மார்கழி பூஜை : திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பாவை பாடல் - 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Thirupavai and Thiruvembavai

பொருள்:

மார்கழி மாதத்தில் பெண்கள் நீராடுவதற்கு நீர் தேவை. எனவே மழை பொழிய வேண்டுகிறார்கள். அதிலும் கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம் என்கின்றனர்.

திருவெம்பாவை - பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம்,
உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள்.

எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின்
மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது.

இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

திருப்பாவை பாடல் - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்:

கண்ணனை மனதில் நினைத்தாலே துயரங்கள் எல்லாம் தூசாகப் போய்விடுமாம். அதுவும் இறைவனான கண்ணன் மதுராபுரியில் அவதரித்தவன். தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன். ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன். குழந்தை பருவத்தில் கண்ணனின் சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் இடுப்பில் தழும்பை உடையவன். அத்தகைய பெருமை உடைய எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படவேண்டும் என்கின்றனர்.

திருவெம்பாவை பாடல் - 5

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

பொருள் :

நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...

இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+