விசிக எம்எல்ஏ வன்னியரசுக்கு எதிராக திரண்ட ஜோதிடர்கள்.. கோவை கலெக்டரிடம் புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜோதிடர்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் பிரசன்ன மணிகண்டன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசியல் பிரிவு அலுவலராக ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் அவர்களை நியமித்திருப்பது, அவரின் திறமை மற்றும் நீண்டநாள் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பான முடிவு என்று தெரிவித்தனர்.

VCK MLA Vanniyarasu Accused of Insulting Astrologers Petition submitted to Coimbatore Collector

ஆனால், அவர் ஒரு ஜோதிடர் என்பதைக் காரணமாகக் கொண்டு, இந்த நியமனம் "அறிவியல் விதிகளுக்கு எதிரானது" என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் வன்னியரசும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஜோதிடம் என்பது அறிவியலுக்கு முற்றிலும் முரணானது அல்ல; தமிழகத்தில் பல லட்சம் ஜோதிடர்கள் மக்களின் அன்றாட வாழ்வில் நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளாக உள்ளனர். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும் வாழ்வியலாகவும் இருக்கும் ஒரு கலையை இழிவுபடுத்துவது, ஜோதிடச் சமூகத்தையே அவமதிப்பதாகும் என அவர் கூறினார்.

அரசியல் காரணங்களுக்காக, பிறர் மனநிலைகளையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசுவது அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது. எனவே, வன்னியரசு தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதோடு, பொதுமக்கள் முன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இல்லையெனில், தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு விரைவில் கூடி, அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கும் என எச்சரித்தார்.

முன்னதாக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவும், விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னியரசு வெளியிட்ட பதிவில், "ஆஸ்தான ஜோதிடர்கள்' என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், 'ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்' 'தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்' என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

'அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்' ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது.

அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. 'அறிவியல் மனப்பான்மையை' (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே 'தொழிலாக' கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!" என்று கூறியிருந்தார். இதையடுத்து விஜய் தனது அரசியல் பிரிவு அலுவலராக ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் நியமித்ததை இன்றே ரத்து செய்துள்ளார். ஒரே நாளில் ஜோதிடரின் நியமனத்தை திரும்ப பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+