மே 4ம் தேதி ரிசல்ட்.. ஸ்டாலின், எடப்பாடி, விஜய் கவனம் எல்லாம் இந்த பழங்கள் மீதுதான்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 4-ஆம் தேதி என்பது ஒரு சாதாரண நாள் அல்ல; அது அடுத்த ஐந்து ஆண்டுகால தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் நாள். 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் 'யார் அந்த வெற்றியாளர்?' என்ற ஒற்றைக் கேள்விதான் எதிரொலிக்கிறது.
இந்தத் தேர்தல் வழக்கமான இருமுனைப் போட்டி என்பதைக் கடந்து, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது. குறிப்பாகத் திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் புதிய சக்திகளின் வருகை, களத்தை இன்னும் சுவாரசியமாக்கியுள்ளது. இந்த அதீத பதற்றமான சூழலில், அரசியல் தலைவர்களின் மனநிலை, அவர்களின் வியூகம் மற்றும் தேர்தல் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு எந்தப் பழங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. மு.க. ஸ்டாலின்: ஆப்பிள்
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மிகவும் நிதானமாகத் தெரிகிறார். ஆப்பிள் பழம் எப்படிச் சீரான ஆரோக்கியத்தையும், 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரைத் தூர வைக்கும்' என்ற நம்பிக்கையையும் தருகிறதோ, அதுபோலவே தனது கடந்த கால நலத்திட்டங்கள் தன்னை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என அவர் நம்புகிறார்.
ஆப்பிளின் சிவப்பு நிறம் அதிகாரத்தைக் குறிக்கிறது. தேர்தல் களத்தில் பல விமர்சனங்கள் எழுந்தாலும், 'ஆட்சி எதிர்ப்பு அலையை' தனது மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவசப் பேருந்து பயணம் மூலம் முறியடித்துள்ளதாக அவர் கருதுகிறார். மே 4 அன்று அவருக்குக் கிடைக்கப்போகும் முடிவுகள் இனிப்பான ஆப்பிளா அல்லது புளிப்பானதா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில்தான் தெரியும்.
2. எடப்பாடி பழனிசாமி: மாம்பழம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாம்பழமே மிகச் சரியான தேர்வு. மாம்பழம் 'கனிகளின் ராஜா' என்று அழைக்கப்படுவது போல, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு ராஜாவாக வலம் வர அவர் துடிக்கிறார். குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் தமக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கையாண்ட 'மண்ணின் மைந்தன்' என்ற அஸ்திரம் எவ்வளவு தூரம் வேலை செய்துள்ளது என்பது மே 4-ல் தெரிந்துவிடும். பாமகவின் மாம்பழம் சின்னம் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வாக்குகளாக மாறினால் மட்டுமே ஆட்சி கட்டில் அருகே போக முடியும் என்பதால் அவரது நினைப்பு இப்போது மாம்பழம் மீதுதான் இருக்கும். மாம்பழம் பழுப்பதற்கு ஒரு காலம் தேவைப்படுவது போல, கடந்த ஐந்து ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, இந்தத் தேர்தல் அவருக்கு ஒரு வெற்றிக் கனியாக அமையுமா என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
3. விஜய்: தர்பூசணி
தமிழக அரசியலில் 'பாக்ஸ் ஆபீஸ்' நாயகனாகத் தடம் பதித்துள்ள விஜய், இந்தத் தேர்தலில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தர்பூசணி பழம் வெளியே பச்சை நிறமாகவும் (அமைதி/சமநிலை), உள்ளே அடர் சிவப்பு நிறமாகவும் (புரட்சி/மாற்றம்) இருப்பதைப் போலவே, விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருக்கின்றன.
அமைதியாகத் தொடங்கி, மாநாட்டின் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்திய விஜய்க்கு, இளைஞர்களின் வாக்குகள் ஒரு தாகம் தீர்க்கும் தர்பூசணியாக அமையலாம். அமைதியாகவே இருந்து கொண்டு, இப்போ அனைத்து கட்சிகளையும் மண்டை காய வைத்திருப்பதால், விஜய்க்கு பிடித்த பழம் தர்ப்பூசணியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த பழம் ஒரு மாற்றுச் சுவையை விஜய் தருவாரா என்பது மே 4-ன் மில்லியன் டாலர் கேள்வி.
4. சீமான்: பலாப்பழம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எப்போதும் தனித்துவமான பாதையில் பயணிப்பவர். பலாப்பழத்தின் வெளிப்பகுதி முட்கள் நிறைந்து கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளே இருக்கும் சுளைகள் மிகவும் இனிப்பானவை. சீமானின் பேச்சுகளும், விமர்சனங்களும் கரடுமுரடாக இருந்தாலும், அவரது கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இருக்கிறது.
இந்தத் தேர்தலில் அவரது வாக்கு சதவீதம் அதிகரிக்குமா அல்லது முட்கள் அவரைப் பாதிக்குமா என்பதுதான் விவாதம். பலாப்பழத்தை அறுப்பதற்குக் கடினமான உழைப்பு தேவைப்படுவதைப் போல, சீமான் தனது இலக்கை அடைய இன்னும் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
5. இதர தலைவர்கள் மற்றும் தேர்தல் களம்
இவர்களுடன் களம் காணும், அவர்கள் சார்ந்த அரசியல் போக்கிற்கு ஏற்ப திராட்சை, எலுமிச்சை எனப் பல பழங்களை ஒப்பிடலாம். திராட்சை கொத்துக் கொத்தாக இருப்பதைப் போல, சிறு கட்சிகளின் ஆதரவு யாருக்குக் கிடைக்கப்போகிறது என்பதும் முக்கியம்.
மே 4 காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கும்போது தலைவர்களின் இதயத்துடிப்பு ஒரு 'ஜூஸர்' இயந்திரத்திற்குள் இருக்கும் பழத்தைப் போல வேகமாக இருக்கும். மதியத்திற்கு மேல் வெற்றிச் செய்திகள் வரத் தொடங்கும்போது, ஒரு தரப்பினர் வெற்றிக் கனியைச் சுவைப்பார்கள், மற்றொரு தரப்பினர் அடுத்த தேர்தலுக்காகத் தங்களைத் தயார் செய்வார்கள்.
ஆனால் இந்த தேர்தலின் கதாநாயகர்களான மக்களை விட்டுவிடமுடியுமா. இந்தத் தேர்தல் முடிவு என்பது வெறும் எண்கள் அல்ல; அது தமிழக மக்களின் மனநிலை. மக்கள் யாருக்கு 'பழம்' விடப்போகிறார்கள், யாருக்கு 'காய்' விடப்போகிறார்கள் என்பது மே 4ம் தேதி, தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications