மம்தா VS அமித்ஷா.. மேற்கு வங்க தேர்தலில் 2.40 லட்சம் மத்திய படையினர் குவிப்பு ஏன்? பின்னணி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் கடும் மோதல் உள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அங்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 29ம் தேதி 142 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மே 4ல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
அதன்படி நேற்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க மேற்கு வங்க மாநிலத்தில் 2,400 கம்பெனி மத்திய ஆயுத படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2,400 கம்பெனியில் மொத்தம் 2.4 லட்சம் வீரர்கள் உள்ளனர். இது விவாதமாகி உள்ளது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய படைகளை குவித்து ஆட்சியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் மத்திய அரசோ தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக தான் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடும் வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் மத்திய அரசின் இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். அதாவது மேற்கு வங்க தேர்தலில் வன்முறைகள் அதிகளவில் நடக்கும். இடதுசாரிகள் முதல் திரிணாமுல் காங்கிரஸ் காலம் வரை, வாக்குச்சாவடிகளில் மோதல்கள் அதிகமாக நடக்கும். பூத்கள் தீயிட்டு எரிக்கப்படும். தற்போதும் இந்த மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் ஆயிரக்கணக்கான வன்முறை சம்பவங்களும், நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளது.
ACLED டேட்டாப்படி கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கு வங்கம் (35%) அதிக தேர்தல் வன்முறையைக் கண்டுள்ளது. 2021 தேர்தல்களில் 300 சம்பவங்களும் 58 மரணங்களும் ஏற்பட்டன. 2020 முதல், திரிணாமுல் காங்கிரஸ் 77, பாஜக 25 வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. இதனால் தான் பல கட்டங்களாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும். கடந்த 2021ல் மொத்தம் 8 கட்டங்களாக நடந்தது. ஆனால் தற்போது 2 கட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக முர்ஷிதாபாத்தில் அண்மையில் நடந்த நாட்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களால் பதற்றம் உள்ளது.
இதனால் மத்திய அரசு 2.40 லட்சம் மத்திய ஆயுதப்படை வீரர்களை குவித்துள்ளது. எல்லை காவல் படையினர், வன்முறை தடுப்பு பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு என்று 7 பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த படை வீரர்கள் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவார்கள். இந்த படை வீரர்கள் ராணுவத்தில் இருந்து வேறுபட்டு செயல்படுவார்கள். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் தேசிய பேரிடர் மற்றும் அவசர கால பணிகளில் இந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் மாநிலத்தில் தேர்தலை அமைதியாக நடத்தும் முடிப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications