட்டத்தில் இருக்கிறார் விஜய். அதனால்தான், இடைத்தேர்தல் குறித்த சிக்கல்கள் களைந்து விரைந்து நடக்க ஆளுநரின் உதவியை விஜய் நாடியிருக்கிறார் என்பதே சந்திப்பின் பின்னணியில் உள்ள அரசியல் என்கிறார்கள். - சிறப்பு நிருபர் எழில்