கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதிகள் 8 பேர் மற்றும் 3 சிறை அதிகாரிகள் என 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்தவர் சபரிவர்மன். (34) மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த 9 ஆம் தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரிவர்மன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சபரிவருமனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து உள்ளனர். கைதிகளை காவலில் எடுத்து விசாரிக்க நேசமணி நகர் போலீசார் முடிவு செய்து, காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சிறையில் கடந்த 13ஆம் தேதி கைதி சபரிவர்மன் மரணமடைந்தது தொடர்பாக கைதிகள் 8 பேர் மற்றும் 3 சிறை அதிகாரிகள் என 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.