பிளானோடு சாத்தூருக்கு போன நயினார் நாகேந்திரன் வெற்றிக்கு ‘உலை’ வைத்த சசிகலா.. நடந்தது இதுதான்!
விருதுநகர்: நெல்லை சட்டசபை தொகுதியில் இருந்து, விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதிக்கு மாறி போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சசிகலா நிறுத்திய வேட்பாளரால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். நயினார் நாகேந்திரன் வெற்றிக்கு இசக்கிராஜா 'உலை'வைத்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன நயினார் நாகேந்திரன், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தென் மாவட்டங்களில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இந்த முறை, சாத்துார் தொகுதியை தேர்வு செய்தார். திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஒரு முறை வெற்றி பெற்றால் அடுத்த முறை தோல்வியை சந்திப்பார் என்பதாலேயே இந்த முறை வெற்றிபெறும் நோக்கில் சாத்தூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டது.
சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை என பலரும் பிரச்சாரம் செய்தனர். இருப்பினும், திமுக வேட்பாளர் கடற்கரை ராஜிடம் தோற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.
வாக்கு எண்ணிக்கையின்போது இடைப்பட்ட சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும், 18வது சுற்றுகளுக்கு பின், தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் இறுதியில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் 59,127 வாக்குகள், நயினார் நாகேந்திரன் 53,189 வாக்குகள், தவெக வேட்பாளர் அஜித்குமார் 50,499 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இவரது தோல்விக்கு முக்கிய காரணம், சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா, 11,371 வாக்குளை பெற்றது தான் என்பது தேர்தல் முடிவுகளில் தெளிவாகியுள்ளது.
சாத்தூர் தொகுதியில் அதிகம் வசிக்கும் தேவர் சமுதாய வாக்குகளை அள்ளும் நோக்கில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனின் எண்ணத்தை உடைக்கும் வகையில், சசிகலா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இசக்கிராஜாவை களத்தில் இறக்கினார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், நயினார் நாகேந்திரனுக்கு விழ வாய்ப்பிருந்த வாக்குகளை பெருவாரியாகப் பிரித்தார் இசக்கிராஜா. இறுதியில் 5 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார் நயினார் நாகேந்திரன். கடந்த தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களை பெற்றிருந்த பாஜக இந்த முறை ஒரே ஒரு இடத்தில் தான் வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications