தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே இன்று அதிகாலையில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாயை வெட்டிக் கொன்றுவிட்டு, இரு சிறுமிகளை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் போலீசார், இரு குழந்தைகள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர் என தேடி வந்த நிலையில், இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவத்திற்குப் பிறகு அந்தச் சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனரா? கொலையில் ஈடுபட்டது தனி நபரா? கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே முதலூர் கிராமத்தில் முத்துக்கிருஷ்ணன் - மேரி விஜிலா தம்பதியர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் இவர்களின் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். மேரி விஜிலாவை அரிவாளால் வெட்டியதில் அவர் பலியானார். முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனும் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இரு சிறுமிகளை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் போலீசார், பலியான மேரி விஜிலாவின் உடலை மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 15 வயதான இரு சிறுமிகள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர் என தேடி வந்த நிலையில், இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருட்டு அறையில் இருந்து இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தனி நபரா? கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.