ஹார்முஸ்-ஐ விட்டுதள்ளுங்க.. 15 ஆண்டுக்கு பின் புதிய பாதை திறந்தது.. கச்சா எண்ணெய்க்கு இனி நோ ப்ராப்ளம்?
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை அமெரிக்க கடற்படையின் முடக்கத்தால் தற்போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2011க்கு பின்பு எண்ணெய் வர்த்தகத்திற்கு புதிய வழித்தடம் திறக்கப்பட்டு உள்ளது. ஈராக் - சிரியா எல்லைப்பகுதி 15 ஆண்டுகளுக்குப் பின்பு திறக்கப்பட்டதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் புதிய மாற்றம் ஏற்படும் நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் சந்தையின் மிக முக்கியமான போக்குவரத்து பாதையாக விளங்குகிறது. உலகின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20 முதல் 25 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. பெர்சிய வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் இந்த குறுகிய பாதை, மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.

தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்த நீரிணை முடக்கப்பட்டு உள்ளதால், உலகம் முழுவதும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மாற்று வழியை தேடும் நடவடிக்கையாகவே ஈராக் - சிரியா எல்லை திறக்கப்பட்டு உள்ளது.
ஈராக் - சிரியா எல்லை
கடந்த 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது மூலம் ராபியா-யருபியா (Rabia - Yarubiyah) எல்லைப்பகுதி மூடப்பட்டது. அதன் பிறகு 2014-ம் ஆண்டு ஈராக்கைச் சேர்ந்த குர்தீஷ் படைகள் இப்பகுதியை கைப்பற்றினாலும் எல்லை திறக்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில், பிராந்தியம் போதுமான பாதுகாப்புடன் நிலையாக உள்ளது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் புதிய கட்டத்தை தொடங்குவதாக இந்த நிகழ்வில் சிரியா - ஈராக் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஈராக்கின் நைன்வே (Nineveh) மாகாண கவுன்சில் உறுப்பினர் நாடியா அல்-ஜுபோரி இந்த வழித்தடம் திறப்பது மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தக பரிமாற்றத்திற்கும், எண்ணெய் போக்குவரத்திற்கும் இந்த எல்லைப்பகுதி பெரும் வாய்ப்பாக அமையும் என்று இப்பாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த நடவடிக்கை இரு நாடுகள் மத்தியிலான உறவு பல ஆண்களுக்கு பின்பு வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபியா - யருபியா வழியாக எண்ணெய் போக்குவரத்து
புதிய பாதையின் மூலம் ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு தரைவழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து மத்திய தரைக்கடல் வழியாக உலக சந்தைகளுக்கு அனுப்ப முடியும். இந்த வழி, கடல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகளை தவிர்க்க உதவும்.
ஈராக் அரசின் எண்ணெய் மார்கெட்டிங் அமைப்பான சோமோ ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் எரிஎண்ணெயை தரைவழியாக கொண்டு செல்ல ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இது தற்காலிக தீர்வாக இருந்தாலும், எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற உதவும்.

ஈராக்கின் பொருளாதார வளர்ச்சி
ஈராக்கின் வருவாயில் 90 சதவீதம் எண்ணெய் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. எனவே, இந்த எல்லை திறப்பு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், ஈராக் அரசுக்கு புதிய வருமான ஆதாரம் கிடைக்கும். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வரப்பிரசாதம்
வெளிநாட்டின் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய் பொருட்களை பெரிதும் நம்பியுள்ள இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இந்த புதிய பாதை சிறிய அளவிலான நன்மையை தரும். கடல் வழி தடைகள் காரணமாக ஏற்படும் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையை தவிர்க்க இந்த தரைவழி சிறிய அளவில் கட்டாயம் உதவும்.
சவால்
சிரியா இந்த பாதையை கடல் வழி தடைகளுக்கு பாதுகாப்பான மாற்றாக முன்னிறுத்துகிறது. கடல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இந்த வழி உதவும். இருப்பினும், எண்ணெய் வர்த்தக நிபுணர்கள் பைப்லைன் அல்லது டேங்கர் கப்பல்களை விட தரைவழி போக்குவரத்து என்பது மிகவும் திறன் குறைந்தது என எச்சரிக்கின்றனர். தரைவழி போக்குவரத்தில் அதிக நேரம், அதிக செலவு மற்றும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். ஆயினும் குறைவான அளவிலான எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும்.
எனினும், இந்த பாதை முழுமையான மாற்று அல்ல, ஒரு பேக்அப் வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஹார்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் தொடர்ந்தாலும், இந்த புதிய தரைவழி பாதை புவிசார் அரசியல் சூழலை மாற்றும் திறன் கொண்டது. எதிர்காலத்தில் இந்த வழி மேலும் விரிவுபடுத்தப்பட்டால், உலக எண்ணெய் சந்தைக்கு புதிய நிலைத்தன்மையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications