காரின் மேல்பகுதியில் கிடந்த ஒன்றரை வயது குழந்தை.. நிற்காமல் 10 கிமீ ஓட்டி சென்ற டிரைவரால் பரபரப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை காரின் மேல்பகுதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் 10 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஒன்றரை வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் பஹிரா தாபர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னி சாகித். இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தான் முன்னி சாகித் தனது உறவினர் உமேஷ் உடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

உமேஷ் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். முன்னி சாகத் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். கையில் ஒன்றரை வயது மகன் சுராஜை வைத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் உமேஷ், முன்னி சாகத் ஆகியோர் மோட்டார் சைக்களில் இருந்து கீழே விழுந்தனர். அதேவேளையில் முன்னி சாகத்தின் ஒன்றரை வயது குழந்தை சுரஜ் காரின் மேல்புறம் விழுந்தது. ஆனால் டிரைவர், காரை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஓட்டி சென்றார். குழந்தை காரின் மேல்புறம் விழுந்து கிடப்பதை பாராமல் டிரைவர் ஓட்டி சென்றார்.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காரை நிறுத்தும்படி கூறினர். ஆனால் டிரைவர் நிறுத்தவில்லை. இதையடுத்து சிலர் மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். 10 கிலோமீட்டர் தூரம் வரை ‛சேஸ்' செய்தனர். ஆனாலும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே தான் காரின் மேல்பகுதியில் குழந்தை இருப்பதை அறிந்து காரில் இருந்த ஒருவர் குழந்தையை ஜன்னல் வழியாக உள்ளே இழுத்தார்.
பிறகு குழந்தையை அருகே உள்ள சுகாதார நிலையத்தில் விட்டுவிட்டு சென்றது. குழந்தையின் தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. சுகாதார நிலைய ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த கார் உத்தர பிரதேச மாநில பதிவெண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் கூறுகையில், ‛‛காரை ஓட்டிய டிரைவர் மனிதாபிமானம் இன்றி செயல்பட்டு உள்ளார். அலட்சியாக கார் ஓட்டி உள்ளார். இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். அதேபோல் விபத்தில் சிக்கிய குழந்தையின் தாய் மற்றும் உறவினர் உமேஷ் ஆகியோரும் சித்தி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications