இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டிடங்கள்.. ஒருவர் உயிரிழப்பு!
ஜகர்தா: இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியிருந்தது. ரிக்டர் அளவில் 7.4 என பதிவான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
நிலநடுக்கம் காரணமாக, கடல் அலைகள் வழக்கத்தைவிட உயரமாக எழுந்தன. பொதுவாக கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும். அப்படித்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல்படி, மோலுக்கா கடலில், சுலவேசி மற்றும் மாலுகு தீவுக்கூட்டங்களுக்கு இடையே, சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோ நகரில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் என AFP செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், "நிலநடுக்கம் மனாடோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார், ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருக்கின்றனர். இறந்தவர் உடல் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
ஹவாய் தீவைச் சேர்ந்த பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) ஆரம்பத்தில், நிலநடுக்க மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியக் கடலோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரித்திருந்தது.
இந்தோனேசியாவின் BMKG புவியியல் நிறுவனம் வெளியிட்ட தரவுகள்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட அரை மணி நேரத்திற்குள், வடக்கு மினாஹாசாவில் 75 சென்டிமீட்டர் உயரத்தில் அலைகளும், சுலவேசி தீவின் வடக்கில் உள்ள பிதுங்கில் 20 சென்டிமீட்டர், வடக்கு மாலுகு மாகாணத்தில் 30 சென்டிமீட்டர் அலைகளும் பதிவாகின. எனினும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் நீங்கி விட்டது என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications