பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 22, 2001
7.
குழிலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது: குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது.
உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும். குழல் பாடும்.
இது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அதுகுழலின்
தொளையில் கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே
இசை யுண்டாக்குதல் - சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன.
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார்
சுருதி சேர்த்துவிட்டது,? சக்தி.
ஜரிகை வேணும்: ஜரிகை! என் றொருவன் கத்திக் கொண்டு
போகிறான்: அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைக்காரன் உயிரினும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன்
தோற்றம் பல. சக்தி ஒன்று.
அஃது வாழ்க.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
