• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கதாநாயகர்களின் பொறுப்பின்மை: இயக்குநர் சீமான்

By Staff
|

சிவகங்கை மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தி-ருந்து திரைத்துறைக்கு வந்த இளைஞர் சீமான்.நல்ல சிந்தனையாளர். திரைப்பட இயக்குநர் என்பதைவிட பகுத்தறிவுச் சிந்தனையாளர், நல்ல தமிழ் உணர்வாளர் என்று இவரைஅடையாளப்படுத்துவதே மிகச் சரியானதாக இருக்கும்.

Seemanதிரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல், திரைப்படங்களில் காட்டப்படும் கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தபோராடுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டசெயல்திட்டக் குழு உறுப்பிரனராக நியமிக்கப்பட்டுள்ள இவரை சந்தித்து உரையாடியதன் தொகுப்பு இதோ...

"என்னுடைய கால்ச்சட்டைப் பருவத்தி-லிருந்தே எங்கள் கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்துக்கள், நாடகங்களைப் பார்த்து அதைப்போலவே திரும்பச் செய்து காட்டி பாராட்டுக்கள் பெறுவேன். வயது ஏற ஏற இந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படம்மீது திரும்பியது.

திரைப்படத் துறையில் நுழைந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வோடு சென்னைக்கு வந்தேன். வந்தவுடன் சினிமாவைவென்றெடுத்து விடலாம் என நம்பி வந்தேன். வந்த பிறகுதான் அது அவ்வளவு எளிதல்ல என்பது புரியத் தொடங்கியது.

பல்வேறு கஷ்ட நஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு திரைப்படத் துறையில் நுழையும் முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். அதன் பின்னர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்து பல படங்களில் பணியாற்றினேன்.

நடிகர் பிரபு, மதுபாலா நடிப்பில் பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தை இயக்கினேன். அதுதான் எனது முதல் படம். அப்படத்தின்மூலம் திரையுலகில் எனக்கு வெற்றியும் கிட்டியது. தொடர்ந்து இனியவளே, வீரநடை போன்ற படங்களையும் இயக்கினேன்.

தற்போது நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்க மார்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தம்பி என்ற படத்தைஇயக்கவிருக்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று சொன்ன சீமானிடம் இன்றைய தமிழ்த்திரையுலகின்போக்கு எப்படியிருக்கிறது? என்ற கேள்வியை முன் வைத்த போது...

"பழையன கழிதலும் புதியன புகுதலும் எல்லாத் துறையிலும் உண்டு. ஆனால், தமிழ்த் திரையுலகைப் பொருத்தவரைபழையனவற்றை கழிய விடாமல் இருந்திருக்கலாமோ? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இன்றைக்கு திரைக்கு வரும் ஒரு சில படங்களைப் பார்க்கும் போது அவற்றின் பெயரில் உள்ள ஆங்கிலத் தலைப்பு தொடங்கிபடத்திலுள்ள ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள், அருவருக்கத்தக்க பாடல் காட்சிகள், கொச்சையானபாடல் வரிகள் என்று எல்லாமே வருத்தமளிக்கத்தான் செய்கிறது. உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்றபடைப்புகள் போல மறுபடியும் படைக்க முடியுமா? என்ற ஏக்கமும் கூடவே வருகிறது.

தமிழ்த்திரையுலகில் ஏன் இந்த மாற்றம் என்று சிந்திக்கிற பொழுது... மக்களுடைய அறியாமையும், ரசனைக் குறைவும் அதைப்பயன்படுத்திக் கொள்ளும் சமூகப் பொறுப்பற்ற படைப்பாளிகளின் ஏமாற்றுத்தனமும் இதற்கு ஒரு காரணம் என்றே படுகிறது.

"அது போன்ற படங்களை மக்கள் விரும்பிப் பார்ப்பதால்தானே கூட்டம் கூடுகிறது. அதனால்தான் நாங்கள் அப்படிப்பட்ட படம்எடுக்கிறோம்" என்று மக்களின் மீதே குற்றம் சுமத்தும் படைப்பாளிகள்தான் இன்று அதிகம். மக்களுக்கும் உண்மையானபடைப்பாளிகளுக்கும் இடையில் உள்ள ஒரு சில தரகர்கள் மக்களைப் பற்றி தவறாகக் கணித்து, அந்த கணிப்பை படைப்பின்தரமாக முன்னிறுத்திப் பேசுகிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ரசனைக் குறைவும் இதற்கு ஒரு காரணம். பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளைமையப்படுத்திதான் இன்றைய தமிழ் சினிமா வாழ்கிறது. அந்த மாணவ சமுதாயத்திடமிருந்து தரமில்லாத படங்களுக்கு எதிர்ப்புவராததும் பார்க்கக் கூசும் படங்கள் தொடர்ந்து வெளிவர ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

இன்றைய கதாநாயகர்களின் பொறுப்பின்மையும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வெளிவர வழி வகுக்கிறது. திரைப்படத்தில்குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதால் அந்தப் படங்களின் பிரதிப-லிப்பு எப்படி இருக்கும் என்பதை அறியத்தவறிவிடுகிறார்கள்.

எப்படி வேண்டுமானாலும் நடித்து தங்கள் ரசிகர்களை கீழ்த்தரமான ரசனைக்குத் தள்ளி விடுகிறார்கள். கதாநாயகர்கள் ரவுடிவேடம் ஏற்பதால் ரவுடியிசம் தவறில்லை அல்லது அதுதான் ஹீரோயிசம் என்று ரசிகர்களை நினைக்க வைக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட மனித வக்கிரங்களையும், ரசனைக் குறைவையும் தூண்டிவிட்டு படம் எடுத்தால் படம் நன்றாகஒடும் என்ற தவறான எண்ணத்தை பரப்பி படம் எடுக்கிறார்கள். ஒரு வகையில் இது திரைப்பட ரசிகர்களை கேவலப்படுத்தும்முயற்சி என்பதை நீண்ட நாட்களுக்கு அவர்களிடமிருந்து மூடி மறைத்துவிட முடியாது.

Seemanதிரை உலகில் நியாயக் குமுறல்கள் உள்ள நபர்கள் மிகக் குறைவுதான். எனக்கென்ன? என்கிற உணர்வும், சென்டிமென்ட்சாக்கடையில் வீழ்வதும், மூடநம்பிக்கையும்தான் இங்கு அதிகம். பகுத்தறிவு விசயங்களில் இவர்களை வென்றெடுக்க மிகப்பெரிய போராட்டம் தேவை.

திரைப்படத்தை வளமாக மாற்றுவது எளிதான செயல்தான். மூடநம்பிக்கையில் இருந்து மீட்பதுதான் கடினம். திரையுலகில்இருக்கும் குற்றம் குறைகளை அதனுள்ளேயே உழலும் ஒருவனால்தான் சரியாகப் புரிந்து கொண்டு சொல்ல முடியும்.

அதனால்தான் நான் மக்களிடம் நேரடியாக என் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறேன்" என்று சொன்ன போது உண்மையிலேயேஒரு எரிமலையின் குமுறலை சீமானிடம் காண முடிந்தது.

இவரது குமுறலும், குரலும் திரையுலகில் பல்கிப் பெருகினால் தமிழ் திரையுலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு வகையானஅழிவுகளி-ருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் என்பதில் சந்தேகம் உண்டோ?

- மன்னை பாஸ்கர்

இவரது முந்தைய படைப்புகள்:

1. அஞ்சு நிமிஷம்

2. குழப்பம்

3. இன்டர்வியூ

4. சாலமன் பாப்பையாவுடன் ஒரு சந்திப்பு

5. தமிழ்க் கவிஞர்கள் தகுதியற்றவர்களா

6. இயக்குநர் சேரனுடன் ஒரு சந்திப்பு

7. இறைபொற்கொடியுடன் ஒரு சந்திப்பு

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more