எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை
யாழ்பாணம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களை, சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல், கைது நடவடிக்கை மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

வங்காள விரிகுடாவின் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட கூடிய புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், தென் பகுதிக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கஜா புயலின் போது மீன்பிடி தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது.
பின்னர் வந்த மீன்பிடி தடைகாலத்தால் மீனவர் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு கடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்காக சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்களை, இலங்கை படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்கள் வந்த நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்சேன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், எல்லை தாண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும், வரும் 26-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications