ஹார்முஸ் நீரிணையில் சம்பவம் செய்த அமெரிக்கா.. ஈரான் கப்பலுக்கு நேர்ந்த கதி! இதை எதிர்பார்க்கலையே!
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த வழியாக சென்ற ஈரான் கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
ஈரான் நாட்டின் கொடியுடன் சென்ற 'டூஸ்கா' என்ற சரக்குக் கப்பல், ஹார்முஸ் நீரிணையை கடந்து அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றது. சுமார் 900 அடி நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலை, ஓமன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான USS SPRUANCE தடுத்து நிறுத்தியது.

என்ன நடந்தது?
அமெரிக்க கடற்படை, அந்தக் கப்பலை நிறுத்தும்படி எச்சரிக்கை விடுத்தும், ஈரானிய மாலுமிகள் அதற்குக் கட்டுப்படவில்லை. இதனால், அமெரிக்கக் கப்பல் 'டூஸ்கா' கப்பலின் இயந்திர அறை மீது தாக்குதல் நடத்தி, பெரிய துளையை ஏற்படுத்தி அதை நடுவழியில் நிறுத்தியது. தற்போது அந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க கடற்படையின் 'மரைன்ஸ்' வீரர்கள் கப்பலுக்குள் புகுந்து சோதனையிட்டு வருகின்றனர்.
இந்த 'டூஸ்கா' கப்பல் ஏற்கனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அமெரிக்காவின் தடை லிஸ்ட்டில் இருந்தது. அந்தக் கப்பலில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைத் தற்போது அமெரிக்க ராணுவம் ஆய்வு செய்து வருகிறது.
ஈரானின் பதிலடி
ஈரானின் 'காதம் அல்-அன்பியா' ராணுவத் தலைமையகம், அமெரிக்காவின் இந்தச் செயலை கடற்கொள்ளை என்று விமர்சித்திருக்கிறது. இதற்கு மிக விரைவில் நேரடி பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலாகவோ அல்லது ஏவுகணைத் தாக்குதலாகவோ இருக்கலாம்.
ஹார்முஸின் நிலை
ஏற்கனவே ஈரான் இந்த நீரிணையை மூடுவதாக அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடியாக, எவ்விதக் கப்பல்களும், குறிப்பாக அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் செல்ல முடியாதவாறு கண்ணிவெடிகளைத் தூவுவது அல்லது துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபடலாம்.
போர் நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்தம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 22) முடிவுக்கு வருகிறது. இந்த சமயத்தில் ஈரானிய சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஈரான் மறுக்கக்கூடும். இது இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications