“உடனே திரும்பி போங்க..” நடுக்கடலில் இந்திய கப்பலுக்கு வந்த வார்னிங்! ஈரான் ராணுவம் அட்டூழியம்
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியக் கப்பல்கள் ஈரானியப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் இந்தியா-ஈரான் உறவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியக் கொடியுடன் சென்ற இந்த எண்ணெய்க் கப்பல் பாக்ய லக்ஷ்மி, ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது ஈரானிய புரட்சிகர காவல் படையினரால் (IRGC) தடுத்து நிறுத்தப்பட்டது. "உடனடியாகத் திரும்பிச் செல்லுங்கள்" என்ற ஈரானிய கடற்படையின் கட்டளையை ஏற்று அந்தக் கப்பல் பின்வாங்கியது.

மற்றொரு எண்ணெய் கப்பலான சன்மார் ஹெரால்டு-ன் மாலுமி விடுத்த அபயக்குரல் தற்போது வெளியாகியுள்ளது. "எங்களுக்கு அனுமதி கொடுத்தீர்கள், ஆனால் இப்போது எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். எங்களைத் திரும்பிச் செல்ல அனுமதியுங்கள்" என்று அவர் பதற்றத்துடன் பேசுவது அந்தப் பதிவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், இந்திய மாலுமிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், கப்பல்களுக்குச் சேதம் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த சம்பவம் ஈரான்- இந்தியா உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்திற்கு பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தனது கடும் கவலையைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரானிய தூதரை நேரில் அழைத்து, இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான நடைமுறைகளை உடனடியாக மீண்டும் அமல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
விஷயம் பெரியதாவதை உணர்ந்த ஈரான், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஈரானிய ஈரான் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, இந்தியாவுடனான உறவு மிகவும் வலிமையானது என்றும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தித் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஹார்முஸ் நீரிணை இப்போது தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், விதிகளை மீறும் கப்பல்கள் எதிரி நாடுகளுக்கு ஆதரவானதாகக் கருதப்பட்டுத் தாக்கப்படலாம் என்றும் ஈரானியப் படை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications