அடுத்தடுத்து ஆடியோ.. கட்சிப் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் கைமாறும் பணம்? மதுரை தவெகவில் பரபரப்பு!

  • மதுரை: தவெகவில் கட்சி பதவிகளை பெற பணம் கேட்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் வைரலாகும் 2 ஆடியோக்கள் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான முஸ்தபா பெயரும் அடிபடுவதால் கட்சிக்குள் சலசலப்பு நிலவுகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்கு பல லட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள 2 ஆடியோக்கள், மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஆடியோக்களில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவின் பெயர் அடிபடுவதால் சலசலப்பு நிலவுகிறது.

    Advertisement

    புதிதாக மதுரை மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெகவில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்கு பணம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

    மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் உதவியாளர் கனி என்பவர் கட்சிப் பதவி தொடர்பாக ரூ.15 லட்சம் கேட்பதாக கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்று பதவிக்கு பணம் கேட்பதாக இரண்டாவது ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ஆடியோவில் பேசும் நபர், "நான் மதுரையைச் சேர்ந்த ஜோயல். கட்சிக்குள் பகிர்ந்துகொண்ட பதிவு பொதுவெளிக்கு வந்துவிட்டது. மதுரையில் பணத்தை மையமாகக் கொண்டு அரசியல் நடைபெறுகிறது. கட்சிப் பதவிக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது. பணம் கொடுத்துத்தான் பதவி பெற்றதாகக் கூறப்படும் நிலை வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு தொடர்பு உள்ளது.

    Advertisement

    பதவிகளுக்குப் பணம் தொடர்பான பேச்சுகள் எழுந்தபோதே, அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். பணம் குறித்துப் பேச வேண்டாம் எனக் கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கலாம். இந்த விவகாரத்தால் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு எம்.எல்.ஏ முஸ்தபாவே காரணம். பணம் கட்டுக்கட்டாகக் கைமாறியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

    இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் 100 ஆடியோக்கள் மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளரிடம் வழங்கவும், மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறேன். ஊழலை ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியிருக்கும் நிலையில், கட்சிக்குள் இத்தகைய பணப்பரிமாற்றப் புகார்கள் எழுவது ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ பதிவுகள், தவெக கட்சிக்குள் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகார்கள் குறித்து கட்சித் தலைமை விசாரணை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English Summary

    Audio clips circulating on social media, which suggest that money is being demanded in exchange for party positions within the TVK, have caused a major stir in Madurai politics. The mention of TVK MLA and district secretary Mustafa in these clips has created a ripple of unrest within the party.