கொடைக்கானலில் சட்டென.. ஸ்டாலினை சந்தித்த செல்வப்பெருந்தகை.. பாஸ் செய்த முக்கிய மெசேஜ்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அரசியல் களம் தற்போது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் ஓய்வெடுத்து வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்தது, தேர்தல் பிந்தைய அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Selvaperunthagai

மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது ரகசிய விசாரணையா?

வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், கொடைக்கானலில் தங்கியிருந்த முதல்வரை செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்துப் பேசினார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, "நானும் கொடைக்கானலில் தான் இருந்தேன். முதல்வர் இங்கே வந்திருப்பதை அறிந்தவுடன், மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து நலம் விசாரித்தேன்," என்று மேலோட்டமாகக் கூறி முடித்துக்கொண்டார். ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிலவரம் குறித்து பல அதிரடியான புகார்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் கசிகின்றன.

கூட்டணிக் கட்சிகள் மீது செல்வப்பெருந்தகை அதிருப்தி

இந்தச் சந்திப்பின் போது, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வரிடம் தனது குமுறல்களைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்ட அவருக்கு, திமுக முழு ஒத்துழைப்பு அளித்தாலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் (விசிக) மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் புகார் வாசித்துள்ளார்.

குறிப்பாக விசிக மீது அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஸ்ரீபெரும்புதூரில் பெறும் ஒவ்வொரு ஓட்டும் திமுக-வின் ஓட்டுக்களே. விசிக மற்றும் தேமுதிக தொண்டர்கள் எனக்கு எதிராகக் கைகோர்த்து வேலை பார்த்துள்ளனர். திருமாவளவன் மட்டும் முறையாக உத்தரவிட்டிருந்தால், விசிகவினர் தீவிரமாகப் பணியாற்றியிருப்பார்கள். ஆனால், நான் வெற்றி பெறுவதில் அவருக்கு விருப்பம் இல்லையோ என்று தோன்றுகிறது," என்று வேதனையுடன் முதல்வரிடம் முறையிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகையின் இந்தப் புகார்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளார். "நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் நான் விசாரித்துவிட்டேன். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நம்பிக்கையுடன் இருங்கள்," என்று கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார்.

நிதி விவகாரம்: திமுக தரப்பில் கிளம்பும் குற்றச்சாட்டு

செல்வப்பெருந்தகை தரப்பில் புகார்கள் ஒருபுறம் இருக்க, திமுக தரப்பில் மற்றொரு பரபரப்பான தகவல் உலா வருகிறது. சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக, குறிப்பாக வாக்காளர்களுக்குக் கொண்டு சேர்க்க திமுக தரப்பிலிருந்து ஒரு பெரும் தொகை செல்வப்பெருந்தகையிடம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தொகை முழுமையாகத் தொகுதிக்குள் செலவு செய்யப்படாமல் பதுக்கிக் கொள்ளப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினர் தலைமைக்குப் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிதி கையாடல் புகார் மற்றும் தேர்தல் பணி குறித்த உண்மையான கள நிலவரத்தை விசாரிக்கவே, முதல்வர் ஸ்டாலின் அவரை கொடைக்கானலுக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த கொடைக்கானல் சந்திப்பு கூட்டணிக்குள் இருக்கும் விரிசல்களையும், உள்ளடி வேலைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, இந்தச் சந்திப்பு குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாகவே இருக்கும்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+