அதிகாரிகளுக்கு தெரியாமல் சிறை சாவியை எடுத்துச்சென்று சபரிவர்மனை தாக்கிய வார்டன்.. வெளியான ஷாக் தகவல்

  • கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளுக்கு தெரியாமல் சிறை சாவியை எடுத்துச் சென்ற வார்டன், சபரிவர்மன் இருந்த சிறை அறையை திறந்து அவரை தாக்கியதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக ஜூலை 9 அன்று கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவலில் இருந்த அவர், ஜூலை 13 அன்று சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    Advertisement

    சபரிவர்மனுக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சபரிவர்மனின் குடும்பத்தினர், சிறையில் காவலர்கள் தாக்கி கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    சபரிவர்மனின் கை, கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்களும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது கை, கால்களைக் கட்டிப் போட்டு கொடூரமாகத் தாக்கியதற்கான அடையாளங்களும், தலையின் பின்புறத்தில் காயங்களும் உடற்கூராய்வின் மூலம் தெரியவந்துள்ளன.

    இதனால் சந்தேக வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உடற்கூராய்வு அறிக்கையைத் தொடர்ந்து, சிறைத்துறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் நிகழ்ந்துள்ள இந்த லாக்கப் மரண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    உயிரிழந்த சபரிவர்மனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட போலீசாரை அரசு காப்பாற்ற முயற்சிப்பதாவதும் குற்றம் சாட்டி சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு வழங்கிய நிவாரணங்களை மனைவி ஏற்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளுக்கு தெரியாமல் சிறை அறை சாவியை எடுத்துச் சென்றுள்ளார் வார்டன். அவர் சபரிவர்மன் இருந்த சிறை அறையை திறந்து அவரை தாக்கியதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    சிறை காவலர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். சிறை அறை சாவியை எடுக்கும்போது பதிவேட்டில் சிறை காவலர் கையெழுத்து இடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Shocking details have emerged regarding the beating death of Sabarivarman in Nagercoil Prison. The investigation revealed that a warden took the prison key without the knowledge of officials, opened the cell where Sabarivarman was held, and assaulted him.