மீண்டும் போர் பதற்றம்.. முப்படைகளையும் இறக்கிய இந்தியா.. ‛நோட்டம்' அறிவிப்பால் கலங்கிய பாகிஸ்தான்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பதம் பார்த்தது. இதன் அடுத்தக்கட்டமாக தான் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் முப்படைகளையும் களமிறக்கி போர் ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ‛நோட்டம்' அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த திடீர் போர் ஒத்திகை, நோட்டம் அறிவிப்பின் பின்னணி உள்பட பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்ரல் மாதம் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகளை கொன்றனர். இதற்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் கதறியபடி நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்து நம் நாட்டை சீண்டும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், அந்த நாட்டின் அமைச்சர்கள் வாய்ச்சவடால் விடுத்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசும், ‛ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் வாலை சுருட்டி கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ‛திரிசூல்' பயிற்சியில் ஈடுபடப்போவதாக நம் நாடு திடீரென்று அறிவித்துள்ளது. ‛திரிசூல்' என்பது ஒரே நேரத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்று முப்படையும் சேர்ந்து போர் பயிற்சி, ஒத்திகை செய்யும் நிகழ்வாகும். இந்த சமயத்தில் பாதுகாப்பு படையின் சக்திவாய்ந்த ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும்.
நம் நாட்டில் அவ்வப்போது இத்தகயை போர் ஒத்திகை நடப்பது வழக்கம் தான். ஆனால் இந்த ஒத்திகைக்கு நம் நாடு தேர்வு செய்த இடம் தான் மிகவும் முக்கியமானது. அதாவது சர் க்ரீக் என்ற இடத்தில் இந்த ஒத்திகை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. சர் க்ரீக் என்பது ஒரு சதுப்பு நிலப்பகுதி. இது நம் நாட்டின் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு இடையே அமைந்துள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் குஜராத்தின் ரன் ஆஃப் கடச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை பிரிக்கும் இடமாக உள்ளது. இந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இடம் தொடர்பாக நமக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பஞ்சாயத்து உள்ளது. இதையொட்டிய பகுதிகளில் தான் போர் ஒத்திகையை நம் நாடு அறிவித்துள்ளது.
அதேபோல் நோட்டம் (Notam or Notice To Airmen) அறிவிப்பு வெளியிடப்பட்டது. போர் ஒத்திகை நடக்கும் நாளில் குறிப்பிட்ட பகுதியில் விமானங்கள் பறக்க வேண்டாம் என்று சர்வதேச விமானிகளுக்கு நோட்டம் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதான் பாகிஸ்தானை கலங்க வைத்துள்ளது. ஏற்கனவே நம்மிடம் அடிவாங்கி ஐசியூவில் இருக்கும் பாகிஸ்தான், நம் நாட்டின் இந்த ‛திரிசூல்' பயிற்சிக்கான அறிவிப்பை கண்டு மிரண்டு போய் உள்ளது.
எங்கே மீண்டும் இந்தியா போரை தொடங்குகிறதா? என்று பாகிஸ்தான் கலங்கிபோய் உள்ளது. பாகிஸ்தான் ராணுவமும், அரசும் தற்போது இந்தியாவின் அறிவிப்பை பார்த்து பதைபதைத்து போய் உள்ளது.
இதனால் பாகிஸ்தான் பயந்துபோய் தனது வான்எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளி பரப்புகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதற்கான ‛நோட்டம்' அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
நம் நாடு முப்படை போர் ஒத்திகை நடத்துவதால் அதுபற்றிய விஷயத்தை மேற்கொள்காட்டி ‛நோட்டம்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அப்படி எதையும் குறிப்பிடாமல் ‛நோட்டம்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நம் நாட்டுக்கு பூச்சாண்டி காட்டும் வகையில் செயலாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் ‛நோட்டம்' அறிவிப்பு வெளியிட்டுதால் பெயரளவுக்கு ஏதாவது போர் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நம்முடைய ‛திரிசூல்' பயிற்சியை கண்டு பாகிஸ்தான் தற்போது கலங்கிப்போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications